குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-15
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவியிடம் கூறியது
—-
இயற்றியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ
குறுந்தொகையில் பாடல் எண்; 16
திணை: பாலை
————-
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டு மோசைப் போலச்
செங்காற் பல்லி நன்றுணைப் பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந்தோரே
———-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
ஆறலைக் கள்வர், செப்பம் செய்யும்பொருட்டு, இரும்பினாற் செய்யப்பட்ட தம் அம்பை, நகனுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல செம்மையான காலையுடைய ஆண்பல்லியானது தன் பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய அழகிய அடியையுடைய கள்ளிகளையுடைய பாலையைக் கடந்து பொருள்வயிற் சென்ற தலைவன் நம்மை நினையானோ?
——-
வாசிப்பு
—-
ஏக்கத்தின் நிலப்பகுதி
————
பிரிவின் ஏக்கத்தையும் அதனால் உண்டாகும் நிச்சயமற்றதன்மையையும் இதயம் பிளக்கும் விதத்தில் சொல்லும் இக்கவிதை பல தள அலசலைக் கோருகிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து கள்ளிச்செடிகளையுடைய பாலைக்குச் சென்றுவிட்டான். அப் பாலை நிலம் ஒரு உருவகவெளி; அது பிரிவு உணர்ச்சியால் இன்னும் தூரமாகியிருக்கிறது; கூடவே அது உணர்ச்சியின் நெடுந்தொலைவுக்குக் காட்சியாகிறது. ‘கள்ளியங் காடிறந்தோரே’ என்ற பதச்சேர்க்கை, கள்ளிகளையுடைய பாலையைக் கடந்து சென்ற தலைவன், அந்த பிரிவுணர்ச்சியின் நெடுந்தொலைவைக் கடந்து செல்வதால் அவன் தலைவியை நினைத்தானா என்ற நிச்சயமற்றதன்மையைச் சொல்கிறது; ஆசை பலசமயங்களில் அதனுடைய வழியின் அபாயங்களை மறைக்கிறது. ‘உள்ளார் கொல்லோ தோழி’ என்ற வரியில் ‘கொல்’ என்பது ஐயப்பாட்டினை வெளிப்படுத்தும் இடைச்சொல்; அதை அவன் உன்னை நினைக்காமலா போய்விடுவான் என்றும், நினைப்பானா என்றும் சிறு பொருள்மயக்க வேறுபாட்டோடு விளங்கிக்கொள்ளலாம்.
——-
பொன்னென்றது இரும்பை, செப்பமென்றது கூர்மையை
——-
‘தம் பொன் புனை பகழி’ என்பது இரும்பினால் செய்யப்பட்ட அம்பு; அதை ‘உகிர்நுதிப் புரட்டும் ஓசை போல’ என்றது அந்த அம்பினை நகங்களினால் புரட்டும் போது ஏற்படும் ஓசை எனப் பொருள்படும். ’செப்பம் கொண்மார்’ என்றது நகத்தினால் புரட்டுவது அம்பினைக் கூர்மைப்படுத்துவதற்காக. அம்பினைக் கூர்மைப்படுத்துவர் கள்வர் என்பதால் அந்தப் பாலையின் அபாயமும் சுட்டப்படுகிறது. இந்த ஒலி எந்த மற்ற ஒலியோடு ஒப்பிடப்படுக்கிறது என்பதில்தான் இந்தக் கவிதை இன்னும் நுட்பமடைகிறது. அம்பைத் தீட்டும் ஒலி ஆண் பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஒலியோடு ஒப்பிடப்படுகிறது.
——-
செங்காற் பல்லி
———
அம்பைக் கூர் தீட்டுகிற ஒலி தலைவனுக்கு ‘செங்காற் பல்லி’ தன் இணையைக் கூப்பிடும் ஒலியை நினைவுபடுத்தத் தலைவன் தன் தலைவியை நினைப்பானோ என்கிறாள் தலைவியின் தோழி. அம்பைக் கூர் தீட்டுகிற ஒலி வன்முறையையும் போரையும் குறிக்கிறதென்றால் அதற்கு நேரெதிராகப் பல்லி எழுப்புகிற ஒலி இயற்கையையும் இணைவதற்கான ஏக்கத்தையும் குறிக்கிறது. இந்த வன்முறையின் சித்திரம் காதல் ஏக்கத்தில் உள்ள விரக்தியை பிரதிபலிக்கிறது, காதல் எப்படி காயப்படுத்தக்கூடும் என்ற பயத்தையும் கூடவே. பல்லியின் முதன்மையான ஏக்கத்திற்கும் கள்வரின் கொள்ளைக்கான தயார் நிலைக்கும் இடையே உள்ள அப்பட்டமான வேறுபாடு, இணைப்புக்கான இயற்கையான ஏக்கத்திற்கும் அந்த ஆசைக்குள் இருக்கும் ஆபத்துகளுக்கும் இடையிலான பதற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. வில்லைக் கூர்மைப்படுத்தும், ‘விரல் நகங்களில்’, பதுங்கியிருக்கும் காமக்குறிப்பு அச்சுறுத்தலுக்கு நெருக்கத்தின் ஒரு அடுக்கை சேர்க்கிறது. இந்த நெருக்கமான ஆபத்து அன்பே மென்மையாகவும் அழிவுகரமானதாகவும் இருக்கும் விதத்தைக் குறிக்கலாம்.
———-
நிச்சயமற்ற தீர்மானங்கள்
———-
திட்டவட்டமான தீர்மானம் இல்லாததால் ஒரு தெளிவின்மை கவிதையின் முடிவிலும் நீடிக்கிறது. தலைவனின் மறுபிரவேசம் பற்றிய தோழியின் நன்னன்பிக்கைக் கூற்று நிச்சயமற்றதாக இருக்கிறது. அது உண்மையானதா அல்லது தலைவியின் பொருட்டு அன்பால் கூறப்பட்ட பொய்மொழியா? இந்த திறந்த முடிவு காதலின் ஆசையின் சிக்கலான தன்மையை பிரதிபலிக்கிறது, தலைவியின் சொந்த கையறு நிலையை எடுத்துச்சொல்கிறது. அச்சமும் ஏக்கமும் நம்பிக்கையும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடும் ஒரு அக நிலப்பரப்பு இங்கே கவிதையாகியிருக்கிறது.
——-
பல்லியின் அழைப்பு எனும் இறைச்சி
——-
உ.வே.சா. இக்கவிதை நிச்சய்மற்ற தீர்மானத்தோடு முடிவதாக எழுதவில்லை. அவர் ‘பல்லி தன் துணையை அழைக்கும் பாலைநிலத்திற் செல்பவர் அது கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்; ஆதலின் நீ ஆற்றியிருப்பாயாக வென்பது குறிப்பு’ என கவிதைக்கு தலைவிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஒரு நல் முடிவை அளிக்கிறார். இக்கவிதைக்கு தமிழண்ணல் , சிற்றுயிர்களாகிய கார்ப்பொருளின் காதலைக்கூறி, மானிட உரிப்பொருளுக்குத் துணையுமாக வரும் இதுவே ‘இறைச்சி’ எனப்படும்’ என்று எழுதுகிறார். அந்த வாசிப்பும் அருமையானதே.
No comments:
Post a Comment