Thursday, August 1, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-94

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-94

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழனிடம்  கூறியது

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 95

திணை: குறிஞ்சி

————

மால்வரை யிழிதருந் தூவெள் ளருவி

கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்

சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் 

நீரோ ரன்ன சாயல் 

தீயோ ரன்னவென்னுரனவித் தன்றே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழ, பெரிய மலையிலிருந்து வீழும் அருவி பாறைகளின் வெடிப்பில் ஒலிக்கும்; பல மலர்களையுடைய சாரலில் உள்ள, சிற்றூரிலுள்ள குறவனுடைய பெரிய தோளையுடைய சிறிய மகளினது நீரைப் போன்ற மென்மை தீயை ஒத்த என வலிமையைக் கெடச் செய்தது. 

——

 நீர் ஓரன்ன சாயல்

——

தனது நடையுடை பாவனைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகளைக்  கண்டு வினவிய தோழனிடம் தலைவன் கூறியதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவியைப் பார்த்து அவள் மேல் காதல் வயப்பட்டுவிட்ட தலைவன்,  தலைவியை வெள்ளிய அருவியின் நீர் போன்ற மென்மையையுடவளாகக் கூறி, அவளுடைய மென்மை அவனது தீ போன்ற வலிமையை அழித்துவிட்டதாகவும் கூறுகிறான்.  இரா. இராகவையங்கார் சிறுகுடிக் குறவன் குறமகள் என்றது தான் பெருங்குடி பெருமகனாதலைக் குறித்து என விளக்கமளிக்கிறார்.   தலைவிக்கு பெருந்தோள் எனக் கூறியது தன் பெருந்தோள் தழுவுவதற்கு ஒப்புமை கருதி எனவும் அவர் மேலும் எழுதுகிறார்.  


நீரை மென்மைக்கு உவமிப்பதை சங்கப் பாடல்களில் பலவற்றில் வாசிக்கிறோம். கலித்தொகை 42  ஆம் பாடல் வரி ‘ நீரினும் சாயல் உடையன்’ கலித்தொகை 94 ஆம் பாடல் வரி,  ‘நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்’  புறநானூறு 105  ஆம் பாடலில் வரும்,  ‘நீரினும் இனிய சாயல்’ , பதிற்றுப்பத்து 86 இல் வரும்  ‘நீரினும் தீந்தண் சாயலன்’  மலைபடுகடாமில் வரும்  61  ஆவது வரி, ‘புது நிறை வந்த புனல் அம் சாயல்’ ஆகியன அவற்றுள் கவனிக்கத்தக்கவை. 

—-

தீயோ ரன்னவென்னுரனவித் தன்றே

—-

நீரை மென்மைக்கு உவமிப்பது போலவே தீயை ஆண்மகனின் வலிமைக்கு உவமிப்பதும் மரபு. “தீயெழுந் தன்ன தீறலினர்” என திருமுருகாற்றுப்படையில் வரும் வரியினாலும்  இதை அறியலாம். பகையை அழிக்கும் தீயைப் போன்ற என் வலிமையை நீரைப் போன்ற குறமகளது மென்மை அழித்தது என்றான்.  திருக்குறள் 1088, “ ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரு முட்குமென் பீடு”,  இதே கருத்தை போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே என்று கூறுவதை வாசிக்கலாம். 

——-

கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்

——

கல்முகை என்பது மலைமுழைஞ்சுமாகும். ததும்புதல் -ஒலித்தல். இயற்கைப் புணர்ச்சி பெற்றவிடம் என்பதால் தலைவன் அவ்விடத்தை பன்மலர்ச் சாரல் என்கிறான். மகளிர்க்குத் தோள் பெருத்தல் அழகு என உ.வே.சா கூடுதலாக குறிக்கிறார். 


குறுமகளது சாயல் என் வலிமையை அழித்தது; நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன் எனத் தலைவன் தோழனிடம் கூறினான். 

——

No comments: