Saturday, August 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-102

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-102

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 102

திணை; நெய்தல்

——

உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா

திருப்பினெம் மளவைத் தன்றேவருத்தி

வான்றோய் வற்றே காமம்

சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ‘யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?’ என்றது. 

காதலரை நினைத்தால் எம் உள்ளம் வேவாநிற்கும்; நினையாமல் இருப்பது எமது ஆற்றலுக்கு உட்பட்டதன்று. காமநோயோ எம்மை வருந்தச் செய்து வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது;  எம்மால் மருவப்பட்டத் தலைவர் சால்புடையவர் அல்லர். 

———-

சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே

——

தலைவன் சான்றோனல்லன் என இப்பாடலில் தலைவி கூறுகிறாள். காதலில் சான்றோனாக இருப்பதற்கான குணநலன்களை 983 ஆவது திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது, “ அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு, ஐந்து சால்பு ஊன்றிய தூண்”.  


என் துயரை அறியாராயின்மையின் அன்பின்மையையும், தமது பிரிவு நீட்டித்தலால் எனக்கு உண்டாகிய வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் தூற்றுதலைக் கருதாது இன்னும் ஆண்டே உறைதலின் நாணமின்மையையும், இல்லறம் நிகழ்த்துவார் உரிய காலத்தே தலைவியருடன் இருந்து உலகியலை மறந்தமையால் ஒப்புரவின்மையையும், மெல்லியலாகிய என் துயர் நீங்க வாராமையின் கண்ணோட்டமின்மையும், தாம் கூறிய காலத்தே மீளாமையினால் வாய்மையின்மையையும் உடையரென்னும் கருத்தை உள்ளிட்டு சான்றோனல்லன் என்று கூறினாள் என உ.வே.சா. விளக்கமளிக்கிறார்.  யாம் – தன்மைப் பன்மை, ஏ – அசைநிலை. மரீஇயோர் என்பதற்கு  ச. வே. சுப்பிரமணியன் என்னைக் கூடி மகிழ்ந்த தலைவர் என்றும்   உ. வே. சா. எம்மால் மருவப்பட்ட தலைவர் என்றும் உரை எழுதுகின்றனர்.

நற்றிணை 365 ஆவது பாடலில் வரும்  ‘வான் தோய் மா மலைக் கிழவனை சான்றோய் அல்லை என்றனம் வரற்கே’ எனத் தலைவனை சான்றோனில்லை எனக் கூறும் வரி ஒன்று வருகிறது. 

——

உள்ளின் உள்ளம் வேம்

உள்ளாது இருப்பின்,  அளவைத்து அன்று

——

“உள்ளின் உள்ளம் வேம்

உள்ளாது இருப்பின்,  அளவைத்து அன்று”  என்ற வரிகள் மிகவும் அழகானவை. காதலில் உள்ளம் படும் பாட்டை, நினைத்தாலும் துன்பம், நினைக்காமல் இருப்பதற்கோ வாய்ப்பில்லை என,  எளிமையின் எழிலுடன் சொல்பவை. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23 ஆவது வாய்பாட்டிற்கு உரை எழுதுகிற பேராசிரியர் இதைக் காதல் கைம்மிகல் என்ற மெய்ப்பாடு என்று குறிக்கிறார்.  1207 ஆவது திருக்குறள் வரி ‘உள்ளினும் உள்ளம் சுடும்’ , நற்றிணை 184 ஆவது பாடல் வரி, ‘உள்ளின் உள்ளம் வேமே’, குறுந்தொகை 150 ஆவது பாடல் வரி “உள்ளின் உள்நோய் மல்கும்’ ஆகியன இப்பாடல் வரிகளோடு இணைத்து வாசிக்கத் தக்கன. 

——

காமம் வான்தோய்வற்று

—-

காமம் வானத்தைப் போல வளர்ந்துகொண்டே இருப்பது, உள்ளின் உள்ளம் வேம். உள்ளாதிருப்பின் எம் அளவைத் தன்று. 

—-

 

No comments: