Tuesday, April 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-6

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-6

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

கண்டோர் கூற்று

—-

இயற்றியவர்: பெரும்பதுமனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 7

திணை: பாலை

——

வில்லோன் காலன கழலே தொடியோள்

மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்

யார்கொ லளியர் தாமே யாரியர்

கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி

வாகை வெண்ணெற் றொலிக்கும்

வேய்பயி லழுவ முன்னியோரே

—————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

——

ஆரியக்கூத்தர் கழையிற்கட்டிய கயிற்றின்மேல் நின்று ஆடும்பொழுது கொட்டப்படும் பறையைப்போல, மேல்காற்றானது தாக்குதலால் நிலைகலங்கி, வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகள் ஒலித்தற்கு இடமாகிய, மூங்கில் செறிந்த பாலைநிலப்பரப்பில் கடந்து செல்ல நினைந்து வருபவர்களுள் வில்லினையுடையவனாகிய இவ்வாடவனது காலில் உள்ள வீரக்கழல்கள், தோள்வளையை அணிந்த இம்மகளினுடைய மெல்லிய அடியின் மேலுள்ளனவும் சிலம்புகள்; இந்நல்லோர் யாவரோ, இவர் அளிக்கத்தக்கார்!

——-

வாசிப்பு

—-

ஆபரணங்களின் குறியியல் ( The Semiotics of Adornment)

வில்லோனின் வீரக்கழல்களின் மேலும், மெல்லிய அடிகளையுடையவளின் கால்களில் இருக்கும் சிலம்பின் மேலும் கவிதை ஆரம்ப வரிகளில் நமது கவனத்தைக் குவிக்கிறது; இவ்வாபரணங்கள் உருவகங்களல்ல மாறாக ஆகுபெயர்களாகப் பயன்படுத்தப்படும் இணைச்சொற்கள் (metonyms). கத்திரிக்காயை விற்பதற்காக அதைக் கூடையில் சுமந்து செல்லும் ஒருவரை, ‘ஏ கத்திரிக்காய்’ என நாம் அழைப்பது போல. அவர்கள் இந்த ஆபரணங்களை என்றும் எப்போதும் அணிந்திருப்பவர்களல்ல; இப்போது இந்த நேரத்தில் அணிந்திருப்பவர்கள் ஆகையால் அவர்களுடைய சமூக நிலை என்ன என்பதைத் தெரிவிப்பவர்கள்.  இந்த ஆபரணங்களுக்கு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. மெல்லடியாளுடைய சிலம்பைப் பற்றி விளக்கம்  எழுதும் உ.வே.சா. 

அச்சிலம்பு தலைவனும் தலைவிக்குமிடையில் இன்னும் மணமாகவில்லை என்பதைப் புலப்படுத்துவதாகக் கூறுகிறார். மணம் புரிவதற்கு முன்பு, மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது ‘சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; “நும்மனைச் சிலம்பௌ கழீஇ யயரினும், எம்மமனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லினெவனோ… பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே” என்ற ஐங்குறுனூறு பாடல் 311 - குறிப்பினால் சிலம்பு கழி நோன்பு இருந்ததது நிறுவப்படுகிறது. கவிதையில் இந்த நோன்பு கழிக்கப்படாத சிலம்புகளை அணிந்த தலைவி, எனவே மணமாகாதவள் ( உ.வே.சா. ‘தலைவனால் இன்னும் வரைந்து கொள்ளப்படாதவள்’ என்று எழுதுகிறார்.) வீரக் கழல்கள் அணிந்த வில்லோனோடு இந்தப் பாலையில் மெல்லடிகள் வைத்து எங்கே போய்க்கொண்டிருக்கிறாள்? 


கண்டோர் உடனடியாக அவர்கள் இருவரும் உடன்போக்கில் இருக்கும் (elopement) ஜோடி என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்; நமக்கும் சொல்கிறார்கள்.

——

இயற்கை எனும் நிகழ்த்துனர்

—-

உடன்போகிக்கொண்டிருக்கும் தலைவனையும் தலைவியையும் சுற்றி  இயற்கை தன் பெருநிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது;  கொடும் பாலை நீண்டிருக்கிறது, (திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில்   இதை காட்டு நிலத்தின் பரப்பு என்கிறார்),  மேல் காற்றானாது ஆரியக்கூத்தரின் கழைக்கூத்தில் ஒலிக்கும் பறைப்போல ஒலித்து வாகை மரத்தினது நெற்றுக்கள் ஒலிக்கும் இடத்தில் நிலைகுலையச் செய்கிறது, மூங்கில் செறிந்த பாலைப் பரப்பு முன்னால் நீண்டிருக்கிறது. உடன்போகியரின் ஆபாரண விபரங்களுக்கு எதிராகக் கவிதை இந்த இயற்கைக் காட்சிகளை முன்னிறுத்துகிறது. வீரக்கழல்கள் அணிந்த தலைவன் இயற்கை அளிக்கவிருக்கிற எண்ணிலா சிரமங்களை வென்றுவிடுவான் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

————

மெல்லடி எனும் இரக்கக்குறிப்பு

—-

‘தொடியோள் மெல் அடி மேலவும் சிலம்பு’ என்ற வரியிலுள்ள ‘மெல்லடி’ என்னும் இரக்கக்குறிப்பு, கவிதையின் பேசுகுரலான ‘கண்டோர்’ உடன்போகியரின் மேல் பரிவுணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது. ‘முன்னியோரே’ என்ற சொல்லுக்கு பொ. வே. சோமசுந்தரனார், ‘செல்லக் கருதிச் செல்லா நிற்போர்’ என உரை எழுதுகிறார். திட்டமிட்டு செல்லும் ஒரு பாதையில் அவர்கள் செல்லாமல் நிற்பது அவர்கள் தடுமாறி நிற்பதை உணர்த்தி வாசகராகிய நம்மிடமும் அதே இரக்க உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. 

—-

அறியப்படாத பாதை

———

‘இந்நல்லோர் யாவரோ’ ( யாரிவர் என்ற மூன்றாவது வரி) எனும் இறுதிக்கேள்வி உடன்போகும் காதலரின் வாழ்வு சிறப்பானதாகத்தான் இருக்கும் என்ற முடிவினை தருவதில்லை; அவர்கள் யாரெனத் தெரியாது என்பது போலவே அவர்கள் பாதை இனி என்னவாக இருக்கும் என்பதும் தெரியாததாய் இருக்கிறது. ஒரு முடிவினை (closure) இந்தக் கவிதை நல்காமல் இருப்பதால் நம் மனதில் தயங்கி நிற்கும் கேள்வியாய் கவிதை விடைபெறுகிறது.  


No comments: