குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-71
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவன் தோழனிடம் கூறியது
இயற்றியவர்: மள்ளனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 72
திணை: குறிஞ்சி
————
பூவொத் தலமருந் தகைய வேவொத்
தெல்லாரு மறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்றோன் மாமலைப்
பரீஇ வித்திய வேனற்
குரீஇ யோபுவாள் பெருமழைக் கண்ணே
—-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தோழி, இனிய மொழியினையும் பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பருத்தியை இடையிலே விதைத்த, தினை முதிர்ந்த புனத்தின்கண் அத்தினையை உண்ண வருகிற குருவினங்களை ஓட்டுகிறவளது பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள் பூவினைப் போன்ற அழகுடன் சுழலும் தன்மையுடையன. ஆயினும் அக்கண்கள் கொடிய அம்பினைப் போல உன்னைப் போன்ற யாவரும் என்னுடைய வேறுபாட்டை அறியும்படி எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.
——-
பெருமழைக் கண்
——-
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் வேறுபாடு ஏற்பட்டு அதைப் பற்றித் தோழன் கேட்கும்போது தலைவன் பதிலளிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. தலைவியின் கண்களால் தலைவன் கட்டுப்படுத்தப்படுவதை அதனால் அவனுக்குத் தடுமாற்றம் ஏற்படுவதையும் யாவரும் அறியக்கூடியதாக இருக்கிறது. ‘பெருமழைக்கண்’ என்பது அழகான சொற்சேர்க்கை. பெரிய குளிர்ச்சி பொருந்திய கண் என்றும், பெரிய நீர்ப்படலமுடைய கண் என்றும் பொருள் தரும்.
——
பூ ஒத்து, ஏ ஒத்து
——-
தலைவியின் கண்கள் மலர் போல இன்பத்தையும் அம்பு போல துன்பத்தையும் ஒருங்கே தருவதை தலைவன் பூ ஒத்து, ஏ ஒத்து என்றான். அலமருதல் என்பதற்கு சுழன்றாடுதல் என்று பொருள். இப்பாடலில் அலமருதல் என்பது மனஞ்சுழலுதல், கலங்குதல் ஆகிய பொருள்களை ஏற்கும். தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் இதை ‘ அலமர லாயம்’ எனக் குறிக்கிறார். தலைவியின் கண்கள் அலமலருதலைத் தலைவனிடத்தே உண்டாக்குவதை பல சங்கப்பாடல்கள் சொல்கின்றன. கலித்தொகை 57 ஆவது பாடலில் வரும் “தேம்பாய அவிழ் நீலத்து அலர்வென்ற அமர் உண்கண் நிறம் பாய்ந்த …. கணையினும் நோய் செய்தல் கடப்பன்றோ” வரியில் தலைவின் கண்கள் அம்புக்கு ஒப்பிடப்படுவதை வாசிக்கலாம். கலித்தொகை 73 ஆவது பாடலில் வரும் வரி,” அலமரல் உண்கண்ணார்” என்றே சொல்கிறது; சீவகசிந்தாமணியோ “சேந்தொத்து அலர்ந்த செந்தாமரையன்ன வாட்கண்” என இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. ஆயுதமாக்கப்பட்ட அழகு, ஆயுதமாக்கப்பட்ட கண்கள் தலைவனைக் கட்டுப்படுத்துவதும், காமநோயால் ஏற்பட்ட காயம் தலைவனுக்கு பொதுவெளிக்காட்சியாக மாற அது தோழனும், உலகும் அறியுமாறு இருப்பதையும் இப்பாடல் சொல்கிறது. தலைவியின் கண்களின் வீச்செல்லைக்குள் தலைவன் சிக்குண்டு இருக்கிறான்.
———-
பரீஇ, குரீஇ
——
பரீஇ, சொல்லிசை அளமெடை, குரீஇ இயற்கை அளபெடை. தலைவி பெரிய மழைக்கண்கள் உடையவள் மட்டுமல்ல. அவள் தக்க சமயத்தில் தினையுண்ண வரும் குருவிகளை ஓட்டுபவள், இனிய் மொழியைப் பேசுபவள் (தேமொழி), திரண்ட மென் தோள்களை உடையவள். இதற்கு உ.வே.சா. குருவியைபோன்ற தலைவியின் குரலினிமையை அறிந்தவன் ஆகையால் தேமொழி என்றும், பின்னர் பழகித் தோள் இயல்பை அறிந்தவன் ஆதலினால் திரண்ட மென் தோள் உடையவள் என்றும் அம்முறையே கூறினான் என்று உரை எழுதுகிறார். மேலும் அவர் தினை வளர்ந்த இடத்தில் பருத்தியை விதைத்து அத்தினை முதிர்ந்து கொய்யப்பட்ட பின்னர் பருத்தி விளைய அதனைக் கொள்ளுதல் மலைவாணர் வழக்கம் என்றும் எழுதுகிறார். உ.வே.சா.வின் விளக்கம் இப்பாடலில் மூன்றாவது வரியில் வரும் ‘மாமலைப் பரீஇ’ என்பதற்குப் பொருத்தமாக இருக்கிறது. பருத்திக்குரிய பெயராகிய பருவியென்பது பரீஇ என்றும், குருவி என்பது குரீஇ என்றும் வந்தன.
தினைப்புலத்தில் பருத்தியை விதைத்தலைப் பெருங்கதையில் “பருவி வித்திய பைந்தாட் புனம்” என்றும், பருத்தியை விதைத்த புனத்திற் குருவியை ஓட்டுதலை சுந்தரரின் திருவையாறு பதிகத்தில், “பருவி விசசி மாலைசாரற் பட்டை கொண்டு பகாடடிக் குருவி யோப்பிக் கிளிகடிவார்” என்றும் கூடுதலாக வாசிக்கலாம்.
———
No comments:
Post a Comment