Sunday, August 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-103

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-103

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: வாயிலான் தேவனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 103

திணை; நெய்தல்

——

கடும்புன  றொகுத்த நடுங்ஞ ரள்ளற் 

கவிரித  ழன்ன தூவிச் செவ்வாய்

இரை தேர் நாரைக் கெவ்வ மாகத்

தூ உந் துவலைத் துயர்கூர் வாடையும்,

வாரார் போல்வர்நங் காதலர்

வாழேன் போல்வ றோழி, யானே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மிக்க புனலால் தொகுக்கப்பட்ட, நடுங்குவதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றில் மீன் உணவைத் தேர்கின்ற, முள்ளு முருங்கை மலரின் இதழைப் போன்ற மெல்லிய இறகையும், செம்மையான அலகையும் உடைய நாரைக்குத் துன்பம் உண்டாகும்படி தூவுகின்ற நீர்த்துளிகளையுடைய, பிரிந்தார் துயர்கூர்தற்குக் காரணமாகிய வாடைக்காற்றையுடைய, கூதிர்காலத்திலும் பிரிந்து சென்ற தலைவர் வருவாரல்லர் நான் வாழ்வேனல்லன்.

—-

தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்,

வாரார் போல்வர்நங் காதலர்

———-

வாடையும்- உம்மை இழிவுச் சிறப்பு. போல்வர் , போல்வல்: உரையசைகள்.  ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும் என்று தொல்காப்பியம், இடையியல் 29 ஆவது வாய்பாடு கூறுவதை கவனிக்க. 

நம் காதலரென்றாள், தனக்கும் தோழிக்குமுள்ள ஒற்றுமை பற்றி.  

கூதிர் பருவம் வந்ததைக் கண்டு நிலையழிந்த தலைவி தலைவன் வாராதிருப்பதால் தான் வாழேன் என்று தோழியிடம் இப்பாடலில் கூறுகிறாள். 

——-

கடும்புன  றொகுத்த நடுங்ஞ ரள்ளற்

——

தன்பாற் சென்றோரை ஆழ்த்திவிடும் இயல்புடையதால் நடுங்கும் குளிர் என்றாள்.  இரைதேடும் முயற்சியை உடைய நாரைகளும் துன்புற்று அம்முயற்சி ஒழிவதற்குக் காரணமாக இருக்கும் இவ்வாடைக் காலத்தில் தலைவர் மட்டும் தம்முயற்சியை ஒழித்து திரும்பி வரவில்லை என்பது உட்குறிப்பு. குறுந்தொகை 150 ஆவது பாடலிலும், ‘இன்னாது எறிக்கும் வாடை’ என்று கூதிர்காலத்தைப் பற்றி ஒரு வரி வருவது கவனிக்கத்தக்கது. 

——

கவிரித  ழன்ன தூவிச் செவ்வாய்

இரை தேர் நாரைக் கெவ்வ மாகத்

——

முள்ளு முருங்கை இலைகளைப் போன்ற சிறகுகளையும் செம்மையான அலகையும் உடைய நாரை தன்னுடைய மீன் பிடிக்கும் முயற்சியைக்கூடக் கைவிடும் அளவுக்கு குளிர்ந்த நீர்த்திவலைகளை விசிறியடிக்கும் குளிர்காலம் என்பது வெகு அழகான காட்சி சித்தரிப்பு.  இதற்கு  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் சிறகாகிய போர்வையையுடைய நாரைக்கு ஏதந்தரும் வாடை என்றதனானே அணைக்குந் துணையாயினாரைப் பெறாத மகளிர்க்கு அது என்ன இன்னல் தான் செய்யாதாம் என்பதாம் என்று விளக்கமெழுதி இதை இறைச்சி என அடையாளப்படுத்துகிறார். 

தோழி, நம் காதலர் வாடைக்காலத்திலும் வாரார்; அதனால்  நான் வாழேன் என்று தலைவி கூறுகிறாள். 

———

No comments: