Monday, July 8, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-77

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-77

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழன் தலைவனிடம்  கூறியது

இயற்றியவர்: நக்கீரர்

குறுந்தொகையில் பாடல் எண்; 78

திணை: குறிஞ்சி

————

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி

முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்

சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப

நோதக் கன்றே காமம் யாவதும்

நன்றென வுணரார் மாட்டும்

சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய, நெடிய வெள்ளிய அருவியானது , அறிவுடைய கூத்தரது முழவைப் போல ஒலித்து பக்கமலையின்கண் வீழ்வதாக  விளங்குகின்ற மலையையுடைய தலைவ, காமமானது சிறிதும் நன்மையென உணரும் அறிவில்லாதாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது  வெறுக்கத்தக்கது.

———

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி

————

காமநோய்க்கு ஆட்பட்ட தலைவனை நேரடியாகப் பேதை என்றழைக்காமல் அவன் உணரும் வகையில் அவனுடைய தோழன் அவனை நோயிலிருந்து விடுபடுமாறு இந்தப் பாடலில் அறிவுறுத்துகிறான். மிக உயர்ந்த மலையிலிருந்து விழும் அருவி மிகத் தாழ்ந்த நிலத்தில் விழுவது போல அந்த அருவியையுடைய நிலத்துக்கு சொந்தக்காரனான தலைவன் தன் பெருமைகளெல்லாம் நீங்குமாறு காமம் கொண்டது தகாது எனத் தோழன் சொல்கிறான். வெற்பன் என்பது குறிஞ்சி நிலத் த்லைவன் எனப் பொருள்படும். அருவி  எழுப்பும் சப்தத்தை அறிவுடைய கூத்தர்களின் முழவொலிக்குத் தோழன் ஒப்பிடுகிறான். அருவி, முழவொலி போலத் தலைவனின் களவொழுக்கம் பலராலும் அறியப்படும் என்பது உட்குறிப்பினால் தலைவனுக்குத் தோழனால் உணர்த்தப்படுகிறது. 

——-

நோதக் கன்றே காமம் யாவதும்

———

‘நோதக் கன்றே காமம் யாவதும்’ என்ற தொடர் காமம் வெறுக்கத்தக்கது என்பதையும் கூடவே ‘பெரும்பே தைமைத்தே’ என்ற தொடர் பெரிய அறிவின்மையையுடயது என்றும் குறிக்கின்றன. காமம் சரியான நபரைச் சென்றடையாமல் போய்விட்டால் அது அறிவற்றதாகிவிடுகிறது என்பதை திருக்குறள் 422 “ சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நற்றின்பா லுய்ப்ப தறிவு” உட்குறிப்பாகக் கொண்டிருக்கிறது. திருக்குறள் 1255 இக்கு உரை எழுதுகிற பரிமேலழகர் “ காம நோயுறாதார் மானமுடையார்” என்றே எழுதுகிறார். தமிழண்ணல் காமம் தன்னைச் சிறிதும் ‘நல்லது’ என எண்ணாதவரிடத்தும் தானே சென்று, அவரிடம் தங்கும்படியான மிகப் பேதைமையை உடையது என மேலும் விளக்கமளிக்கிறார். காமத்தின் இயல்பு இவ்வாறாக விளக்கப்படுகிறது. 

——

நன்றென வுணரார் மாட்டும்

———

தான் ஒரு மலைவாணர் மகள்பால் விருப்பம் கொண்டேன் என்று சொல்லும் தலைவனை நோக்கி நீ கொண்ட காமம், இது நன்று, இது தீது என்று அறியாத ஒருத்தியின்பால் சென்றதனால் அது வெறுக்கத்தக்கது என்று தோழன் கூறுகிறான். தலைவனை நேரடியாகப் பேதை என்று சொல்லாமல் உனது காமம் பேதைமையுடையது என்று குறிப்பால் அறிய வைத்தான். 


‘நோதக் கன்றே”, “பெரும்பே தைமைத்தே”, ஆகியவற்றிலுள்ள ஏகாரங்கள் அசைநிலைகள். ‘மாட்டும்’ என்ற சொல்லிலுள்ள உம்மை இழிவுச் சிறப்பு பெற்றது.

——-


No comments: