குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-90
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி கூற்று
இயற்றியவர்: ஔவையார்
குறுந்தொகையில் பாடல் எண்; 91
திணை: மருதம்
————
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின்னெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை யிரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே.
——
நெஞ்சே, ஒன்றோடொன்று பிணங்குதலையுடைய பிரப்பங்கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை ஆழமாக நீரையுடைய குளத்திலுள்ள கெண்டைமீன் கவ்வுதற்கிடமாகிய தண்ணிய நீர்த்துறைகளுடைய ஊர்த்தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பின் நின் உள்ளத்தில் துன்பம் பலவாகுக. காலமும் இடமும் பெறுவார் தகுதியும் நோக்கியொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும் மேகம் போன்று கைம்மாறு கருதாத வண்மையையுடைய கையினையும், விரைந்த செயலையுடைய ஆண்யானைகளையும் உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியென்னும் உபகாரியினது அச்சங்கொள்ள வைக்கும் போர்க்களத்திலுள்ள இரவையுடைய ஊரிலுள்ளோர் போல நீ துயிலும் நாட்கள் சிலவே ஆகுக.
——
நெஞ்சிற்கு நெஞ்சு கூறுதல்
——
இப்பாடலை யார் யாருக்கு கூறுகிறார்கள் என்பதை பற்றி உரையாசிரியர்கள் இரண்டு விளக்கங்கள் அளிக்கின்றனர். ஒன்று தலைவி தன் நெஞ்சிற்கு நெஞ்சின் வழி கூறுதல், இன்னொன்று தோழி தலைவிக்குக் கூறுதல்.
பரத்தையரிடம் சென்று மீண்டுவந்த தலைவன் வாயில் வேண்டி புக்கவழி, அவன்பால் ஊடலையுடையவளாயினும் தன் நெஞ்சம் அவன் பால் செல்லுவதை அறிந்த தலைவி கூறியது. தலைவன் பரத்தையரிற் பிரிந்தமையால் ஊடிய தலைவி அவனைக் கண்டதும் நெஞ்சு நெகிழ்ந்ததால் தோழி இடித்துரைத்ததுமாம்.
இதில் நெஞ்சிற்கு நெஞ்சு கூறுதல் என்பது மிகவும் சுவாரஸ்யமான கூற்றாகும். 1286 ஆவது திருக்குறள் இதைக் “காணுங்கால் காணேன் தவறாய, காணாக்கால் காணேன் தவறு அல்லவை” என்று சொல்கிறது. நெஞ்சினை தன்னிடமிருந்து தனியான உணர்வுடையது போலக் கூறுவது இது என தொல்காப்பியம் பொருளதிகாரம் குறிக்கிறது. தலைவனுக்கு உடன்பட்டு அளவளாவ மீண்டும் பிரிய நேர்கையில் அதனால் உண்டாகும் துன்பம் பலவாகும் அதனால் நீ துயில்கின்ற நாட்களோ சிலவாகும் என்றாள்.
இன்னொரு விளக்கம் தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து வாயில் வேண்டி நிற்க, தலைவி அவனை எதிர்கொள்ளும் குறிப்பினை அறிந்த தோழி, அவன் இத்தனை கொடுமையுடையவனாக இருந்தும் அதை மறந்து நீ அவனை அனுமதிப்பாயானால் மீண்டும் அவன் கொடுமைக்கு ஆளாகித் துன்புறுவாய் என்று கூறியதாகும். உ.வே.சா. இந்த இரண்டாவது விளக்கமே முதல் விளக்கத்தை விடச் சிறப்பானது எனக் குறிக்கிறார். விளை கனி - வினைத்தொகை குண்டு நீர் – ஆழமான நீர், இலஞ்சி – குளம் கெண்டை – மீன் வகை கதூஉம் – கடித்துத் தின்க- கதூஉ இன்னிசை அளபெடை தண்துறை ஊரன் – குளிர்ச்சியான குளத்தையுடைய ஊரன். கெண்டை மீன்கள் கடித்துத் தின்கும் விளைகனி, பரத்தையரால் விழுங்கப்பட்ட தலவனுக்கு உவமையானது.
—-
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
——
பிரம்பினிடையே காய்த்து பழுத்து முதிர்ந்த கனியை எளிதிற் கெண்டை பெறும் ஊரன் என்றது தன்னுடைய சிறப்பால் அன்பும் செல்வமும் முதிர்ந்த தலைவனை பரத்தையர் எளிதிற் கவர்ந்து கொள்வாரென்ற குறிப்பு உடையது. பவர்ப் பிரம்பு என்பது இரு பெயரொட்டு, அது கொடியாகிய பிரம்பு எனப் பொருள்தரும்.
—-
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை யிரவூர் போலச்
——
அஞ்சி என்ற சொல் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கும். அஞ்சி கடயெழு வள்ளல்களில் ஒருவன் தகடூர் என்ற ஊரைச் சேர்ந்தவன். இப்பாடலை இயற்றிய ஒளவையாரைப் பெரிதும் போற்றியவன். யானையுடைய படை என்று படையின் பெருமையைச் சொல்ல தலைவி யானையைக் கூறினாள். கொன் என்பது அச்சப்பொருளைத் தரும் இடைச்சொல். கொல்முனை என்பது பகைவர்களைக் கொல்கின்ற போர்முனை ஆகும். போர்க்களமுள்ள ஊரினர் அச்சத்தினால் இரவில் தூங்காமல் இருப்பது போல , ‘சிலவாகும் நீ துஞ்சுக்கின்ற நாட்களே” என உவமை கூறினாள். கொல் என்னும் இடைச்சொல் போர்முனையை விசேடித்து நின்றதை தொல்காப்பியம் எச்சவியல் 60 ஆவது சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியார் எழுதுகிற உரையில் வாசிக்கலாம். தலைவனைப் பிரிந்து துயிலிழந்த தலைவியின் தவிப்பு போர்முனை ஊரில் தூக்கமிழந்தவர்களின் அனுபவத்தோடு ஒப்பிடப்படுவது சிறப்பானதாகும். அஞ்சியின் பகைப்புலத்து இரவு ஊர் போல நின் நெஞ்சில் படர் பல ஆகுக, நீ துஞ்சும் நாள் சில ஆகுக எனக் ‘கொன் முனை இரவு போல’ என்ற உவமை இரண்டு இடங்களிலும் கூட்டிப் பொருள் உரைக்கப்படக்கூடியதாக இருக்கிறது. கூடுதலாக இப்பாடலில் அஞ்சியின் வீரமும் கொடையும் கூறப்பட்டுள்ளன.
——
No comments:
Post a Comment