Saturday, April 20, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-10

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-10

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக

—-

இயற்றியவர்: மாமூலனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 11

திணை:  பாலை

————

கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்

பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி

ஈங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே

எழுவினி வாழியென்னெஞ்சே முனாது

குல்லைக் கண்ணி வடுகர் முனையது

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழிபெயர் தேஎத்த ராயினும்

வழிபடல் சூழ்ந்திசி நவருடை நாட்டே.

————————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால்  நெகிழாநிற்ப,  நாள் தோறும் இமைபொருந்துதல் இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு இங்கு தனித்து வருந்தி, இப்படி இங்கே தங்குதலின்றும் தப்புவேனாக. ஆங்கு தலைவன் இருக்கும் இடத்திற்கு செல்ல இப்பொழுது எழுவாயாக. முன்னே உள்ள கஞ்சங்குல்லையாகிய கண்ணியை அணிந்த, வடுகருக்குரிய இடத்தினதாகிய பலவேலையுடைய கட்டியென்பவனுடைய நல்ல நாட்டுக்கு அப்புறத்தில் உள்ள, மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும் அவருடைய நாட்டினிடத்து செல்லுதலை எண்ணினேன்.

———

துயருறும் நெஞ்சின் பாடல்

——

‘வாழியென்னெஞ்சே’ என்ற தலைவியின் அகவாழ்த்து ஒரு கத்தித்திருகலைப் போன்ற பிரிவாற்றமையின் துயரத்தை உள்ளடக்கியிருக்கிறது என்றாலும் அது விரக்தியில் எழுந்த  துணிச்சலைப் தனக்குத் தானே பாராட்டி வாழ்த்திக்கொள்கிறது; அதில் விரக்தியில் எழும் அங்கதம் தொனியாகிறது. சங்கு வளையல்கள்  இன்னும் மெலியும் உடலில் இருந்து நழுவவில்லை, இமை பொருந்தா விழிகள் இன்னும் தூக்கத்தைக் காணவில்லை, புலம்புதலும் அழுகையும் இன்னும் நிற்கவில்லை என்ற வரிகளுக்குப் பின் வரும் வாழ்த்து ஒரு பிளவுண்ட தன்னிலையையும் (fractured self) நமக்கு அறிவிக்கிறது. கட்டி எனும் கருங்குலையாகிய கண்ணியை அணிந்த வடுகர் தலைவனின் நாட்டைத் தாண்டி அறியாத மொழி பேசும் நிலத்துக்கு தலைவனைத் தேடிச்செல்லத் துணிகிறது அவள் மனது. அந்தத் துணிச்சல் பாராட்டத்தக்கது என்றாலும் மொழி அறியா நிலத்தின் அபாயங்களும் அறியப்பட்டாதவையே. வாழ்த்துக்குரிய துணிச்சலையும் அறியப்படா அபாயங்களையும்  ஒருங்கே இரட்டைத் தன்மையோடு இக்கவிதை அறிவிப்பதால் அதன் வசீகரம் கூடுகிறது.

——-

தேஎத்தர் எனும் இன்னிசை அளபெடை

——-

இக்கவிதையில்  வரும் வடுகர் எங்கே வாழ்ந்தார்கள், எந்த நிலப்பகுதி கட்டி எனும் வடுகர் தலைவனால் ஆளப்பட்டது, எந்த நிலப்பகுதியைத் தாண்டிச் செல்ல  தலைவி விரும்பினால் என்பதற்கான விளக்கத்தை நாம் பிற உரைகளைலிருந்தே பெற முடிகிறது. புற நானுற்றிற்கு 278 ஆவது பாடலுக்கு உரை எழுதுகிற ஒளவை துரைசாமிப்பிள்ளை தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால் அவர்கள் வடுகர் என்றழைக்கப்பட்டனர் என்று எழுதுகிறார். முன்னிலை என்பதற்கு முன்னே உள்ளதாகிய (நிலம்) என்று மட்டுமே உ.வே.சா பதவுரை தருகையில், தமிழண்ணல் அதை எல்லையென வகுக்க, பொ. வே. சோமசுந்தரனாரும், இரா. இராகவையங்காரும் அதைப் பகைப்புலம் என விளக்குகின்றனர்.   தேஎத்தர் இன்னிசை அளபெடை ஆகையால் அது அந்த நாட்டின் மக்கள் என்று மட்டுமே பொருள்படும். அம்மக்களுக்கு எந்த எதிர்மறை குணத்தையும் கற்பிக்காது. 

——-

வழிபடலுக்கான ஏக்கமும், தப்பித்தலின் அபாயமும்

——-

இங்கே புலம்பிக்கொண்டும் அழுதுகொண்டும் இருப்பதற்குப் பதிலாகத் துணிந்து வடுகர் தலைவன் ஆளும் நிலம் தாண்டித் தப்பிச் செல்லாம் என, ‘வழிபடல் சூழ்ந்திசி’ என தலைவி நினைக்கிறாள். வழிபடல் என்பது பிரயாணம். தலைவனைப் பிரிந்து தனித்திருத்தலை இனி ஆற்றேன் என்ற துணியும் மனம் உடனடியாக  மொழி அறியாததை அந்நிலத்தின் அபாயமாகவும் உடனடியாக அடையாளம் காண்கிறது. துணிந்த எண்ணம் செயலாகுமா என்பதற்கான குறிப்பு கவிதையில் இல்லை. துணிந்ததற்கு மட்டுமேதான் ‘வாழியென்னெஞ்சே’ என்ற வாழ்த்து. வடுகர் தலைவன் கட்டி, கஞ்சங்குல்லையாகிய கண்ணியை (துளசியின் ஒரு வகை) அணிந்தவன் என்ற விவரிப்பினாலும், நல் நாடு என்றதாலும் வடுகர் நிலைத்தைக் கண்டு தலைவி அஞ்சவில்லை எனப் பொருள் கொள்ளலாம். அதற்கு அப்பால், ‘உம்பர்’ இருக்கக்கூடிய நிலமே அபாயகரமானது, மொழி அறியாததால். மொழி தரும் பாதுகாப்புக்கு அப்பாலான ‘வழிபடல்’ இப்போது தலைவி அனுபவிக்கும் துயரத்தை விட அதிகமான மொழியற்ற அர்த்தமின்மைக்கும், பெரிதும் ஒழுங்கற்ற நிலைக்கும் (chaos) இட்டுச்செல்லும். 


வழிபடலுக்கான ஏக்கம் துயரம். 


No comments: