குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-88
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி தோழி தனக்குத் தானே கூறியது
இயற்றியவர்: பரணர்
குறுந்தொகையில் பாடல் எண்; 89
திணை: மருதம்
————
பாவடி யுரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்க ணுவறலு நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கெ
பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை யன்னவிம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
அதிகமான அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய கொல்லி மலை, பெரிய அணிகலன்களை அணிந்த சேர மன்னனுக்கு உரியது. நல்ல இயல்புடைய தலைவி அம்மலையின் மேற்குப்புறத்தைச் சார்ந்த பாவையைப் போல மெல்லிய இயல்புகளுடையவள் ஆவாள். அவள் அகலமான அடிப்பகுதியை உடைய உரலில் வள்ளைப் பாட்டினைப் பாடி உலக்கையை உரலில் ஓங்கி இடிக்கும்போது தலைவன் பெயரை அமைத்துப் பாடினாள். அதைக் கேட்ட ஊரார் அலர் தூற்றினர். இத்தகைய அறிவின்மையையுடைய ஊரார் கூறும் சொற்களுக்காக வருந்திப் பயன் என்ன?
——
வள்ளைப் பாட்டு
——
மகளிர் நெற்குத்தும்போது ஒரு தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு வள்ளைப்பாட்டு என்றழைக்கப்படுகிறது. பதிற்றுப்பத்தில் வரும்
"மகளிர் வள்ளை கொய்யும்" என்ற வரி இதைக் குறிப்பிடுகிறது. வல், வள், வள்ளை என இச் சொல் வளர்ந்ததாகத் தொல்காப்பியம் பொருளதிகாரம் 63 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். இது உரற்பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது. மணிமேகலையில் "வள்ளைத் தாள்போல் வடிகாதிவைகாண்” என்ற வரி இந்தப் பாட்டிற்கான குறிப்பீட்டினைக் கொண்டிருக்கிறது. தலைவி தலைவன் பெயரை வள்ளைப் பாட்டில் வைத்து பாடியதால் ஊரார் அவளை அலர் தூற்றுகின்றனர் ஆகையால் தலைவன் விரைவில் வந்து அவளை மணம்புரிதல் வேண்டும் எனத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்தும் வகையில் அவன் காதுபடக் கூறுகிறாள்.
இப்பாடலில் முதல் வரியில், பாவடி - அகலமான அடிப்புறத்தை உடைய, உரல – உரல், அ சாரியைப் பெற்று வந்தது, பகுவாய் – ஆழமான , வள்ளை – வள்ளைப் பாட்டினையும் குறிப்பனவாகும்.
அரசனையும் தெய்வத்தையும் வள்ளைப்பாட்டில் வாழ்த்திப் பாடும் மரபும் உண்டு. போர்க்களத்தில் இப்பாட்டைப் பாடுவதாக பரணி நூல்கள் கூறும். ‘சும்மேலோ சும்முலக்காய்’ எனும் ஈற்றடியைக் கொண்ட வள்ளைப்பாட்டுகள் அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி, பாசவதைபரணி ஆகியவற்றில் இருப்பதாக உ.வே.சா.குறிப்பிடுகிறார்.
வள்ளைப்பாட்டு ஒரு தனி இலக்கிய வகையாகவும் கருதத்தக்கது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுகிற அடியார்க்கு நல்லார் வள்ளைப்பாட்டை பல்வரி கூத்தினுள் அடக்குவார்.
——
கொல்லி மலை
——
பொறையன் என்ற சொல் சேர மன்னனைக் குறிப்பதாகும். பெரும்பூட் பொறையன் என்பது பெரிய அணிகலன்களை அணிந்த சேர மன்னன் எனப் பொருள் தரும். பேஎ – இன்னிசை அளபெடை. இங்கே பேம் என்பது அச்சப்பொருளில் வந்தது. பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள என தொல்காப்பியம், உரியியல் சூத்திரம் 69 கூறுகிறது.
கொல்லி மலை வல்வில் ஓரி என்ற வள்ளலுக்கு சொந்தமாக இருந்தது. காரி என்பவன் ஓரியைக் கொன்று அம்மலையை சேரனுக்குக் கொடுத்தான்; ஆகையால் அது சேரனுக்கு உரியதாகியது. கொல்லிமலையின் மேற்குப் பகுதியில் தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாகக் கதையொன்று இருக்கிறது. அந்தக் கொல்லிப்பாவை கண்டோரை மயக்கி உயிர்விடச் செய்யும் ஆற்றலும் அழகும் வாய்ந்ததாகக் கருத்தப்பட்டது. அழியா அழகுடைய பெண்களுக்குக் கொல்லிப்பாவையை உவமை சொல்லுதல் மரபு. இப்பாடலில் கொல்லியின் மலையின் மேற்கு ‘எழுதிய’ பெண்ணாகத் தலைவி குறிப்பிடப்படுகிறாள். தலைவி ‘குட வரை எழுதிய’ – மலையால் எழுதப்பட்ட ஆனால் கொல்லிப்பாவையப் போல அல்லாமல் , நல் இயல் பாவையாக இருக்கிறாள். மேலும் அவளைத் தோழி ‘மெல்லியல் குறுமகள்’ எனவும் சித்தரிக்கிறாள். இம்மெல்லியர் குறுமகள் என்று சுட்டிக்காட்டியதால் தலைவியும் அருகிலிருக்கிறாள் என்பது பெறப்படும்.
——-
ஏதின் மாக்கள், அழிவதென் கொல்
——
‘ஏதின் மாக்கள்’ எனத் தோழி குறிப்பிடும் மக்கள் யாவர் என்பதற்கு இரு விளக்கங்கள் இருக்கின்றன. ஏதில் மாக்கள் என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் அயலோராகிய அறிவிலிகள், அயற்றன்மை உடையார் என்றும் உ. வே. சா தலைவியின் நிலையை அறிந்து இரங்கும் தன்மை இல்லாதவர்கள் என்றும் விளக்கமளிக்கின்றனர். இந்த மாக்கள் அலர் பேசும் ஊரார் என்பது ஒரு விளக்கமாயின் இன்னொரு விளக்கம் பரத்தையர் என்பதாகும். தோழி, இந்தமாக்கள் எப்படி அழிவார்களோ என்று சொல்லும் விதமாக ‘ அழிவதென் கொல்’ என்றும் சொல்லுகிறாள். இரண்டாவது விளக்கம், அதாவது ஏதின் மாக்கள் என்போரை பரத்தையர் எனப் பொருள்கொள்வது முதல் கருத்தைவிட சிறப்புடையது அல்ல எனக் குறிப்பிட்டு உ.வே.சா. இப்பாடலின் முடிபாக குறுமகள் பாடினள் குறின், மாக்கள் நுவல்ப; இப்பேதையூர்க்கு அழிவது எவன் கொல் என உரைக்கிறார்.
—-
No comments:
Post a Comment