Tuesday, August 6, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-97

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-97

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

இயற்றியவர்: கோக்குளமுற்றனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 98

திணை: முல்லை

————

இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த்

துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே

நன்றுமன் வாழி தோழி நம் படப்பை

நீர்வார் பைம்புதற் கலித்த

மாரிப் பீரத் தலர்சில கொண்டே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, நம் தோட்டத்திலுள்ள நீர் ஒழுகுகின்ற பசிய புதலினிடத்தே தழைத்துப் படர்ந்த மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைக் கைக்கொண்டு தலைவரை நெருங்கச் சென்று, நல்ல நெற்றியையுடைய தலைவி இம்மலரைப் போன்ற பசலையை அடைந்தாள் என்று அவர்பாற் சொல்லுவாரைப் பெற்றால் மிகவும் நல்லது.

—— 

பீர்க்கு மலர்

—-

பீர்க்கு மஞ்சள் நிறமான பூக்களை உடையது; பீர்க்கின் மலரை தலைவியின் பசலைக்கு உவமையாகக் கூறுதல் வேறு சில சங்கப்பாடல்களிலும் இப்பாடல் போலவே வாசிக்கக் கிடைக்கிறது. நற்றிணை 197 ஆவது பாடலில் வரும், “ நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே”, என்ற வரி, நெடுநல்வாடை, “பொன்மேல் பீரமொடு புதல் புதல் மலர” என்பதும், ஐங்குறுநூறு 452 ஆவது பாடலில் வரும், “மென் தோள், ஆய்கவின் மறைய, பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே” என்ற வரி ஆகியன இப்பாடலின் வரியோடு இணைத்து வாசிக்கத் தக்கன. 

“பாரம், பீரம் பைங்குருக் கத்தி' எனவரும் குறிஞ்சிப் பாட்டு அடியில் உள்ள 'பீரம்' என்பதற்கு நச்சினார்க்கினியர், 'பீர்க்கம்பூ' என்று உரை எழுதியிருக்கிறார். இது போலவே  'பீர் என்கிளவி அம்மொடு சிவனும்' எனக் கூறும் தொல்காப்பியம் எழுத்ததிகாரம்  366 ஆவது சூத்திரத்தில் வரும் . பீரம் என்பதற்கு நச்சினார்க்கினியர் 'பீர்க்கம்பூ' என்று உரை கூறினார். பீர்க்கங்கொடி தழைத்துப் புதர் போலப் படரும். இது கார்காலத்திற் பூக்கும் என்பதை “கார்தோன்ற காதலர்தேர் தோன்றா தாகவே,பீர்தோன்றி நீர்தோன்றும் கண்”  எனத் திணை மாலை நூற்றைம்பது குறிப்பிடும்:

காதலனைப் பிரிந்த தலைவிக்கு உண்டாகும் நிற வேறுபாடு, பசலை எனப்படும். பசப்பு என்பதும் இதுவே. 'பசலை' பாய்ந்த மகளின் நிறம் பீர்க்கம் பூவை ஒத்து மஞ்சள் நிறத் தேமலாகத் தோன்றும். இதனை நெற்றியில் காணலாம் என்பர். இதனை கீழ்கண்ட  அகநானூற்றுப்பாடல் 57 வழியாக அறியலாம் :  

“பசு நிலா விரிந்த பல்கதிர் மதியின்பெருகல் ஆய்கவின் ஒரீஇ சிறுபீர்வி ஏர் வண்ணம் கொண்டன்று. . . . . . . . . . . . சிறுநுதலே “

இவ்வாறாக பீர்க்கு மலர் தலைவியின் நெற்றியில் பசலை படிந்ததை அறிவிக்கும் என்பதால் தலைவி பீர்க்கு பூத்தமையும் கூறி தலைவன் வருவதாகத் தெரிவித்த பருவ வருகையை அவனிடம் தூது அனுப்பி உணர்த்த விரும்பினாள். பீர்க்கின் மலர்களை அவனிடம் காட்டுவாரைப் பெற்றால் நன்று என்று தலைவி சொல்வது அவன் நீண்டகாலமாகப் பிரிந்திருக்கிறான் என்பதையும் உணர்த்தியது. 

பீரத்து அலரைக் காட்டுதல் தலைவியின் பசலையையும் மழைப்பருவம் வந்ததையும் ஒருங்கே சுட்டுவதால் இது குறிப்பு நுட்பம் என்னும் அணியாகும். 

——

நன்றுமன் வாழி தோழி நம் படப்பை

நன்னுதல் என  முதல் அடியில் தலைவி சொல்வது நீ கண்டபோது நன்னுதலாயிருந்தாள் இப்போது பசலையுற்றாள் என்னும் கருத்துடையது. நன்றுமன் என்பதிலுள்ள ‘மன்’ என்ற சொல் மிகுதியை உணர்த்தியது. தொல்காப்பியம் இடையியல் சூத்திரம் 4 கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே என்று சொல்கிறது.  படப்பை என்பது தோட்டம்; இப்பாடலில் மனைக்கருகில் இருக்கிற தோட்டம்.  புதல்- என்பது செடிகள் அடர்ந்து வளர்ந்த செறிவு; இது இப்போது புதர் என வழங்குகிறது. பீர்க்கு கொடியாதலால் புதலிற் படர்ந்து தழைத்தது. மழைக்காலத்தில் நீர்நலத்தினால் புதலும் தழைத்து பசுமை பெற்றது. 

இப்பாடலில் பசலைபாய்தல், தூதுமுனிவின்மை ஆகிய மெய்ப்பாடுகள் வந்தன. 

இப்பாடலுக்கு, “ தோழி பீரத்தலர் சில கொண்டு அவர்த் துன்னச் சென்று இன்னாயினளென்று செப்புநர் பெறின் நன்றுமன்” என்று முடிபு எழுதும் உ.வே.சா. “ நான் பசலை நோயட நிற்றலைத் தலைவர் அறிந்திலர்; அறியின் வரைவர் போலும்” என்பது கருத்து என உரைக்கிறார். 

—-

No comments: