Saturday, July 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-81

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-81

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: கடுவன் மள்ளனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 82

திணை: குறிஞ்சி

————

வாருறு வணர்கதுப் புளரி புறஞ்சேர்

பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்

யாரா குவர்கொறோழி சாரற்

பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்

கொழுங்கொடி யவரை பூக்கும்

அரும்பனி யச்சிரம் வாரா தோரே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புலத்திலுள்ள குறவனது சிறிய தினையரிந்த மறுகாலிடத்தில், கொழுவிய அவரைக்கொடி மலர்கின்ற, பொறுத்தற்கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வாராத தலைவர், நீட்சியையுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து அழுதலை ஒழி என்று கூறி நம் அழுத கண் முன்பு  துடைப்பார். இப்போது எத்த்னமையை உடையராவரோ?

————

தலைவன் தலைவியின் கூந்தலை அழகுபடுத்துதலும் கண்ணீரைத் துடைத்தலும்

————- 

தலைவன் தலைவியின் கூந்தலை அழகுபடுத்துதலும் கண்ணீரைத் துடைத்தலும் இப்பாடல் பேசும் மென் தருணங்கள். தலைவியின் கூந்தலை தலைவன் அழகுபடுத்துதலை நாம் பல சங்கக்கவிதைகலில் வாசிக்கிறோம்.  சிலப்பதிகாரத்தில், “ வணர் சுரியைம்பாலோய்”  என்றொரு வரி இதைக்குறிக்கும். கலித்தொகை 58 ஆவது பாடலில் வரும் “வார் உறு வணர் ஐம்பால்”, அகநானூறு 102 ஆவது பாடலில் வரும் வரி, “ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி’, கலித்தொகை 42 ஆவது பாடலில் வரும் வரி “தாழ்இருங் கூந்தல் என் தோழியைக் கைகவியாச் சாயல் இன் மார்பன், சிறுபுறம் சார்தர” ஆகியன இப்பாடலோடு இணைத்து வாசிக்கத்தக்கன.  தன்னைப் பிரிந்தபோது தலைவி வருந்துதலை அறிந்த தலைவன் அவள் கூந்தலை உளரியும், கண்ணீரைத் துடைத்தும் தலையளி செய்தும் பிரிந்தானாகையால் அவற்றை நினைத்து இன்னும் வாராமலிருக்கிறான் எனத் தலைவி வருந்தினாள்.

——-

மாறுகால் நிலத்தில் கொடி பரப்பிய அவரை

——

குறவனுக்குரியது சிறு தினை. தினைக்கதிரை அரிந்தபின் அதன் அடியில் மீண்டும் கிளைத்து கதிர் உண்டாகும்; அதனை மறுகால் என்றழைப்பர். அந்த மறுகாலில் அவரை வளர்ந்து கொடிபரப்பி இருப்பதாக தலைவி குறிப்பிடுகிறாள். வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள  என தொல்காப்பியம், உரியியல் 21 ஆம் சூத்திரம் குறிப்பிடும். குறவன் ஒரு முறை அறுத்த கதிரால் பயன் பெற்றவன்; பின்னும் மறுகாலில் கிளைக்கும் கதிராலும் பயனைப் பெறுவதற்கான காலமும் வந்தது எனத் தன்னை தலைவி அவரைக்கொடி தளைத்ததோடு ஒப்பிட்டு சொல்கிறாள். அவரை முதற்பூப் பூக்கும் முன்பனியின் தொடக்கத்தில் வருவதாய்க் கூறிச் சென்றவர் அது தினையின் மறுகாலில் மறுமுறை பூக்கும் பின்பனியிலும் வரவில்லை எனக் கலங்கினாள், தலைவனிடம் மென்மையும் வனமையும் இணைந்தே காணப்படுவதைக் கண்டு வியந்து வாராதோர் என்ன மதிரியான மனிதனாக மாறிவிட்டானோ எனப் புலம்பும் விதமாக ‘யார் ஆகுவர்’ எனப் புலம்பினாள்.

——

உட்குறிப்புகள்

——

தலைவி தலைவன் தன் முதுகுப்புறம் நின்று கூந்தலை உளரி, கண்ணீரைத்த் துடைக்கும் தருணத்தில் அவனுடைய முழு ஆளுமையையும் அடக்குவது இப்பாடலின் மிகச் சிறந்த உட்குறிப்பாகும். மறுகாலில் வளர்ந்து கொடி பரப்பி மீண்டும் பூக்கும் அவரை துல்லியமான விபரங்களினால் ஆன ஒப்பீடுகளாலான உவமையாகும். இப்பாடலில் கண், ஆகுபெயராய் கண்ணீருக்காய் நிற்கிறது.  தோழி, வாராதோர், முன்பு கண்ணீர் துடைத்தவர், கூந்தல் உளரியவர், இப்போது யார் ஆகுவர் கொல் என்பது காதலின் அழகிய நினைவையும் நனவையும் துன்புறுத்தும் கூற்று. இப்பாடலை இயற்றியவருக்குக் ‘கடுவன்’ மள்ளனார் என்ற பெயர் இருப்பது ஆச்சரியம்தான். 

—— 

No comments: