Tuesday, July 16, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-84

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-84

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனின் தூதுவனாக வந்த பாணனிடம் கூறியது
இயற்றியவர்: வடமன் தாமோதரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 85

திணை: மருதம்

————

யாரினு மினியன் பேரன் பினனே

உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்

சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

யாண ரூரன் பாணன் வாயே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

ஊரினுள் இருக்கும் குருவியின் துள்ளிய நடையையுடைய சேவல், கர்ப்பம் முதிர்ந்த பெண்குருவிக்கு பொறையுயிர்த்தற்குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு தேன் பொதிதலைக் கொண்ட இனிய கோலையுடைய கரும்பினது பூ மணம் வீசாத வெள்ளிய பூவை கோதி எடுக்கும். புதுவருவாயையுடைய ஊருக்குத் தலைவன் பாணனது சொல்லின் அளவில் எல்லோரிலும் இனிமையை உடையவன், தலைவியின்பால் பெரிய அன்பினை உடையவன்; உண்மையில் அவன் அங்ஙனம் இலன்.

——-

யாண ரூரன் பாணன் வாயே

——-

தோழி, பாணன் பொய்யுரைப்பதை நன்கு அறிந்தவள். பாணன் தலைவன் யாரினும் இனியன் பேரன்பினன் எனக் கூறக்கேட்ட தோழி அவனது சொல்லால் மட்டுமே தலைவன் அங்ஙனம் இருத்தலன்றிச் செயலில் இல்லையெனும் கருத்துப்படக் கூறி அவள் வாயில் மறுப்பாதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.  ஊர்க்குருவியின் சேவல் கூட சூல் முதிரும் பெண் குருவிக்கு மென் கூடு அமைக்கும் அன்புடையது அந்த இயல்பு தலைவன் பால் இல்லை எனத் தோழி உரைக்கிறாள். பாணன் வாய் என்பது பாணனுக்காக நின்ற ஆகுபெயர். வாயே என்பதில் ஏகாரம் பிரிநிலை, வாய்ச்சொல்லில் மட்டுமே அன்புடையவன் என்ற பொருளைச் சுட்டியது. 

——

தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்

——-

இப்பாடலில் வரும் ஊர்க்குருவியின் சேவல் தன் சூல் முதிர்ந்த பெண் குருவிக்காக மென் கூடு அமைக்கும் உவமை மிகவும் அழகானது. பேடை என்ற சொல் இப்பாடலில் குருவியில் பெண்ணைக் குறிக்கும். பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே  எனத் தொல்காப்பியம், மரபியல் சூத்திரம்  3 பெண்ணைக் குறிக்கும் சொற்களை வரிசைப்படுத்துகிறது.  ஊர்க்குருவியின் சேவல் துள்ளு நடையை உடையது. அது சூல் முதிர்ந்த தன் பெண் குருவிக்காக மென்மையான கூட்டினை அமைக்கிறது. அதற்காக அது கிடைத்த சுள்ளியை பொறுக்கி வருவதில்லை; தேர்ந்தெடுத்த கரும்பின் தேம் பொதி கொண்ட மணமற்ற கரும்பின் வெண் பூவைக் கொண்டுவந்து கட்டுகிறது. தேம் பொதி என்றது தேம் தேன் என்பதன் திரிபு தேனைப் போல இனிமையானது என்ற பொருளுடையது.  மணம் ஒவ்வாமை சூல் முதிர்ந்த பெண் குருவிக்கு ஏற்படக்கூடாது என மணமற்ற பூவைத் தேர்ந்தெடுத்தது. தேம் பொதி என்றது தேனடையையும் தேன் போன்ற இனிய சாறு என்பதையும் ஒருங்கே மேலும் குறிக்கும். தீங்கழை என்பதும் சுவையினிமையுடைய கரும்பின் கோல் எனப் பொருள் பெறும்.  வேறொன்றிற்குத்  தன் சூல் முதிர்ந்த பெண் குருவி செல்லாமல் தடுத்து தன்னையே உண்ணச்செய்யும் தேம்பொதியை உடையதேனும் தன் கருமமே கண்ணாகிப் பூவைக் கொழுவி வந்தது அச்சேவலின் பேரன்பைப் புலப்படுத்துகிறது.  உள்ளூர்க் குரீஇ – என்பதில் குரீஇ – இயற்கை அளபெடை.

—-

உட்குறிப்பு

——

இனிய தேனடையும், தீங்கழையும் இருக்கக்கூடிய மணமில்லாத வெண்மை நிறத்திலான கரும்பின் பூவைக் குருவி கொழுவிக் கொண்டு வரும் ஊரன் என்றது அறத்தோடு பொருந்திய இன்பத்தைத் தரும் தலைவி இருக்க அவள் பாலன்றி, வெறும் வாய்ச்சொல் பாணனை தூது அனுப்பி விட்டு அன்பும் கற்பும் இல்லாத பரத்தையரை தலைவன் விருப்பினான் என்ற உட்குறிப்பினை உடையது. ‘யாணர் ஊரன்” என்ற அடைமொழி அவன் பரத்தையர்க்கு பயனுள்ளவனாக இருப்பதைக் குறிப்பதாகும். அதனால் தோழி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள். 

 

No comments: