குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-17
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவனிடம் கூறியது
—-
இயற்றியவர்: கபிலர்
குறுந்தொகையில் பாடல் எண்; 18
திணை: குறிஞ்சி
————-
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கியவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே
——-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
சிறு மூங்கிலாகிய வாழ்வேலியையுடைய, வேரிலே பலாக்குலைகளையுடைய பலாமரங்கள் செறிந்த பக்கத்தையுடைய மலைநாடனே, பக்க மலையில், பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரும் பழம் தொங்கியது போல இத் தலைவியினது உயிரானது மிகச் சிறுமையையுடையது; காம நோய் மிகப் பெரிது, அந்நிலையை அறிந்தவர் யார்? ஒருவருமில்லை; அவளை வரைந்துகொள்ளும் பருவத்தை உடையை ஆகுக.
————
வாசிப்பு
—————-
அர்த்தத்திற்கான போராட்டம்
———-
இந்தக்கவிதை இரண்டுவகையான குறிபீட்டாக்கங்களுக்கிடையிலான (modes of signification), நம் அனுபவத்தில் நிகழும் அர்த்தத்திற்கான போராட்டத்தை விவரிக்கிறது. ஒரு புறம் இயற்கை உலகம்; அது மலைச்சரிவுகளின் மனிதன், மூங்கிலாகிய வேலி, வேரிலே பலாப்பழங்கள் செறிந்த மலைப்பகுதி, பலாமரத்தின் சிறிய கொம்பில் பெரும் பழம் தொங்கியது போன்ற இத்தலைவியின் உயிர் ஆகியன அடங்கியதாக இருக்கிறது. மலைச்சாரலில் இயல்பாக வளர்ந்த சிறு மூங்கிலே பலாமரங்களுக்கு வேலியாகிறது. இதை உயிர்வேலி என்றது சிறப்பு. இந்த இயற்கையுலகு மொழிக்கு முந்தையது, உந்துணர்வால் பார்ப்பதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது. இவ்வுலகில் தலைவி தன்னந்தனியாய் இருக்கிறாள். ‘யார் அஃது அறிந்திசினோரே’ என்றது தலைவியின் தனிமையை இயற்கை உலகிற்கும் பண்பாட்டு உலகிற்கும் இடையிலான பாலமாக வைக்கிறது. இயற்கை உலகு குறியியல் தளமெனின் (semiotic plane) பண்பாட்டு உலகு சட்டம், சமூக நியதிகள் நிறைந்த குறியீட்டுத்தளம் (symbolic plane). தோழி தலைவனை இயற்கை உலகிலிருந்து பண்பாட்டுத்தளத்திற்கு தலைவியை மணம்புரிந்து கூட்டிச் செல்லச் சொல்கிறாள்.
—————
உயிர் தவம் சிறிது காமம் பெரிது எனும் கவித்துவ உச்சம்
———
இந்தக் கவிதையின் உச்சமாக நான் கருதுவது “உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” என்ற வரியினை. என்ன மாதிரியான வரி அது! உயிரின் தவம் இவ்வுலகில் சிறிது ஆனால் காமமோ அதனினும் பெரிது எனில் உயிரின் தவத்துக்கு அடிப்படை சக்தியான காமமே அதற்கு எதிராகவும் அதை விடப் பெரியதாகவும் இருக்கிறது என இவ்வுலக வாழ்வின் அடிப்படை முரணை கவித்துவ உச்சமாக இக்கவிதை சொல்லிவிடுகிறது. இதன் காட்சிப்படிமமாக சிறு கொம்பில் தொங்கும் பெரிய பலாப்பழம் இருக்கிறது. இந்தப்படிமம், தலைவியின், பெண்ணின் வலுவற்றமென்நிலையைச் சொல்கிறது. பொ. வே. சோமசுந்தரனார் சிறு கொம்பில் பலாக்கனி பின்னும் பருத்து முதிருமாயின் அக்கொம்பினை முறித்துக்கொண்டு வீழ்ந்து சிதறுமாறு போலத் தலைவியின் காமம் பின்னும் முதிருங்கால் அவள் உயிருக்கு இடையூறு செய்து தானும் கெடும் என்பது உவமையாற் போந்தமை உணர்க என்று எழுதுகிறார். இரா. இராகவையங்கார் சிறு கோடு என்பதனால் தலைவியினது இளமையும் மென்மையும் தெரிய வந்ததைக் கவனிக்கச் சொல்கிறார்.
———-
வேர்கோள் பலவின் சாரல் நாட
————
வேரிலே பழக்குலைகளையுடைய பலாமரங்கள் செறிந்த பக்கங்களையுடைய மலைநாடனே என்றது தலைவனின் மனத்தை ஒரு மலைச்சரிவெனும் நிலப்பகுதியாக்கியதாகும்; அந்நிலப்பகுதியில் ஒரு பழம் கனிந்து கிளை ஒடியத் தயார் நிலையில் இருப்பவளாக தலைவி சுட்டப்படுதல் அபாரமான கவிதையின் உள்ளடுக்காகும். நிலப்பகுதியின் செழுமையும் அதனுள் ஒரு வலுவற்றமென்நிலையையும் ஒரே சமயத்தில் கவிதை நம்மை கவனம்கொள்ளச் செய்கிறது.
—————-
தோழி வரைவு கடாயது (தலைவியை மணம் முடிக்கக்கோரியது)
—————
உ.வே.சா முதற்கொண்டு நான் வாசித்த அத்தனை உரையாசிரியர்களும் தலைவியின் நிலையைக் கருத்தில்கொண்டு தலைவன் அவளை மணம் புரியவேண்டும் என்று கூறுவதாகவே விளக்கமளித்துள்ளனர். உ.வே.சா. ‘நாட இவள் உயிர் தவச் சிறிது; காமம் தவப் பெரிது; அஃது அறிந்திசினோர் யார்? ‘ என்பதன் கருத்து ‘தலைவியை நீ விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டும்” என எழுதுகிறார். ஆனால் கவிதை மூங்கில் வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட வேரில் பழுத்த பலாமரங்களின் நடுவே மெல்லிய கிளையொன்றில் எந்நேரமும் ஒடிந்து விழுந்துவிடலாம் என்பது போல அதிக எடையுடைய கனிந்த பலா தொங்கிக்கொண்டிருக்கிறது; அது உயிரின் தவம் சிறிது காமம் அதனினும் பெரிது என்பதைப் போல இருக்கிறது என்பதைச் சொல்வதோடு நின்றுவிடுகிறது. அது காட்சிப்படிமமாய் நிலைத்து கவிதையில் இருப்பதே அதன் அழகு!
———
No comments:
Post a Comment