Saturday, August 10, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-99

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-99

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தோழனிடம்  கூறியது

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 100

திணை: குறிஞ்சி

————

அருவிப் பரப்பி னைவனம் வித்திப்

பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்

காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்,

கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்,

வல்வில் ஓரி கொல்லிக் குட வரைப்  

பாவையின் மடவந் தனளே,

மணத்தற் கரிய  பணைப் பெருந் தோளே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழ, அருவி பாயும் பரந்த நிலத்தில், மலை நெல்லை விதைத்து இடையிலே களையாக முளைத்த பருத்த இலைகளுடைய மலை மல்லிகையோடு பசியமரலை களைந்தெறியும், காந்தளையே இயற்கை வேலியாக உடைய சிற்றூரிலுள்ளார் உணவின்றிப் பசித்தாராயின் நறுகண்மையையுடைய யானையினது கொம்பை விற்று அவ்விலையால் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய வல்வில் ஓரியின் கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள பாவையைப் போல நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள்; அவளுடைய மூங்கிலைப் போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும். 

——

கொல்லிப்பாவை

——

கொல்லி மலை வல்வில் ஓரி என்ற வள்ளலுக்கு சொந்தமாக இருந்தது. காரி என்பவன் ஓரியைக் கொன்று அம்மலையை சேரனுக்குக் கொடுத்தான்; ஆகையால் அது சேரனுக்கு உரியதாகியது. கொல்லிமலையின் மேற்குப் பகுதியில் தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாகக் கதையொன்று இருக்கிறது. அந்தக் கொல்லிப்பாவை கண்டோரை மயக்கி உயிர்விடச் செய்யும் ஆற்றலும் அழகும் வாய்ந்ததாகக் கருத்தப்பட்டது. அழியா அழகுடைய பெண்களுக்குக் கொல்லிப்பாவையை உவமை சொல்லுதல் மரபு. பரணர் இயற்றிய குறுந்தொகைப் பாடல் 89 போலவே கபிலர் இயற்றிய இந்தப்பாடலிலும் தலைவி கொல்லிப்பாவைக்கு இணையான அழகுள்ளவளாகக் குறிப்பிடப்படுகிறாள். காமத்தால் மடமை எய்துதல் தகாது என்று கூறிய தோழனுக்கு தன்னை ஒருத்தி கொல்லிப்பாவை போல பாதித்து மடமையுண்டாக்கினாள் என்றும் அவள் தோள்கள் தழுவுவதற்கு அரியன என்றும் தலைவன் இப்பாடலில் கூறுகிறான்.  

——

காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்,

——

மலைவாழ் மக்களுடைய சிற்றூர் காந்தள் வேலியால் பாதுகாப்புடையதாக இருக்கிறது. அவர்கள் அருவி சார்ந்த ஈரப்பசையுள்ள தம் நிலங்களில மலை நெல்லை விதைப்பதையும் அவற்றின் களைகளை நீக்குவதையும் இப்பாடல் குறிப்பிடுகிறது. வல் வில் ஓரியின் வீரத்தினால் காக்கப்பட்ட நிலப்பகுதியாக இருப்பதால் பசியின்றி அச்சமின்றி வளம் கொழித்த நிலப்பகுதியில் வாழந்தனர். ‘பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்’ என்ற அடியில் வரும் குளவி என்பது களைக் கொடியாகும். மரல் என்பது மருளென்றும் வழங்கும். இதை ஒருவகைக் கற்றாழை ஆகும். ‘கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்’ என்ற அடியில் ‘கடுங்கண் வேழம்’ என்பது அந்த யானையின் தந்தம் பெறுவதற்கு அரியது என்ற பொருளைத் தரும். அப்படி அரிதில் பெற்ற யானைத் தந்தத்தை எளிய விலைக்குக் கொடுத்த மலைவாழ் மக்கள் அறியாமையை உடையவர்கள் என்பது உட்குறிப்பு. அந்த அறியாமை தலைவியின் மேலும் ஏற்றிச் சொல்லப்படுகிறது. கொல்லிப்பாவை தோற்றத்தில் பாவை போல இருப்பிலும் பெறுவதற்கரியவளாய் இருப்பது போல தலைவி மடவந்தனளென்றாலும்  பெறுவதற்கரியவள் என்பது பெறப்படுகிறது.

யாரை நோக்கியது தலைவன் கூற்று?

——

இப்பாடலில் தலைவன் யாரை நோக்கிப் பேசுகிறான் என்பதற்கு தோழனை நோக்கி என்றும் தன் நெஞ்சை நோக்கி என்றும் இரண்டு கருத்துக்கள் இருப்பதாக உ.வே.சா. குறிப்பிடுகிறார். தலைவன் வந்தபோது அவனைக் காணாதது போல  தலைவி இருக்க இதனால் வருத்தமுற்ற தலைவன் தன் நெஞ்சை நோக்கி  என் மனதைக் கவர்ந்து துன்புறுத்திவிட்டு ஒன்றும் அறியாதவள் போல இருக்கும் தலைவியை இனிப் பெறுதல் அரிது போலும் என்று வருந்திக் கூறியது இரண்டாவது வாசிப்பாகும். உ.வே.சா. இந்த வாசிப்பு முந்தைய வாசிப்பிலிருந்து சிறப்புடையது  அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.  நொடுத்து என்ற சொல்லுக்கு திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் கொடை என்பதனடியாக ‘கொடுத்து’ என வருதல் போல, நொடை என்பதனடியாக நொடுத்து என வந்தது என உரை எழுதுகிறார். கோடு என்பது யானையின் கொம்பு அல்லது தந்தம். மணத்தற்கு அரிய – அணைப்பதற்கு கடினமான, பணைப் பெருந்தோள் – மூங்கில் போன்ற பெரிய தோள்கள் , ஏ – அசைநிலை.  


No comments: