குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-76
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
இயற்றியவர்: மதுரை மருதன் இளநாகனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 78
திணை: பாலை
————
அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனிற் றவறோ விலவே வெஞ்சுரத்
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்
கெளிய வாகிய தடமென்றோளே
———
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தோழி, ஒன்று சொல்வேன் கேட்பாயாக, வெவ்விய அருவழியில், இறந்த வழிப்போக்கர்களுடைய உடலை மறைத்த, தழையைச் செயற்கையாக இட்டக் குவியலானது, உயர்ந்த நல்ல யானைக்கு இட்டநிழலைத் தருதற்குரிய பொருளாகப் பயன்படும், கடத்தற்கரிய பாலை நிலத்தில் என்னைப் பிரிந்து சென்ற தலைவர்திறத்து, மெலிந்தனவாகிய என் தோள்கள் தவறுடையனவென்று கூறின் யாவரும் தவறு இல்லாதன.
———
தன்னையும் தன் தோளையும் வேறுபடுத்தி உணர்வது போல கூறுதல்
——-
தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமையால் தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் தலைவியின் மெலிந்த தோள்கள் மையக்குறிப்பானாக (central signifier) இருக்கின்றன. ‘நான் ஆற்றியிருக்க அவர் மணந்த தோள்கள் அவர் சென்ற வழியிலுள்ள கஷ்டங்களை நினைத்து மெலிந்தன; தம்மோடு தொடர்புடையாரது துன்பத்துக்கு மெலிதல் தவறில்லைதானே என்று தலைவி தன்னையும் தன் தோளையும் வேறுபடுத்தி உணர்வது போல தோழியிடம் கூறுகிறாள். தானாகவே தன் உடலுறுப்புகள் காதல் கொண்டவரை நினைத்து மெலிந்துவிட்டன என்று கூறுவது ஒரு மரபு. தொல்காப்பியம் பொருளியல் எட்டாம் சூத்திரம்,
“ வண்ணம் பசந்து புலம்புறு காலை
உணர்ந்த போல வுறுப்பினைக் கிழவி
புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே” எனும் விதியைப் பற்றியது போலவே தலைவி இப்பாடலில் பேசுகிறாள்.
தன்னையும் தன் தோள்களையும் வேறுபடுத்தி, அகநானூற்றுப்பாடல் 267 இல் தலைவி “வாளே ரெல்வளை நெகிழ்ந்த தோளே தோழி தவறுடை யவ்வே” என்று சொல்கிறாள். ஐங்குறுநூறு 11 ஆவது பாடலில் தலைவி “துறைகே ழூரன் கொடுமை நாணி, நல்லனென்றும், அல்லனென்னுமன் றடமென்றோளே” என்று பேசுகிறாள்.
———
மெலிந்த தோள்களின் தவறும் தவறின்மையும்
——-
களவு காலத்தில் சிறிது பொழுதேனும் பிரிவதற்கு வருந்திய தோள்கள், கற்பு காலத்தில் எப்படி நெடுங்காலம் பிரிவதற்கு உடன்பட்டன என்று தலைவி தன்னைத்தானே நொந்துகொள்கிறாள். பிரிவதற்கு உடன்பட்டதால் தன் தோள்கள் தவறிழைத்தவை என்றும் தலைவன் சென்ற பாதையின் கொடூரங்களை நினைத்து தோள்கள் மெலிவுற்றதால் அவை தவறிழைக்காதவை என்றும் தலைவி கூறுகிறாள். ‘தவறெனிற் றவறோ விலவே’ என்பதையும் “கெளிய வாகிய தடமென்றோளே” என்பதையும் கூட்டி வாசிக்க வேண்டும்.
——-
தலைவன் சென்ற பாலை நிலத்துக் கொடூரங்கள்
——
வெயிலின் கொடுமை, ஆறலைக் கள்வர்களின் அச்சம், பிணக்குவியல்களின் தோற்றம், துணையுடன் அலைவுறும் யானையின் நிலை, தங்குவதற்கு நிழலற்ற பாலை ஆகியவற்றைத் தலைவன் சென்ற பாதையில் நினைத்து தலைவியின் தோள்கள் தானே மெலியத் தலைவி துயறுற்றாள். இவற்றை சொல்லும் “வெஞ்சுரத்
துலந்த வம்பல ருவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்” வரிகளில் பதுக்கை என்ற சொல் கவனிக்கத்தக்கது. பாலை நிலத்திற் செல்வோரை ஆறலைக் கள்வர் கொன்று அவர்களின் உடல்களைத் தழைக்குவியலால் மூடிவிடுதல் வழக்கம்; கற்குவியலாலும் மூடுதலும் வழக்கம் என்று உரை எழுதுகிற உ,வே.சா அப்படிப்பட்ட தழைக்குவியல் பதுங்கியிருக்க ஏற்ற இடமாகையால் அவ்விடம் பதுக்கை எனப் பெயர்பெற்றது என்று விளக்கமளிக்கிறார். தலைவன் சென்ற வழியிலிருந்த பதுக்கை யானை நிழலிடம் ஒதுங்குவதற்கு ஏற்ற வகையில் உயரமாக இருந்தபடியால், “பதுக்கை நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்” என்றாள். அரிய கானம் என்று அவள் சொல்லியது ஆறலைக்கள்வரால் உண்டாகும் ஏதத்தையும் இயல்பாக உள்ள வெம்மையையும் வைத்து பாலை நிலத்தைத் தலைவி குறித்ததாகும்.
இவ்வளவு துன்பங்களைத் தலைவன் எதிர்கொள்வதாகத் தலைவி நினைத்தாளென்றால் அவள் தோள்கள் தானே மெலியாமல் என்ன ஆகும்?
—-
No comments:
Post a Comment