குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-74
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் கூறியது
இயற்றியவர்: படுமரத்து மோசிகீரனார்,
குறுந்தொகையில் பாடல் எண்; 75
திணை: மருதம்
————
நீ கண்டனையோ கண்டார்க்கேட் டனையோ
ஒன்றுதெளிய நசையின மொழிமோ
வெண்கோட் டியானை சோனை படியும்
பொன்மடலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே
———
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
பாண, தலைவரது வரவை நீ கண்டனையோ, நீ நின் கண்ணாற் கண்டாயோ? அன்றித் தலைவனைக் கண்டாரைக் கேட்டறிந்தாயோ? அங்ஙனம் பிறர்பால் கேட்டனையாயின், யார் வாயிலாகக் கேட்டாய்? உண்மையாக ஒன்றை அறிய விரும்பினேம். ஆதலின் சொல்வாயாக. சொன்னால் வெள்ளிய கொம்பையுடைய யானைகள், சோணையாற்றில் துளைந்து விளையாடும், பொன் மிக்க பாடலிபுத்திர நகரத்தைப் பெறுவாயாக.
———-
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே
——-
தலைவனுடைய வரவைப் பல காலமாக எதிர்பார்த்தும் அவன் வராததால் சலிப்புற்ற தலைவி பாணனின் தூதையும், மொழியையும் சந்தேகப்பட்டு நீ கேட்டாயா, நீ பார்த்தாயா, யாரிடமிருந்து கேட்டாய் எனப் பாணனைப் பலமுறை வினவினாள். இப்படி அவள் பலமுறைக் கேட்டது அவள் காதலையும் அது சார்ந்த பதற்றத்தையும் புலப்படுத்திய குறிப்பானதால் இப்பாடல் மருதத்திணையாக வகைப்படுத்தபடுகிறது. கேட்டனையோ, மொழிமோ ஆகிய சொற்களிலுள்ள ஓகாரங்கள் வினாக்கள். தொலகாப்பியம் கற்பியல் ஆறாம் சூத்திரத்திற்கு தலைவன் வருகின்றான் என்று உழையர்க்குக் கூறியது என்ற இளம்பூரணர் உரையும், அதே இயலில் எட்டாம் சூத்திரத்திற்கு தலைவன் வரவைத் தலைவி விரும்பிக் கூறியது என்ற நச்சினார்க்கினியர் உரையும் காதலில் தவித்து தலைவனை எதிர்பார்த்திருப்பது காதலின் முக்கிய கவிநிகழ்வுகளில் ஒன்று எனப் புலப்படுத்துகின்றன.
——-
சோணை நதியும் பாடலிபுத்திர நகரமும்
———
சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் உரை சோணையை நதி எனக் குறிப்பிடுகிறது. பெருங்கதையில் வரும் “பாடலி பிறந்த பசும்பொன் வினைஞரும்’ என்ற வரி பாடலிபுத்திரம் செல்வம் மிக்க நகரம் என்று சொல்கிறது. அதை அகநானூற்றுப் பாடல் 265 இல் வரும் “பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர், சீர்மிகு பாடலி” என்ற வரி உறுதி செய்கிறது. தலைவி பாணனிடம் நீ சொல்வது உண்மையாக இருக்குமானால் ‘வெண்கோட் டியானை சோனை படியும் பொன்மடலி பாடலிபெறீஇயர்’ என்று கூறுவது செல்வம் பெற்று வாழ்வாயாக என்று பொருள் பெறும். அதை தலைவி தொடர்ந்து வருவதாக சொல்லிவிட்டு வராமால் இருக்கின்ற தலைவனின் பொய்யையும், பாணனின் பொய்யிற்கு நிகரான, பெரும் பொய்யாக பெரும்பரிசைப் பெறுவாய் என சலிப்பில் கூறினாள் என்றும் வாசிக்கலாம். ‘வெண்கோட் டியானை சோனை படியும்’ என்றது யானைகள் துளைந்து விளையாடும் சோணை ஆறு என்பதைக் குறிப்பதற்காக.
காதலர் வரவை நீ கண்டனையோ, கேட்டனையோ?, யார்வாய்க் கேட்டனை? நசையினம்; மொழிமோ பாடலிபெறீஇயர் என உ.வே.சா. இப்பாடலுக்கு முடிபு எழுதுகிறார்.
——-
No comments:
Post a Comment