Tuesday, August 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

—-

இயற்றியவர்:  திப்புத்தோளார்

குறுந்தொகையில் பாடல் எண்; 1

திணை; குறிஞ்சி

——

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

கழறொடிச் சே எய் குன்றம் 

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

——— 

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வெற்ப, போர்க்களம் இரத்ததாற் செந்நிறத்தையுடைய களமாகும்படி, அசுரர்களைக் கொண்று இல்லையாக்கிய, இரத்தத்தாற் சிவந்த திரண்ட அம்பையும், சிவந்த கொம்பையுடைய யானையையும் வீரவளையையுமுடைய முருகக் கடவுளுக்குரிய இம்மலையானது சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது.

——-

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

——

தோழியர் கூட்டத்தை அணுகிய தலைவன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்து தோழியின் பால் தன் குறை கூற அவள் செங்காந்தள் எங்கள் மலையிலேயே அதிகமாய் இருப்பதால் இதனை வேண்டாம் என்று கூறி மறுப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. 


காந்தள் பூவினால் நாம் குறையுடையவர்கள் அல்லர் என்று தலைவனுக்குக் உணர்த்திய வழி இப்பாடல் கூற்றெச்சமாகவும் சேஅய் குன்றம் காத்தட்டு அது காண்பாய் என்றால் காண் எனத் தோழி குறியிடம் உணர்த்தியதால் குறிப்பெச்சமாகவும் இப்பாடல் தொல்காப்பியம் செய்யுளியல் 208 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதும் பேராசிரியரால் விளக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம்  எச்சவியல் 45 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் ‘யாம் காந்தள் பூவினால் குறைவிலம்’ என்பதை சொல்லெச்சத்திற்கு எடுத்துக்காட்டாய் விளக்குகிறார்.  செங்களம்பட - போர்க்களம் இரத்தத்தாற் செந்நிறத்தையுடைய களமாகும்படி, அவுணர் கொன்று தேய்த்த- அசுரர்களை கொன்று இல்லையாக்கிய என பொருள் பெறும். 

———

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

——

செங்கோலம்பு - செம்மை, வளைவின்மையுமாகும். முருகக் கடவுளுக்கு அம்பு உண்மை, பரிபாடலில் வரும் “பொறிவரிச் சாபமும்” என்ற அடியாலும் பெறப்படும். செங்கோடு என்பது பகைவரைக் குத்திச் சிவந்த கொம்பு. முருகக்கடவுளின் ஊர்திகளில் யானை ஒன்றென்பதும் அதன் பெயர் பிணிமுகமென்பதும், அருள் செய்வதற்கும் போர் செய்வதற்கும் யானை ஏறி அவர் செல்வாரென்பது, “ வேழமேல் கொண்டு”, “அங்குசங் கடாவ வொருகை”, “ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி” ஆகிய திருமுருகாற்றுப்படை வரிகளாலும் அறியலாம். 

—-

கழறொடிச் சே எய் குன்றம்

——-

கழறொடி- உழலுந்தொடி. சேஎ என்றது அளபெடுத்த வழியும் விளியன்றி நின்றது. திருமுருகாற்றுப்படையில் வரும் “செவ்வேற் சேஎய் சேவடி” என்பது போல. சேஎய் – இன்னிசை அளபெடை குன்றம்- மலை. சேஎய் – செய்யோன் என்பதின் சிதைவு

——

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

——

குருதிப்பூவின் குலைக்காந்தளென்றது முதற்கேற்ற அடையடுத்து நின்றது. திருமுருகாற்றுப்படையில் வரும் “ கரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள்”, தொல்காப்பியம் புறத்திணையியல் 5 ஆம் வாய்பாட்டில் வரும் “வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்” , நற்றிணை 399 ஆவது பாடல் வரி “குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்”  ஆகியனவும் இப்பாடலின் அடியோடு இணைத்து காந்தள் முருகனின் மலர் என அறியத்தக்கவை. வெண்காந்தளும் உண்டென்பதினால் குருதிப்பூ என்றாள். குருதிப்பூ -இரத்தம் போன்ற நிறத்தையுடைய பூ. கொத்தாகவே அது பூக்கும் என்பதினால் குலைக்காந்தாள் என்றாள். 


பொ. வே. சோமசுந்தரனார்  இச் செய்யுளை பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’ என்னும் துறைப்படுத்தோதுவர் என மேலும் விளக்கமெழுதுகிறார்.  அதாவது, தலைமகனது வரவு உணர்ந்த தோழி தலைமகளைப் பொழிலின்கண் ஒரு குறியிடத்தே கொண்டு சென்று, “சேஎய்குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டு ஆண்டுத் தெய்வம் உறைதலின் நின்னால் வரப்படாது; யான் சென்று கொய்து வருவேன்; நீ அதுகாறும் இப்பொழிலிடத்தே நிற்கக்கடவாய்” என நிறுத்தி நீங்குதல் என்பதாம்.  தமிழண்ணல்  எங்களிடம் இருப்பதால் வேண்டாம் என மறுக்கும் சொல் பாடலில் இல்லை.  சொல் எஞ்சி குறைந்து நிற்பதால் இதைச் ‘சொல்லெச்சம்’ என்பர் என தெளிவுபடுத்துகிறார்.   திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அம்பின், பூவின் என்பவற்றிலுள்ள ‘இன்’ சாரியைகள் என இலக்கண விளக்கம் தருகிறார். 


இப்ப்பாடல் ஆசிரியர் தீப் புத்தேளார் எனப் பாடபேதம் கொண்டு அவரை அங்கியங் கடவுள் என்ற பெயரினராக இராகவையங்கார் கருதுகிறார், செவ்வேலை வாழத்திய பாடலுக்குப் பின் குறுந்தொகையின் முதல் பாடலாக அவன் வீரத்தை உணர்த்தும் இப்பாடல் அமைந்துள்ளது. முருகனின் குன்றம். அவனுடைய மலராகிய செங்காந்தள் இப்பாடலில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

——

குறுந்தொகையின் முதற்பாடலை முதல் நூறு பாடல்களுக்கு உரை எழுதியபின் 101 ஆக சிறப்பிக்க எண்ணியிருந்தேன். இத்தோடு குறுந்தொகையின் முதல் 101 பாடல்களுக்கான உரை நிறைவு பெறுகிறது.

——

No comments: