குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-8
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைமகனுக்குத் தோழி வாயில் மறித்துக் கூறியது
—-
இயற்றியவர்: கயமனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 9
திணை: நெய்தலுள் மருதம்
——
யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பிற் றமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு நாணிக் கரப்பா டும்மே.
——-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
இயல்பாகவே மாந்தளிர் நிறத்தையுடைய தலைவி இப்பொழுது மாட்சிமைப்பட்ட செப்பினுள், இட்டு அடைப்பத் தனித்தனவாகி வைகிய, சூடப்படாத பூக்களைப் போல உடல் மெலிந்தாள். பசுமையாகிய இலைக்கு மேலே உயர்ந்து தோன்றும் திரட்சியையுடைய காம்பினையுடைய நெய்தற்பூவானது, கூட்டமாகிய மீன்களையுடைய கரிய கழியின் கண் வெள்ளம் அதிகரிக்கும் தோறும், ஆழமான குளத்தில் முழுகும் மகளிரது கண்ணை ஒத்தற்கு இடமாகிய, தண்ணிய துறையுடைய தலைவனது கொடுமையை நம் முன்னே சொல்லுதற்கு நாணமுற்று, மறைத்தலையுடைய சொற்களைச் சொல்லுகின்றாள்; ஆதலின் கற்புக்கடம் பூண்டவளானாள்.
————
வாசிப்பு
———
இரு எதிரெதிர் படிமங்கள்; வாடிய பூ போன்ற தலைவியும், நெய்தற் பூ போன்ற கண்களையுடைய பெண்களும்
—————
‘மா அயோள்’, மாயோள், மாமை நிறத்தவளாகிய (மாமை நிறமென்பது மாந்தளிர் போன்ற அழகிய நிறம், அது இலாவணியம் எனப்படும். தமிய வைகிய பூ, பெய்யாப் பூவென்க- உ.வே.சா. உரை-) தலைவி செப்பிலிடப்பட்ட சூடப்படாத மலர்களைப் போல உடல் மெலிந்திருக்கிறாள் என்பது இந்தக் கவிதையில் ஒரு படிமம் எனில் அதற்கு நேரெதிராக நெய்தற் பூக்களைப் போன்ற கண்களைக் கொண்ட பெண்கள் என்பதில் வரும் ‘பசுமையாகிய இலைக்கு மேலே உயர்ந்து தோன்றும் திரட்சியையுடைய காம்பினையுடைய நெய்தற்பூ’ என்பது நிறுத்தப்படுகிறது. நெய்தற் பூ சிறப்பற்றது என்பதை நாம் உரையாசிரியர்களின் வழியே அறிகிறோம். உ.வே.சா. ‘சிறப்பில்லாத நெய்தற் பூக்கள் சிறப்புடைய மகளிர் கண்களுக்கு ஒப்புமை சொல்லப்பட்டதால், சிறப்பில்லாத பரத்தையர் தலைவனுக்குச் சிறப்புடைய தலைவியை ஒத்தனரென்ற குறிப்பு பெறப்படும்’ என்று எழுதுகிறார். செப்பிற்குள், அதாவது பெட்டிக்குள் வாடிய மலராய் இருக்கும் தலைவி என்ற சிறைப்படுதல், உள்ளிருத்தல், உள்ளொடுங்கிபோகுதல் என்பதற்கு எதிராக வளமான நெய்தற் பூ போன்ற கண்களையுடைய பெண்கள் என்ற அகண்ட இயற்கை, நெய்தல் நிலம், விரிவு, ஒடுக்குதலற்ற, கட்டற்ற உறவு ஆகியன கவிதையால் முன்வைக்கப்படுகின்றன. வாடிய பூ சிறப்புடையது, செழுமையான நெய்தற் பூ சிறப்பற்றது.
———-
யாயாகியளே
————
வாடிய மலராய் இருக்கும் தலைவி, இப்போது நாணமுற்று உள்ளிருந்தாலும் தாயைப் போல அன்பின் மிகுதி கொண்டவள், அவள் பரத்தையரிடம் சென்று திரும்பும் தலைவனை மன்னித்து ஏற்றுக்கொள்வாள் என்பதை ‘யாயாகியளே’ என்ற சொல் குறிக்கிறது. உ.வே.சா. ‘தலைவியை யாயென்றது, புலத்திற்குக் காரணமான பரத்தமை, தலைவன் பால் உளதாகவும் அதை மனகங்கொள்ளாத கற்பின் சிறப்பை நோக்கி; என்று பொருள் எழுதுகிறார். ச. வே. சுப்பிரமணியன் ‘தாய்போல் மதிக்கத் தக்கவள்’ எனவும் தமிழண்ணல், ‘பொறுமையில் தாய் போல ஆகினாள், கற்புக்கடம் பூண்ட நம் தலைவி தாய்போல் மதிக்கத்தக்க பெருமையுடையவளே’ எனவும் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் ‘தாயென தக்காள் ஆயினள்’ எனவும் எழுதுகின்றனர்.
————————-
தோழி கூற்றின் தொனி
———
இக்கவிதை தலைமகனுக்குத் தோழி வாயில் மறித்துக் கூறியதாகும் எனும்போது இக்கவிதையின் தொனி என்னவாக இருக்க முடியும்? பரத்தையோரோடு சல்லாபமிட்டு வீடு திரும்பும் தலைவனை, அவன் பிரிவினால் உடல் மெலிந்து ( மெய் சாய்ந்து) இருக்கும் ஆனால் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தலைவி தாய்க்கு நிகரானவள் என்பதைத் தோழி, அடங்கிய கோபம், நெய்தற் பூ கண்கள் கொண்ட பெண்கள்’ என்பதன் அங்கதம், ‘யாயாகியளே’ என்ற சொல்லின் உயர்வு ஆகிய உணர்வுகள் அடங்கிய சிக்கலான தொனியில் சொல்லியிருக்க வேண்டும். தலைவியின் மௌனமான துயருறுதலை புனிதமாகக் கட்டமைப்பதால் இக்கவிதை அன்றைய சமூகத்தின் விழுமியத்தை எடுத்துச் சொல்வதாகவும் வாசிக்கலாம்.
No comments:
Post a Comment