Thursday, August 8, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-98

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-98

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழியிடம்  கூறியது

இயற்றியவர்:  ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 99

திணை: முல்லை

————

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி

நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து

மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே

நீடிய மரத்த கோடு தோய் மலிர் நிறை

இறைத்து உணச் சென்று அற்றாங்கு,  

அனைப் பெருங்காமம் ஈண்டு கடைக்கொளவே.

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

உயர்ந்த மரத்தினது கிளையைத்தொட்டுப் பெருகும் மிக்க வெள்ளம் பிறகு கையால் இறைத்துண்ணும் அளவு சிறுகிச் சென்று அற்றது போல, வெள்ளத்தைப் போன்ற அவ்வளவு பெரிய காமநோய் இங்கே நான் வருவதால் முடிவடையும்படி, நான் ஆழ்ந்து எண்ணினேன் அல்லனோ, அங்ஙனம் எண்ணி மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தேனல்லேனோ, அங்ஙனம் நினைவு கூர்ந்து என் நினைவு நிறைவேறுதற்கு மாறாக இருக்கும் உலகத்தியல்பை எண்ணி மயங்கினேன் அல்லேனோ?

——

உள்ளினென் அல்லனோ யானே

—-

உள்ளுதல் என்பது உள்ளத்துள் எண்ணுதல். அல்லனோ என வரும் மூன்றும் வினாவெதிர் வினாவும் விடையுமாக அமைந்து முறையே உள்ளினேன், நினைத்தேன், மருண்டேன் என்ற பொருள்களைத் தந்தன. பிரிந்திருந்த நாட்களில் எம்மை நினைத்தீரோ என்று கேட்ட தோழிக்கு தான் சென்ற காரியத்தை முடித்துவிட்டு தலைவியிடம் திரும்பிய தலைவன் கூறியதாக இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.தோழிக்கு பதிலளிக்கும் தலைவன் தலைவியை அடைய வேண்டும் என்ற வேட்கை தொடர்ந்து அவன் மனதில் இருந்ததை மேற்சொன்னவாறு கூறினான். 

——

நீடிய மரத்த கோடு தோய் மலிர் நிறை இறைத்து உணச் சென்று அற்றாங்கு,

அனைப் பெருங்காமம் ஈண்டு கடைக்கொளவே.

——-

கடல் நீர் மேகங்களாகி அது மலைகளின்  மேல் பெய்யப்பட்டு அருவியாகி, நதியாகி, மீண்டும் கடலை அடையும் போது இறைத்து கையினால் அள்ளப்பட்டு பருகுவதற்குரியதாய் மாறிவிடுகிறது. அது போலவே தலைவியால் உண்டாகிய காம வேட்கை தலைவனுக்கு அவன் பொருள்வழிப் பிரிந்த வழிப் பெருகி அவளை நேரில் கண்டபின் தீர்ந்துவிடும் எனத் தோழியிடம் தலைவன் கூறினான். 1264 ஆவது  திருக்குறள், “கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்கோடுகொ டேறுமென் நெஞ்சு” என்பதற்கு  உரை எழுதுகிற பரிமேலழகர் வினைவயின் பிரிவு வழிக் காம இன்பம் நோக்காமையும் அது முடிந்துழி அவ்வின்பமே நோக்குதலும் தலைமகற்கு இயல்பு என  எழுதுகிறார். இப்படியாக இது உலகத்துப் பண்பு என நிலைபெறவும் செய்திருப்பதாக உ.வே.சா. உள்ளிட்ட உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இதையே ‘உலகத்துப் பண்பே’ எனப் பாடலில் மூன்றாவது வரியில்  வருவதும் குறிக்கிறது.

—-

“உள்ளினென் அல்லனோ 

யானே உள்ளிநினைத்தனென் அல்லனோ 

பெரிதே நினைத்து மருண்டனென் அல்லனோ” ஆகிய அடிகளில் காணப்படும் தலைவனின் பதற்றமும் உண்மை உணர்ச்சியும் (authentic emotion) இப்பாடலைச் சிறந்த கவிதையாக்குகின்றன.

—-

No comments: