Tuesday, April 23, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-12

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-12

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் சொல்லியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 13

திணை:  குறிஞ்சி

————

மாசறக் கழீஇய யானை போலப்

பெரும்மெயலுழந்த விரும்பிணர்த் துறுகல்

பைதலொருதலைச் சேக்கு நாடன்

நோயதந் தனனே தோழி

பசலை யார்ந்தன குவளையங் கண்ணே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

மேலையுள்ள புழுதி முற்ற நீங்கும்படி பாகனாற் கழுவப்பட்ட யானையைப் போல பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய  துறு கல்லானது, பசுமையையுடைய ஓரிடத்தில், தங்குகின்ற மலைநாட்டையுடைய தலைவன், காம நோயைத் தந்தான்; அதனால் முன்பு குவளை மலரைப் போன்றிருந்த என்னுடைய அழகிய கண்கள், இப்போது பசலை நிறம் நிரம்பப் பெற்றன. 

———-

வாசிப்பு

————

மாசு, மாசின்மை, இரண்டையும் இழத்தல்

——-

‘நோய தந்தனனே தோழி’ என்ற வரி தன்னுடைய நோயற்ற உடலும் மாசற்ற மனமும் மீறப்பட்டதை, தான் பீடிக்கப்பட்டதை தலைவி சொல்வதாக அமைந்திருக்கிறது. இங்கே தலைவனுக்கு உவமையாகச் சொல்லப்படுகிற யானை போன்ற உறுகல் தன்னுடைய மாசினை முழுமையாக மழையினால் கழுவப்பட, தன் இயல்பில் இல்லாத தூய்மையை  உறுகல்லாகிய தலைவன் அடைகிறான். மாசின்மையை தலைவி இழக்கிறாள், தூய்மையைத் தலைவன் பெறுகிறான். இந்த இரட்டைக் குறிப்பான்களின் (double signifiers) குறியீட்டுப் பரிமாற்றத்தில் ( symbolic exchange) தலைவி நோய் பீடித்தவள் ஆகிறாள். உ.வே.சா. இதையே  ‘துறுகல் மாசு நீங்கப் பெற்ற நாடன் அவவியற்புக்கு மாறாக என் கண்ணின் இயல்பை மறைக்கும் பசலையை வளரச் செய்தானென்பது குறிப்பு” என்று எழுதுகிறார். நோய் என்பது உருவகம்; அது தலைவி தன் மாசின்மையை, கள்ளமின்மையை இழந்துவிட்டதை சொல்கிறது. 

———-

பெரும் மழை, யானை, உறுகல்

———

‘பெரும் பெயல் உழந்த’ என்ற வரி பெரு மழையால் யானை போன்ற கல் சுத்தமாகக் கழுவப்பட்டததைச் சொல்கிறது. பெருமழை ஒரு பேரனுபவத்தின் குறியீடாக இக்கவிதையிலிருக்கிறது; அந்த பேரனுபவத்திறகு ஆட்பட்ட தலைவன் தலைவி இருவருமே இயல்பு திரிந்தனர். இதை இறைச்சி என திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில் குறிக்கிறார். இறைச்சி என்ற கருத்தாக்கத்தை தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. கூறவந்த பொருள் வெளிப்படாமல் மறைவாக இருக்க, அதை உணர்த்த, வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி என்றழைக்கப்படுகிறது. யானையையும் பாறையையும் ஒப்பிடுதல் அகநானூற்றுப் பாடல்களிலும் குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றிலும் வாசிக்கக் கிடைக்கிறது. யானை பலம், விவேகம், தெய்வீகம் என பல குறியீட்டு அர்த்தங்கள்  கொண்டதாக அகப்பாடல்களில் வருகின்றன. இந்தக் கவிதையில் தலைவன் இக்குணங்களைக் கொண்டவனாக மறைமுகமாக சுட்டப்படுகிறான்.

——

இல்லாத தலைவன் (absent hero)

————

இந்தக் கவிதையில் தலைவன் நேரடியாக இல்லை; அவன்  தலைவி அவனை சந்தித்து தன் மாசின்மையை இழந்து நோய் பெற்ற இடத்தின் தன்மையாலேயே சுட்டப்படுகிறான். ‘பெருமழையால், கழுவப்பட்ட யானை போன்ற பாறை’ தலைவனுக்குப் பெயராகிறது (metonomy); அதே நிலையிலேயே தலைவன் நீடித்திருப்பானா என்பது நிச்சயமில்லை. அதுவே தலைவிக்கு இனிமையின் நினைவையும் எதிர்காலத்தைப் பற்றிய வேதனையையும் (anguish) தருகிறது. 

———-

தலைவியின் உருமாற்றம்

——

‘பசலை யார்ந்தன குவளையங் கண்ணே’ என்ற வரி அழகான குவளை மலர்கள் போன்ற தலைவியின் கண்கள் பசலை படர்ந்து வெளிறிவிட்டதைச் சொல்கின்றன. 

—-

அணுக்கத் தோழி

———

இக்கவிதையில் தலைவி தோழியை நேரடியாக விளிப்பது அவர்களுக்கிடையேயான அணுக்கத்தையும் (intimacy) அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான சூழலையும் குறிக்கிறது. ஜூலியா கிறிஸ்தவா இம்மாதிரியான பெண்களுக்களுக்கிடையிலான அணுக்கத்தருணங்கள் முக்கியமானவை என்றும் அவை கவனித்து ஆராயத்தக்கன என்றும் சொல்கிறார். ( பார்க்க :Kristeva, Julia. Desire in Language: A Semiotic Approach to Literature and Art. Translated by Thomas Gora, Alice Jardine, and Leon S. Roudiez. New York: Columbia University Press, 1980.) 


No comments: