Tuesday, July 30, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-93

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-93

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

இயற்றியவர்: கந்தக்கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 94

திணை: முல்லை

————

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்

தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே

யானே மருள்வேன் ரோழி பானாள்

இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்

என்னாகுவர்கொல் பிரிந்திசி னோரே 

அருவி மாமலைத் தத்தக்

கருவி மாமழைச் சிலைத்தருங் குரலே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மிகுந்த குளிர்ச்சியையுடைய மழைக்காலத்திற்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே சிவந்தன. அவற்றைக் கண்டு இது கார்பருவமென்று நானா மயங்குவேன்? மயங்க மாட்டேன். ஆயினும் என்னைப் பிரிந்திருப்பவராகிய, இன்னும் என்பால் வந்து சேராமல் தனித்து இருக்கும் தலைவர், அருவியானது பெரிய மலையில் தத்தி வீழும்படி, தொகுதியையுடைய பெரிய மேகங்கள் முழக்கும் ஓசையை நடு இரவில் கேட்டால் முன்னரே பிரிவினால் வருந்தும் அவர் மீண்டும் எந்த நிலையை அடைவாரோ?

——-

பித்திகத் தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே

——

பித்திகம் என்பது பிச்சிப் பூ,  இதை செம்முல்லை எனவும் வேறு சிலர் குறிப்பிடுகின்றனர். பெருமழைக்காலத்தில் சிவக்க வேண்டிய பிச்சிப்பூக்கள் மேகம் முழங்கிய மாத்திரத்திலேயே சிவந்தன ஆகையால் இவை பேதமையுடையன என்பதைக் குறிக்க ‘பெருந்தண் மாரிப் பேதை பித்திகத்தரும்பு’ என்றாள். இந்த பிச்சி மாரிக்காலத்து அரும்பி மலருமென்பதை குறுந்தொகைப் பாடல் 42 இல் வரும் வரி “ மாரிப் பித்த்கத்து நீர்வார் கொழுமுகை” என்ற வரி விளக்கும்.  தலைவி தன் பருவத்துக்கு முன்பே சிவந்த பூவை பொய்சொல்லும் குறிப்பானாக (lying signifier) இங்கே காணவில்லை என்பது கவனிக்கத்தக்கது; ஏனென்றால் இயற்கை சார்ந்த பொருட்களுக்கு எதையேனும் அறிவிக்க வேண்டிய நோக்கம் இருக்கவேண்டியதில்லை. இதைப் பற்றி எழுதுகிற உ.வே.சா. பருவத்தை தெரிவிக்கும் பொருள்களின் மேல் அறியாமையை ஏற்றிக்கூறுதல் மரபு என எழுதுகிறார். அதாவது இது ஒரு பண்பாட்டு  குறியீட்டு முறையாக ( cultural code) நிலைபெற்றிருக்கிறது. 

—-

யானே மருள்வேன் ரோழி பானாள்

——-

பானாள் என்பது பால் + நாள், பால் - பகுதி, நடுப்பகுதியைக் குறித்தது. பானாள் நடு யாமம்; இது நடுநாளெனவும் வரும். யானே என்பதில் ஏகாரம் எதிர்ம்றையானது. யானே மருள்வேன்,  நானா மயங்குவேன் என்று  கேட்பதாகும்.  கார்காலத்துக்கு முன்பாகவேப் பூத்த செம்முல்லையைப் பார்த்து நானா மயங்குவேன் தலைவன் திரும்பிவருவதற்கான மழைக்காலம் வந்துவிட்டதென்று தலைவி தோழியைப் பார்த்துக் கேட்கிறாள். தலைவன் கார்ப்பருவத்து இடிமுழக்கமிடுவதைக் கேட்டு தன்னை நினைத்து சென்ற வேலையை முடிக்காமல் திரும்பி வந்துவிடுவானோ என்று தலைவி வருத்க்துவதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. மேகம் இடி முழங்கியதை இருவரும் ஒருங்கு கேட்டல் இனிமையானது என்றும் தனியராய்க் கேட்பது தகாது என்றும் கருதினாள்.

—-

என்னாகுவர்கொல் பிரிந்திசி னோரே

——

பிரிந்திசினோர்- தலைவரைப் பிரிந்தோராகிய பிற மகளிரென்றும் பொருள்படும். இசின் படர்க்கையில் வந்தது; என்னாகுவர் கோல் என்பது மீண்டு வருவாரோ என்பதாகும். மழை பெய்தலினால் அருவி உண்டாவதால் ‘அருவி மாமலை தந்த’ என்றாள். சிலைதரும் என்பது ஒரு சொல்; யானே என்பதிலுள்ளது அல்லாது ஏனைய ஏகாரங்களும் கொல்லும் அசைநிலைகள். யானே மருள்வேனென்றபடியால் ஆற்றுவலென்பது படவும், என்னாகுவர் கொல் பிரிசிந்தினோரே என்றமையால் தான் கவலைப்பட்டதற்குக் காரணம் தோன்ற தலைவி கூறினாளாயிற்று. 

தோழி, பித்தகத்தின் அரும்பு மிகச் சிவந்தன, யானே மருள்வேன்?, பிரிந்திசினோர் இன்னும் தனிமையில் மழைக்குரலைக் கேட்டபின் என்னவாகுவார்? தலைவர் இம் மேக முழக்கத்தைக் கேட்டு சென்ற வேலையை முடிக்காமல் திரும்பி வந்துவிடுவாரோ? 

No comments: