Monday, April 29, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-18

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-18

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

—-

இயற்றியவர்:  பரணர்

குறுந்தொகையில் பாடல் எண்; 19

திணை:  மருதம்

————-

எவ்விழந்த வறுமையாழ்ப் பாணர்

பூவில் வறுந்தலை போலப் புல்லென்

றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்

தெல்லுறு மௌவனாறும்

பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, மனைப்படப்பையிலுள்ள மரத்தின் மீது படர்ந்த, ஒளியையுடைய முல்லை மலர்கள், மணம் வீசுதற்கிடமாகிய, பலவாகிய கரிய கூந்தலையுடைய இவள், நம் திறத்தில் எத்தகைய உறவினை உடையவளோ!. ஆதலால் எவ்வியென்னும் உபகாரியை இழத்தலால் உண்டாகிய வறுமையையுடைய யாழ்ப்பாணரது பொற்பூ இல்லாத வறிய தலையானது பொலிவிழந்திருத்தல் போல பொலிவிழந்து வருந்துவாயாக.

———-

வாசிப்பு

—-

இழப்பு, துரோகம், எஞ்சியிருக்கும் நினைவு

————

‘யாரளோ நமக்கே’ என்ற கவிதையின் இறுதிச் சொற்களில் தலைவன் தன்னிடமிருந்து தலைவி மிகவும் அந்நியப்பட்டு போய் யாரோ ஆகிவிட்டதை தன் நெஞ்சிடம்  சொல்கிறான். குறுந்தொகைப் பாடல்களில் இப்படி தன் நெஞ்சோடு பேசும் கவிதைகள் அனைத்துமே மிகுந்த நாடகீயமானவை. யாரளோ என்று தலைவி ஆனதற்கு கவிதையில் காரணங்கள் நேரடியாகச் சொல்லப்படவில்லை.  ‘மனை மரத்து’ என்றது வீட்டு முற்றத்திலுள்ள மரத்தின் மேல் படர்ந்த , ‘எல் உறு மெளவல்’ என்றது ஒளியையுடைய முல்லை மலர்களை. உ.வே.சா மகளிர் முல்லையை வளர்த்தலும் சூடுதலும் கற்புடைமை என்பதைச் சுட்டுகிறார். ‘மௌவல் நாறும் கூந்தல்’ என்றது முல்லையை அணிந்ததால் உண்டாகக்கூடிய நறுமணத்தை சொல்லியதாகும். கற்புடைய தலைவி என்பதால் உறவுக்குத் துரோகம் செய்தவன் தலைவனே. அதனாலேயேதான் அவன் தன் நெஞ்சிடம் பேசுகிறான். ஒருவன் தன் நெஞ்சிடம் எப்படிப் பொய்யுரைக்க முடியும்?  துரோகத்தினால் ஏற்பட்ட குற்ற உணர்வோடு நினைவுகளின் துன்புறுத்துதலுக்கும் அவன் ஆளாகிறான்.

——-

புலனுணர்வுகளின் துய்ப்பால் செழுமையடைந்த உலகும் நினைவும்

——————-

இந்தக் கவிதை புலனுணர்வுகளின் துய்ப்பால் நினைவில் படிந்து செழுமைப்படுத்திய பெண்ணைக் கொண்டாடுகிறது. தலைவன் சூடாமலேயே முல்லை மலர்களின் நறுமணம் அடர்ந்த தலைவியின் கூந்தலைப் பற்றி பேசுகிறது. இரா. இராகவையங்கார் மனைமரத்து இரவிலுற்ற முல்லை மலர்கள் ஒருவருஞ் சூடாமலே மணம் வீசுதல் போல இவள் கூந்தலும் நாம் அணையாமலே மணம் வீசும என்பது குறிப்பு என எழுதுகிறார். கூந்தலை முடிவதற்கு ஐந்து வகைகள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. கூந்தலை உச்சியில் வைத்து முடிவது முடி; கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது கொண்டை; கூந்தலை மலர்ச்சரங்களோடு  செருகினால் அது சுருள்; கூந்தலை அள்ளி முடிவது குழல்; கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொள்வது பனிச்சை. உ.வே.சா. பனிச்சை முதலிய ஐந்து பகுதிகளை உடையது ஆதலால் தலைவியின் கூந்தலை பல் கூந்தலென்றான் என்று எழுதுகிறார். ‘பல்லிருங் கூந்தல்’ நினைவாக, வலியாக, தலைவனை ஆக்கிரமிக்கிறது, கூடவே மல்லிகை மணமும், மனையில் நிற்கிற முல்லை படர்ந்த மரமும்.

——————

இழப்பும் அதன் எதிரொலிகளும்

———-

கவிதை தன் நினைவின் செழுமைகளைலிருந்து சடாரென மாறி சமூகத் தளத்தில் எவ்வி என்னும் புரவல மன்னனின் இறப்பால் பொற்பூக்களை இழந்த பாணர்களின் தலைகள் வெறுமையானதைப் பேசுகிறது. எவ்வி என்னும் மிழலை நாட்டின் மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் போரில் கொல்லப்பட்டான் என புறநானூறு 115  கூறுகிறது . எவ்வி பாணர்களுக்குப் பெரும் புரவலனாய் இருந்தவன், அவனுடைய இறப்பினால் பாணர் ‘பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனை’ ஆயினர். இனை என்பதற்கு திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  இன்னை என்பதன் இடைக்குறை,  அதற்கு வருந்தினை என்பது பொருள் என உரை எழுதுகிறார். பாணர்களின் பொற்பூ இன்றி வறுமையடைந்த தலை, தலைவியின் முல்லையும் மல்லிகையும் மணக்கும் செழுமையான கூந்தலுக்கு எதிராகிறது.

——-

வலியும், சிதைவும்

———-

இக்கவிதை இரு வேறு துண்டுகளை இணைத்து உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் காட்டும் வடிவத்தைக்கொண்டிருக்கிறது.  நெஞ்சே, கூந்தல் நமக்கு யாரளோ ஆதலின் பாணர் தலை போலப் புல்லென்று இனைமதி; இவள் இப்போது வேறுபாடுடையவளானாள்- என்ற அளவில் சிதறுண்டதாக, சிறியதாக, வலியைச் சொல்வதாக இருக்கிறது. சிதறுண்ட வெளிப்பாடுகள் வலியைச் சொல்பவை. அதன் குறுகிய வடிவத்தில் இக்கவிதை மாறும் குறியீடுகளின் வழி, புலனுணர்வின் படிமத்தின் வழி தான் துரோகம் செய்ததை ஒருவன் தனக்குத் தானே சொல்வதை அழகாக வடிவமாக்குகிறது. ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வலியிலும் நினைவிலும் இழப்பிலும் தோய்ந்திருக்கிறது.


No comments: