Wednesday, April 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-7

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-7

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

காதற்பரத்தை கூற்று

—-

இயற்றியவர்: ஆலங்குடி வங்கனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 8

திணை: மருதம்

——

கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கயும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல 

மேவன  செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.

—————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வயலருகிலுள்ள மாமரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பொய்கையிலுள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுதற்கு இடமாகிய ஊரையுடைய தலைவன், எம்முடைய வீட்டில் எம்மை வயமாக்குதற்குரிய பெருமொழிகளைக் கூறி சென்று, தம்முடைய வீட்டில், முன்னின்றார் தம் கைகளையும் காலையும் தூக்க, தானும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றும் ஆடிப் பாவை போல தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

————

வாசிப்பு

——-

கிடைத்தபோது துய்ப்பதும், முயற்சி இன்றி அடைவதும்

——

தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை அத்தலைவியின் தோழியர் கேட்கும்படி இதைக் கூறியதாக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கவிதை,  சமூக விமர்சனமாக, ஆண்மகனின் பலவீனமான, நம்ப முடியாத தன்மையை அம்பலப்படுத்துகின்ற அதே நேரத்தில் அதை சாத்தியப்படுத்துகின்ற சமூக அமைப்புகள் ( social structures) என்னனென்ன என்பதையும் சொல்லிவிடுகிறது. கிடைத்தபோது துய்ப்பதற்கும், முயற்சி இன்றி அடைவதற்குமான  படிமமாக , “கழனி மாத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன்” - வயலருகிலுள்ள மாமரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை, பொய்கையிலுள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுவது’ இருக்கிறது. அந்த இடத்தை சேர்ந்தவன், ஊரன், எனத் தலைவன் குறிப்பிடப்படுவதால் அவனும் அந்தத் தன்மையினனே என்ற பொருள் அவன் மேல் ஏற்றப்படுகிறது. இதற்கு இரா.இராவகையங்கார் தன் உரையில் தலைவியர்க்குரிய தலைவரைக் கிடைத்தபோது துய்ப்பது பரத்தையர் இயல்பு என்று குறித்தாளாம் என்று எழுதுகிறார்;  பரத்தையர் இயல்பாய் அது இருக்கும்பட்சத்தில், அது இந்தக் கவிதையில் தலைவனுக்குத்தான் இருக்கிறதே தவிர பரத்தைக்கு இல்லை. உண்மையில் மாம்பழங்களை வாளை மீன்கள் உண்ணுமா என்று எனக்குத் தெரியவில்லை; வாளை மீன்கள், மாம்பழங்கள் இரண்டுமே வளமையின் குறியீடுகள் (symbols of fertility). வளப்பம் மிகும்போது  துய்ப்பு மட்டுமே குறிக்கோளாக அது காதலற்ற வெற்றுத் துய்ப்பாக, கனிந்து விழும் மாம்பழத்தை மீன்கள் உண்ணுவது போல, அ-யதார்த்த, இயற்கை சாராத நிகழ்வாகிறது. கனிந்த மாம்பழங்கள் பெண்களுக்கும், வாளை மீன்கள் ஆண்களும் குறியீடாக, அந்த ஊரைச் சேர்ந்தவன், ஊரன் என்ற இழிவுபடுத்துதல் கிடைத்ததைத் துயக்கும் அத்தனை ஆண்மகன்களுக்குமான பொதுமையாகிறது.

———

ஆடிப்பாவையின் பொய்மை

——

தலைவன் வீட்டிற்கு வெளியே, பரத்தையரிடம் ‘பெருமொழி’ கூறி மயக்கும்போதும், வீட்டிற்குள், தன் புதல்வனின் தாயின் முன், கையைக் காலை நாம் தூக்கினால் தானும் கையைக் காலைத்தூக்கும் ஆடிப்பாவை போல தலைவன்  இரண்டு இடங்களிலுமே பொய்யானவனாக, தனித்துவம் இல்லாதவனாக, இரு அமைப்புகளின் விளைபொருளாக மட்டுமே இருப்பவனாய் பரத்தையால் சுட்டிக்காட்டப்படுகிறான். தலைவியை ‘அவன் புதல்வனின் தாய்’ என்று பரத்தை குறிப்பது சுவாரஸ்யமானது; ஏதோ அவனுக்கு அவள் பிள்ளை பெற்றுவிட்டாள் எனவே அவன் அவளுக்கு ஆடிப்பாவை போல ஆடுகிறான் என்பது மறைமுகமாக தலைவிக்கு மனைவி என்ற அந்தஸ்தினை மறுக்கிறது; சூசகமாக தலைவியும் பிள்ளை பெற்றது ‘வாளை மீன் மாம்பழத்தை உண்ட’ சந்தர்ப்பத்தினால் எனில், அவளும் பரத்தையும் சம அந்தஸ்தினரே என்பதையும் சொல்கிறது. 


இல்லாத தலைவியும் முதுவேனில் காலமும்

—-

கவிதையில் நேரடியாக இல்லாத தலைவியே பரத்தையின் அவமதிப்புக்கு இலக்கு; பரத்தை தலைவனை செய்ல் திறனில்லாத (lacking in agency), சமூக எதிர்பார்ப்புக்கு ஏற்ற நடத்தையை பொய்யாகத் தலைவி முன் நிகழ்த்துகிற ஒரு பாவையாக சித்தரிப்பதன் மூலம், அப்பாவையைத் தன் வசம் இப்போது வைத்திருக்கிற தலைவி தருக்கித் திரிய இயலாது என்பதையும் உணர்த்துகிறாள். முதுவேனில் காலத்தில் கனிந்த மாம்பழங்கள் கீழே விழுந்துகொண்டுதானே இருக்கும், அவற்றை வாளை மீன்கள் கவ்விக்கொண்டுதானே இருக்கும் என்பவை தொக்கி நிற்கும் கேள்விகள்.   



No comments: