குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-83
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
செவிலித்தாய் கூற்று
இயற்றியவர்: மோசிகீரனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 84
திணை: பாலை
————
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனே னென்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழறொடி யாஅய் மழைதவழ் பொதில்
வேங்கையுங் காந்தளு நாறி
ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தலைவி தன்னைப் பிரிந்து தலைவனோடு உடன் போக அதனை அறிந்த செவிலித்தாய் கூறியதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. உழல இட்ட தோள்வளையையுடைய ஆய் எனும் வள்ளலுடைய மேகங்கள் தவழும் பொதிகை மலையில் உண்டான வேங்கையும் காந்தளும் மணக்க ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியுடையவளாகிய என் மகள் நான் ஒரு தடவை தழுவியதோடு அமையாமல் மீண்டும் தழுவும்போது நான் வியர்த்தேன் என்று கூறினாள். அவளுக்கு அப்படி வெறுப்பு உண்டானதற்கான காரணத்தை அப்போது அறியவில்லை இப்பொழுது அறிந்தேன்.
——-
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனே னென்றனள்
——
இப்பாடலில் வருவது போலத் தலைவி தலைவனோடு ஓடிப்போய்விட, தலைவியை நினைத்து செவிலித்தாய் கூறுவதாக அமைந்தவற்றை தொல்காப்பியம் அகத்திணையியல் 39 ஆம் சூத்திரத்திற்கு உரை எழுதுகிற இளம்பூரணர் உடன் போக்கிய செவிலி கனன்று உரைத்தது எனக் குறிப்பிடுகிறார். இறையனார் அகப்பொருளுரை களவியல் சூத்திரம் 23, இதை “பிற்றை ஞான்று தலைமகளது போக்கு உணர்ந்து செவிலி மயங்கிப் பெரியதோர் கவலையளாய் நெருநலை இவை செய்தது இது கருதிப் போலும்” என்று உரைக்கிறது. தலைவியை அருகில் துயிலச் செல்லுதல் செவிலியர் வழக்கம். அதனால் செவிலித்தாயக்கு தலைவியின் உடல் ஆம்பல் மலர் போல குளிர்ச்சியையுடையதாக இருப்பது தெரிந்திருந்தது, அதனால அவள் ‘ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே’ என்று சொல்கிறாள். ஆம்பல் நீர்ப்பூ ஆதலால் தண்மைக்கு உவமையானது.
அப்படிக் குளிர்ச்சியான உடலை உடைய தலைவிக்கு, தலைவனின் மார்பைத் தழுவிய பிறகு, செவிலியைத் தழுவல் வியர்வையையும் வெறுப்பையும் உண்டாக்குவதாக இருக்கிறது. தலைவியின் இவ்வுணர்வு ‘பயில்வு’ என அழைக்கப்படும். தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 23 இக்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் “ தலைவி செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது வேறோர் இடத்தில் பயிறல்” என இதை விளக்குவார்.
——-
கழறொடி யாஅய் மழைதவழ் பொதில்
வேங்கையுங் காந்தளு நாறி
———-
ஆய் ஏழு வள்ளல்களுள் ஒருவன். அவனுக்குரியது பொதிகை மலை. அவனுடைய குறிஞ்சி நிலத்திற்கு உரிய வேங்கையின் மணமும் காந்தளின் மணமும் தலைவியின் உடலில் இயற்கையாக இருப்பதாக செவிலிதாய் சொல்வதாக உ.வே.சா. குறிக்கிறார். ஆனால் அத்தகைய வேங்கையும் காந்தளும் சேர்ந்த நறுமணம் தலைவனைத் தழுவியதாலும் தலைவிக்கு உண்டாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது. வேங்கை, காந்தள் ஆகிய மலர்கள் தலைவன் சூட்டியிருந்த மலர்கள் என்பது உட்குறிப்பு. ஆம்பல் மலரைப் போல குளிர்ச்சியை உடையவளாக இருந்த தலைவி தலைவனின் நினைவால் ஏற்பட்ட உடல் வெப்பத்தினால் உடல் வியர்த்தனள் என்பதும் இன்னொரு உட்குறிப்பு. கழறொடி ஆய்- என்பது கழல் தொடி ஆய் எனப்பிரியும், வளைகள் அணிந்த ஆய் வள்ளல் எனப் பொருள் தரும்.
——-
இனியறிந் தேனது துனியா குதலே
——-
தலைவி தன் தழுவுதலை மறுத்தபோதும் அவளுடல் வெப்பத்தில் வியர்த்தபோதும் அவள் தன்னை விட்டுப்பிரிந்து தலைவனோடு ஓடிப்போவாள் என்று அப்போதே அறிந்திருக்க வேண்டும் எனப் புலபம்பும் செவிலிதாய் “இனியறிந் தேனது துனியா குதலே
“ எனப் புலம்புகிறாள். அப்போதே தெரிந்திருந்தால் தலைவனுக்கு மணம் முடித்துக்கொடுத்திருப்போமே என்பது ஒரு உட்குறிப்பு என்றால் இன்னொரு உட்குறிப்பு இனியாகுதலே என்று முடியும் ஏகாரத்தில் இருக்கிறது. இரக்கக்குறிப்பாக வரும் அந்த ஏகாரம் தலைவனோடு உடன் போகிய தலைவி பாலைநிலத்தில் என்ன துன்பங்களை எதிர்கொள்வாளோ என அன்பினையும் கவலையையும் வெளிப்படுத்துகிறது.
——
No comments:
Post a Comment