Tuesday, July 9, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-78

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-78

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

இயற்றியவர்: குடவாயில் கீரனக்கனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 79

திணை: பாலை

————

கான யானை தோனயந் துண்ட

பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை

அலங்க லுலவை யேறி யோய்யெனப்

புலம்புதரு குரல் புறவுப்பெடை பயிரும்

அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச்

சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்

கொல்லே மென்ற தப்பற்

சொல்லா தகவறல் வல்லு வோரே.

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, நான் தலைவரின் பிரிவைத் தாங்க மாட்டேன் என்பதைக் கூறிய தவற்றினால் அவர் என்னிடம் சொல்லாமல் நீங்குவதில் உறுதியுடையவராக இருந்தார்.  காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொரிந்த அடியையுடைய ஓமை மரத்தினது, காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றல் கொம்பில் ஏறி ஒய்யென்று தனிமையையும் வருத்ததையும் வெளிப்படுத்தும் குரலையுடையனவாகிய ஆண்புறாக்கள், பெண் புறாக்களை அழைக்கும் பாலை நிலத்தைச் சேர்ந்த அழகிய குடிகளையுடைய சிற்றூரில் தங்கிவிட்டாரோ?

—————

கான யானை தோல் நயந்து உண்ட
———

இப்பாடலில் தலைவி விவரிக்கும் பாலை நிலக்காட்சி கற்பனையும், தன்னுணர்ச்சியை பிறவற்றின் மேல் ஏற்றிக் கூறும்பண்பும் கொண்டிருப்பதால், அதை பிரதி சார் நிலக்காட்சி (textual landscape) என்று அழைக்கலாம். பாலை நிலத்தில் உணவு கிடைக்காத யானைகள் ஓமை மரத்தின் பட்டைகளை உரித்துத் தின்னும்.  ஓமை என்ற பெயர் மாமரத்தைக் குறிக்கும் என செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி சொல்கிறது; அதன் இன்னொரு பெயராக உகா என்பதையும் குறிக்கிறது. குறுந்தொகை 260 ஆவது பாடலில் வரும்  “புன்றா ளோமைய சுரனிறந் தோரே” என்ற வரியிலும்  ஐங்குறுநூறு 316 ஆவது பாடலில் வரும் “ புல்லரை ஓமை” என்ற வரியிலும் ஓமை என்ற சொல் மாமரத்தைக் குறிக்கிறது. 

யானைகள் உரித்து உண்ட மரப்பட்டைகள் உடைய மரங்களின் கிளைகளிலிருந்து ஆண் புறா பெண் புறாவை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ என்று தலைவி சொல்வது பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் இடத்தில் தங்கினால் என்னைத் தேடி வர அது அவரைத் தூண்டும் என்ற குறிப்பினை உள்ளடக்கியது.

திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  புலம்புதரு குரல்வாய்ப் புறவுப் பேடை பயிரும் அத்தம் என்றதனானே, ‘இயற்கையில் நந்திறத்து பேரன்புடையார், அதனைக் கேட்டுப் பொருள் கடைக்கூட்டாது மீண்டிடுவாரோ? என்பதாம் என்று விளக்கமளித்து இதை இறைச்சி என வகைப்படுத்துகிறார்.

——-

புறவும் பெடையும்

——

புறவு – புறா புற என்றாகி உகரம் ஏற்றது. குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர் மயங்கியல் 32).  பெடை – பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).  புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). ஓய்யென - என்பது விரைவுக் குறிப்பு.  ஓல்லேம்- தான் தலைவர் பிரிந்து செல்வதற்கு உடன்படாததால் அது பற்றி சினந்து பாலை நிலத்திலேயே தங்கிவிட்டாரோ என்று தலைவி அச்சமடைவதும் உட்குறிப்பு.

———

தலைவன் சொல்லாமல் பிரிதல்

——-

தலைவன் தலைவியிடம் சொல்லாமல் பிரிந்து செல்வதும் உண்டு என்பது இப்பாடலால் புலப்படும். தொல்காப்பியம் கற்பியல் ஏழாவது சூத்திரத்திற்கு உரையெழுதும் நச்சினார்க்கினியர் இப்பாடலை மேற்கோள் காட்டி, “புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந் திடைச்சுரத் திறைச்சியும்  வினையுஞ் சுட்டி, அன்புறு தக்க கிளத்த றானே, கிழவோன் செய்வினைக் கச்சமாகும்’ ஆதலின் “புலம்பு தரு குரல்வாய்ப் புறவினைப் பெடை அழைக்கும் வருத்தங் கண்டு வினை முடியாமல் வருவாரோவென அஞ்சியவாறு காண்க” என்று எழுதுகிறார். வல்லுவோர் என்றது அங்ஙனம் பிரிந்து செல்லுதல் நெஞ்சின் வன்மை இருந்தாலன்றி இயலாது என்ற குறிப்பினை உடையது.  ஓ, தாம், ஏ ஆகியன அசைநிலைகள். 

——


No comments: