Sunday, April 14, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-4

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-4

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தும்பியிடம் கூறியது

—-

இயற்றியவர்: இறையனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 2

திணை: குறிஞ்சி 

——

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற்று அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே.

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பொருள்:

பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!

——

வாசிப்பு:

——

அழகிய சிறகும் அகச்சிறையும்

———

‘திருவிளையாடல்’ திரைப்படத்தினால் மிகவும் பிரசித்தி பெற்று தேய்வழக்காகிவிட்ட இக்கவிதையின் நுட்பங்கள் நம்மால் உள்வாங்கப்படமாலிருக்கின்றன. ‘அஞ்சிறை’ என்ற சொல்லுக்கு பொ. வே. சோமசுந்தரனார் ‘அழகிய சிறகு’ என்றும் இரா. இராகவையங்கார் ‘அகச்சிறை’ என்றும் , உ. வே. சாமிநாதையர் உள்ளிடத்து சிறை, அழகிய சிறையுமாம் எனவும் பொருளுரைக்கின்றனர். புணர்ச்சியின் அனுபவம் ஒன்று அகச்சிறையாக அதன் வெளிப்புறத் தோற்றமே, அதன் துருத்திய முன்னிறுத்தமே தும்பியின் அழகிய சிறகாகிறது. தும்பி உணர்வுகளின் தூய அமிழ்தலுக்கு உருவகமாக, அது உலகைக் கடந்து செல்லக்கூடிய உயிரி அல்லாமல், அது அமிழ்தலை அறிதலாக்கியதாக இயற்கையாக, இயற்கையின் ஒரு துணுக்காக நமக்குச் சொல்லப்படுகிறது. இவ்வுலகில் உணர்வுகளின் வளமைகளில் அமிழ்தல் அமிர்தமாக, அதை விடச் சிறந்த நறுமணம் ஏதுமுண்டோ எனக் கேட்பதன் மூலம்  இவ்வுலக உணர்வுகளின் வாழ்வு இறுதி அறிவாக இக்கவிதையில் கொண்டாடப்படுகிறது. அது சிறைதான், சிறகும்தான், சிக்கிகொண்டதும்தான், ஆனந்தமும்தான்.


ஆசையின் நிறைவு எனும் அபூர்வம்

——-

ஆசை, எப்போதுமே தள்ளிப்போடப்படுவது, இடமாற்றம் செய்யப்படுவது, திசை திருப்பப்படுவது, என்றுமே திருப்தியுறாதது. இக்கவிதையிலோ ஆசை அபூர்வமாய் திருப்தியடைந்து அந்த அதீதத் திகைப்பின் திளைப்பில் களிமுற்றி பேசும் குரலைக் கேட்கிறோம். அந்தக் குரல், தலைவியின் நறுமணத்தை, மயில் போன்ற மென்மையை, செறிவான பற்களை (காமப் பற்கடிப்புகளுக்கான பதிலீடு) உணர்வுகளின் பேரானந்தமாக அடுக்குகிறது. இதில் ஒப்பீட்டில் கணக்கிட  முடிந்ததாய் மணமும், மென்மையும் இருக்க, கணக்கிட முடியாததாய் கெழீஇய நட்பு, ஏழு பிறப்பிலும் தலைவியின் நட்பும் இருக்கிறது.


புற உலக உறுதியளிப்பும் அதற்கான ஏக்கமும்

——

தொல்காப்பியத்துக் களவியல்  சூத்திரமான

“ வண்டே, இழையே வள்ளி பூவே

கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று

அன்னவை பிறவும், ஆங்கு அவண் நிகழ

நின்றவை களையும்கருவி என்ப”  என்பதற்கு நச்சினார்க்கினியர்

 இக் கவிதையை எடுத்துக்காட்டி, “இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல், காமம் செப்பாது என்றது எந்நிலத்து வண்டாகலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது”  என்று உரை  எழுதுகிறார். 


 அதாவது காதலில், களவியலில் ஏற்படும் சந்தேகங்களுக்கு நிவர்த்தி அளிப்பதில் வண்டும் ஒன்று என்பது தொல்காப்பிய சூத்திரம்.  என்னதான் அகம் நிறையும் அனுபவம் நிகழ்ந்தாலும் அதன் உண்மையை உறுதிப்படுத்த ஒரு புற உலகக் கருவித் தேவைப்படுகிறது. அது ஒரு rhetorical device ஆக இருந்தால் கூட, மொழியாலானதாக இருந்தால் கூட போதும்தான். இதுவே இக்கவிதையின் மையக்கருத்துமாகும்.

இதை தன் விளக்கவுரையில் சுட்டிக் காட்டும் உ.வே.சா. இதற்கு ‘இயற்கைப் புணர்ச்சியின் கண் அன்பு தோற்ற நலம் பாராட்டியது’ என்று தலைப்பிடுகிறார். 


அது எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது. இதை நான் இவ்வுலக இயற்கையை அத்தனை உணர்வுகளின் அமிழ்தலோடு அறிதல் ஒரு நிறைவான சம்போகத்தின் வழிதான் என அறிகிறேன், மகிழ்கிறேன். 



No comments: