Monday, April 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-11

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-11

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: ஓதலாந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 12

திணை:  பாலை

————

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய

உலைக்க லன்ன பாறை யேறிக்

கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்

கவலைத் தென்பவவர் சென்ற வாறே

அதுமற்ற றவங் கொள்ளாது

நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே.

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் போன வழியானது, எறும்பின் வளைகளைப் போல, குறுமையையுடைய பலவாகிய சுனையை உடைய, கொல்லனது உளைக்களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்ற வெம்மையையுடைய, பாறையின் மேல் ஏறி வளைந்த வில்லையுடைய எயினச் சாதியினர் தம் அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை உடையது என்று கண்டோர் கூறுவர். இந்த ஆரவாரத்தையுடைய ஊரானது அவ்வழியின் கொடுமையைபபற்றித் துயரத்தை உட்கொள்ளாமல், அயற்றன்மையுடைய சொற்களைக் கூறி இடித்துரைக்கும். 

——-

வாசிப்பு

———

சுனைகளும், வெம்பாறைகளும், கொடுவில் எயினரும் நிறைந்த சுழற்பாதை

—————

தலைவன் பிரிந்து சென்ற பாதையை எறும்பின் வளைகளால் நிரம்பியது என தலைவி தன் தோழியிடம் முதல் வரியில் சொல்கிறாள். எறும்பை எறும்பி என அழைக்கும் மரபு திருவெறும்பியூரென்னும் சிவத்தலத்தின் பெயராலும் அறியப்படுமென உ.வே.சா தன் பொழிப்புரையில் குறிப்பிடுகிறார். இரா. இராகவையங்கார் தன் உரையில் தலைவன் சென்ற பாதையில் உணவளிப்பது எறும்பியளை, நீர் தருவது அறுநீர்ச்சுனை, உறைவிடம் உலைக்கலன்ன பாறை, வாழ்வோர் பகழி மாய்க்கும் கொடுவில் எயினர் என அவன் சென்ற வழியின் இடையூறெல்லாம் தெரியக் கூறினாள் என்று எழுதுகிறார். 


 தலைவியின் துயரம் தோய்ந்த சொற்கள் அவளுடைய உள்ளுலகும் வெளியுலகும் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதைச் சொல்கின்றன. தலைவன் பிரிந்து சென்ற பாதையின் கொடுமைகளையெல்லாம் அறியாத, புரிந்துகொள்ளாத ஊர் அவள் பிரிவாற்றமையினால் துயருற்று இருக்கிறாள் என்று சொல்கிறது; உண்மையில் அவளோ அவன் சென்ற பாதையிலிருக்கிற இடையூறுகளை நினைத்து கவலையுற்றிருக்கிறாள்.


சுனைகள் வாழ்வளிப்பவை ஆனால் கவிதையில் அவை சிறியனவாக எறும்பின் வளைகளைப் போல இருக்கின்றன; அவை வெம்பாறைகளும் கொடு வில் ஏந்தியவருக்கும் நடுவில் இருக்கின்றன. தலைவியின் உள்ளுலகு இவ்வாறாக தலைவன் சென்ற பாதையின் கொடுமைகளை நினைத்து உருகுகிறது.


———-


ஊர் எனும் வெளியுலகின் வன்கொடுமை

——

ஊர் என்றைக்கு தனி நபர்களின் துயரங்களை அனுதாபத்துடன் அணுகியிருக்கிறது? இந்தக் கவிதையில் ஊர் எனப்படுவது இந்தக் கவிதையைக் கேட்கும் தோழியினால் பிரதிநிதித்துவப்படுத்தபடுகிறது. ஆகவே கவிதையை வாசிக்கும் நாமே இந்தக் கவிதையின் சொல்லாடலின்படி (discourse) ஊராகிறோம். ‘நொதுமற்கழறென்றது’ வழியின் கொடுமையை அறிந்து வருந்துதை உணராமல் பிரிவினால் ஆற்றாதிருந்தாளென தோழியின் மேல் தலைவி குறைப்பட்டுக்கொள்கிறாள். தலைவி கூற்று இக்கவிதையில் தோழியை நோக்கியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். உ.வே.சா. தோழியை ஊரென்று சொல்வது மரபு எனக் கற்பிக்கிறார். “இமைப்பிற் கரப்பாக் கறிவனைத்திற்கே ஏதில ரென்னு மிவ்வூர் “ என்ற குறளுக்கு ( எண் 1129) பரிமேலழகர் தன் உரையில் ‘ தன் கருத்துதறியாமையைப் புலந்து சொல்லுகின்றாளாதலின் தோழியை வேறுபடுத்தி இவ்வூரென்றாள்”  என்று எழுதுகிறார். 


நொதுமல் என்ற சொல்லுக்கு அயல் என்ற பொருளாகையால் அது அந்நியமானது,  தன்னிலைக்கு (self) மற்றவையானது (other), எதிராகிறது. மற்றவையின் கரிசனமின்மையும், முன் தீர்மானமும் தலைவியின் துயரத்தில் இன்னொரு அடுக்காகிறது. Other is not hell here, but other is hostile.

இந்தக் கவிதையின் உலகம் இரண்டு எதிரெதிர் உலகங்களை வண்ணந்தீட்டுகிறது; வெளியுலக கரிசனமின்மை X உள்ளுலகத் தனிமை. தலைவன் எதிர்கொள்ளும் சிரமங்கள் X அவற்றிலுள்ள நேர்மறையான சாத்தியப்பாடுகள்.

—————

குறியீடுகளை செயல்களாக அறிதல்

——-

இந்தக் கவிதையில் தலைவி பொதுவாக குறியீடுகளாக அறிப்படுபவற்ற செயல்களாக அறிகிறாள்; அவ்வாறகவே தன் தோழியிடத்து சொல்கிறாள். தலைவன் செல்லும் வழியின் எறும்பு வளைகள் போன்ற சுனைகள்,  சுடுகின்ற வெம்பாறை, வில்லேந்தியவர் என இயற்கை, மனிதச் சூழல் ஆகியவற்றின் பகுதியாக தலைவன் எதிர்கொள்வதாக அவள் நினைப்பவை அவளுடைய  அக உலகின் ஒடுக்குதலைச் செய்யக்கூடியனவாக மாறுகின்றன. 

தலைவியின் துயரம் காமப் பிரிவாற்றமையினால் அல்ல மாறாக தலைவன் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைத்து வருந்துவதால் வருவது என்ற நுண் வேறுபாட்டினை விளக்க அவள்தான் எவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது! அவள் எதிர்கொள்ளும் ‘ஊர்’ என்பது லேசுப்பட்டதா, என்ன? 

————


No comments: