Thursday, July 4, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-73

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-73

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவிடம்  கூறியது

இயற்றியவர்: விட்டகுதிரையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 74

திணை: குறிஞ்சி

————

விட்ட குதிரை விசைப்பி னன்ன

விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்

யாந்தற் படர்ந்தமை யறியான் றானும்

வேனி லானேறு போலச் 

சாயின நென்பநம் மாணல நயந்தே

————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

அவிழ்த்துவிடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற, வளைத்து பின் விட்டமையால் மேலெழுந்து மேகத்தைத் தீட்டும் பசிய  மூங்கிலையுடைய மலைநாட்டிற்குத் தலைவன் தான் தன்னை நினைத்து மெலிதலை அறியாதவனாய் வேனிலின் வெம்மையை ஆற்றாத இடபத்தைப் போல நமது மாட்சிமைப்ப்பட்ட நலத்தை விரும்பி மெலிந்தான்.

———-

விட்ட குதிரை விசைப்பி னன்ன

———

தலைவனை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுமாறு தோழி அவனுக்காகப் பரிந்துரை செய்யும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.  ‘விட்ட’ என்ற உவமை அடை குதிரைக்கும், வளைந்து மேகம் தொடும் கழைக்கும் பொதுவாக இருக்கிறது. அவிழ்த்து விடப்பட்ட குதிரை போல, வளைத்து விடப்பட்ட கழை போல ஆகிய விசைகளை ஆண்மகனுக்கு உவமையாக சொல்லுதல் இப்பாடல் போல பல சங்கப்பாடல்களிலும் வாசிப்பதற்குக் கிடைக்கின்றன. நற்றிணை 78 ஆவது பாடலில் வரும்  ‘புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா’ என்ற வரி,  குறுந்தொகை 54 ஆவது பாடலில் வரும், ‘கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும்’ என்ற வரி, புறநானூறு 302 ஆவது பாடலில் வரும் வரும் ‘வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே’ என்ற வரி ஐங்குறுநூறு 278 ஆவது பாடலில் வரும் ‘கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்’ என்ற வரி ஆகியன இவ்வகையில் ஒப்பு நோக்கத் தக்கன. இவ்விசைகள் ஆண்மகனின் அளவற்ற, கட்டுப்படுத்த இயலாத, உணர்வெழுச்சியும், உடலெழுச்சியும் மிக்க ஆசைகளுக்குக் குறியீடுகளாகின்றன. விசும்பு தோய்தல் என்பது ஆகாயம் தொடுதல் என்று பொருள்படுமாதலால் தலைவனின் ஆசையின் வீச்சு வான் மட்டுக்கும் உயர்ந்ததாகவும் பொருள்படும்.  மூங்கில் விசைத்தெழுதலுக்கு விட்ட குதிரையின் விசைப்பை உவமை கூறிய சிறப்பினால் இப்பாடலை இயற்றியவர் விட்டகுதிரையார் என்றழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது. 

———

வேனி லானேறு போலச் சாயினனவே 

——

அவ்வளவு ஆசையும் எழுச்சியுமுடைய தலைவன் வேனிற்கால ஏறு போல சாய்ந்தனன், மெலிந்தனன் என்ற நேர் எதிர்மாறான அவனது துவளுதல்கள் அவனது விரக்த்தியின் தீவிரத்தன்மையைச் சொல்பவையாக இருக்கின்றன. இந்த உவமையானது களவு காலத்தில் காவல் அதிகமாக இருக்க தலைவியை அடைய முடியாத தலைவனுக்கும், தலைவனை அடைய முடியாத தலைவிக்கும் பொதுவாக இருக்கிறது. கூடுதலாக இயல்பாக மூங்கில் போல நிமிர்ந்து நிற்கும் தலைமைப் பண்புடைய தலைவன் தலைவியின் பொருட்டு நலம் நயந்து, மெலிந்து, தான் மெலிந்திருப்பது கூட அறியாதவனாய் கீழிறங்கி வந்தான் என்பதும் உட்குறிப்பாகும். 


தலைவன் தலைவியை மருவுதற்குரிய செவ்வியை விரும்பியவனாக இருக்க, ‘நாமும் அவனை விரும்பி நிற்கின்றோம், அவனும் இரந்து நிற்கின்றான். நாம் விரும்புவது தானே வலிய வந்ததாதலின் மறுக்காமல் உடம்படல் வேண்டும்’ என்று தோழி தலைவிக்குக் கூறினாள். 

——

No comments: