Sunday, July 28, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-92

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-92

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி கூற்று

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 93

திணை: மருதம்

————

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்

இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக்

கன்னையு மத்தனு மல்லரோ தோழி

புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே

———

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, நல்ல பெண்மை நலம் கெடவும், மேனியழகு மிக மெலியவும், எல்லாவற்றிலும் இனிய உயிர் நீங்கினாலும் அவர் பால் பரிவு கூர்ந்த சொற்களைச் சொல்லற்க, அவர் நமக்கு தாயும் தந்தையும் அல்லரோ? தலைவன் தலைவியர்பாலுள்ள அன்பு இல்லாவிடத்து ஊடல் உண்டாவது எதன் பொருட்டு?

——

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்

——

நீ தலைவனை வெறுத்தல் தகாது என்று கூறிய தோழியிடம் வாயில் மறுத்து தலைவி கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. என்னுடைய நலமும் உயிரும் தொலையுமென்றாலும் கூட அவரை ஏற்றுக்கொள்ளுதல் என் கடன்; அவர் அன்னையும் தந்தையும் போல மரியாதை செய்யத் தக்கவர் ஆனால் தலைவராகக் கருதி அளவளாவுவதற்குரிய அன்பு அவரிடத்தில் இல்லை அந்த அன்பு இல்லாத அவரோடு ஊடுவதும் அது தீர்வதும் என்ன பயனைத் தரும் நான் அவரை வெறுக்கவில்லை எனத் தலைவரிடமிருந்து அவள் அந்நியமாகி இருப்பதை தலைவி கூறினாள். இவ்வாறாக தலைவரிடமிருந்து அயன்மை தோன்றக் கூறியதால் தலைவி வாயில் மறுத்தாள் என்பது உட்குறிப்பாகப் பெறப்படுகிறது.  ‘நன்னலந் தொலைய’, ‘நலமிகச் சாஅய்’ என்ற வரியில் இரண்டு நலங்கள் குறிப்பிடப்படுகின்றன. உ. வே. சா. முன்னது பெண்மை நலம், பின்னது அழகு என்றும்  பொ. வே. சோமசுந்தரனார் முன்னது அழகு பின்னது நாணம் என்று இரண்டு நலங்களுக்கும் உரை விளக்கம் எழுதுகின்றனர்.  

—-

கன்னையு மத்தனு மல்லரோ தோழி

——

தலைவி தலைவனுடன் உள்ள உறவை அன்னையுடன் பிள்ளைக்கு இருக்கக்கூடிய உறவைப் போன்றது என்றது அந்த உறவு பிரித்தற்கரிய உறவாகும் என்பதை உணர்த்துவதற்காகும்; தந்தையுடன் இருக்கக்கூடிய  உறவைப் போன்றது என்றது அவனுடைய ஆணைக்கு அடங்கி ஒழுகுவதைப் பற்றியதாகும். அன்னையும் தந்தையும் போன்ற அவருக்கும் எனக்கும் உள்ள உறவில் காமம் இல்லை அதனால் ஊடல் கொள்வதால் எந்தப் பலனும் இல்லை என்று தலைவி மேலும் கூறுகிறாள். திருக்குறள் 1130  சொல்லும் “ ஊடுதல்  காமத்திற்கின்ப மதற்கின்பம் கூடி மயங்கப் பெறின்” என்பதை தலைவி நன்றாகவே அறிந்திருக்கிறாள். காமமில்லாமல் ஊடி என்ன பயன் என்பதால் புலவியாற் பயனில்லை என்பதை, “புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே”, என்று தலைவி மேலும் சொல்கிறாள். காமம் உள்ள இடத்தேதான் புலவியாற் பயன் என்பது உட்குறிப்பு.  எவனோ என்பதில் ஓகாரமும் கடையே என்பதில் ஏகாரமும் அசைநிலைகள். அஃது: பகுதிப்பொருள் விகுதி. சாஅய் – இசை நிறை அளபெடை. 

——

அல்லரோ தோழி

—-

மணவாழ்க்கையின் ஊடல்களையும் புலவிகளையும் பேசும் மருதத்திணை சார்ந்த சங்கக்கவிதைகளில் இப்பாடல் தலைவன் தலைவி உறவில் காம இழப்பு நேர்வதைச் சொல்வதால் சிறப்பானதாகிறது. தலைவன் தன்னளவில் பெற்றோர் போல அன்பு செய்வதற்கு உரியவனேயன்றி மனைவி போல ஊடுவதற்கும் வெறுப்பதற்கும் உரியவனல்லன் என்று தலைவி சொல்கிறாள். மண உறவு சம்பிரதாயமான பிரிக்கமுடியாத உறவாக நீடித்திருப்பதை தலைவி சொல்கிறாள். பரத்தையர் தோய்ந்த மார்பை தோய்வதற்கு நாணியதாலும் அந்த நாணம் கெட ஊடியதாக தலைவனிடம் சொல்லாதே என்றும் தலைவி தன் நலன் இழப்புகளைச் சொல்கிறாள்.  தோழி உரையாதே, அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ? அன்பிலங்டை புலவி எவன்? தலைவன் என்னிடம் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.  

—-

No comments: