குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-96
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
இயற்றியவர்: வெண்பூதியார்
குறுந்தொகையில் பாடல் எண்; 97
திணை: நெய்தல்
————
யானே யீண்டையேனே யென்னலனே
ஆனா நோயோடு கான லஃதே
துறைவன் றம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
தோழி, நான் இவ்விடத்தில் தனியே உள்ளேன். எனது பெண்மை நலம் என்னிடமிருந்து நீங்கி அமையாத வருத்தத்தோடு கடற்கரைச் சோலையினடத்தது. தலைவன் தனது ஊரில் இருக்கிறான். எம்மிடையே மந்தணமாகிய நட்பைப்பற்றிய செய்தியானது, பலர் அறியும் பழி மொழியாகி பொதுவிடத்தின்கண் பரவியுள்ளது.
——-
துறைவன் தம் ஊரான்
—-
திருமணம் தள்ளிப்போடப்படுவதால் துயருற்ற தலைவி தோழிக்குக் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. யானென்று தலைவி சொல்வது தலைவனால் மணந்துகொள்ளப்பட்டு அவனுடன் இருத்தற்குரிய யான் என்றும், என் நலனென்றது என்னோடு உடனிருந்து சிறப்பு தருதற்குரியதென்றும் பொருள் கொள்ளத்தக்கன. நலன் கானலெஃதென்றது, நெய்தற் சோலையில் நடந்த இயற்கைப் புணர்ச்சியைச் சுட்டிக் காட்டியதாகும். துறைவன் என்றால் நெய்தல் நிலத் தலைவன். தலைவனும் அவன் சுற்றத்தாரும் வாழும் இடமாதலால் தன்னையும் அவர்களோடு உட்படுத்தி தம் ஊரான் என்றாள். இவ்வாறாகவே யான் என்பது தலைவி கூற்றில் தம் ஊரானை உள்ளடக்கியதாக இப்பாடலில் வளர்ச்சி பெறுகிறது.
—-
மறையல ராகி மன்றத் தஃதே
—-
கானலஃது, மன்றத்தஃது ஆகியவற்றில் ஆயுத எழுத்து விரிக்கும்வழி விரிகிறது. மறை என்பது வெளிப்படாதிருந்த தலைவன் தலைவி உறவைப் பற்றிய செய்தி. குறிஞ்சிப்பாட்டில் “ உட்கரந் துறையு முய்யா வரும்படர், செப்பல் வன்மையின்’ என்று வருவது போல கூறுவார்கள் என்பதால் மறையென்றாள். 1138 ஆவது திருக்குறளில் வரும் “ காமம், மறை இறந்து மன்று படும்” என்பதற்கு பரிமேலழகரின் உரை சொல்வது போல மன்று என்பது பொதுவிடமாகும்; இங்கு தலைவியின் தந்தையையும் தலைவியைச் சார்ந்தோரையும் குறித்தது. அகநானூறு 201 ஆவது பாடலில் வரும் “ அலரும் மன்று பட்டன்றே” என்ற வரி இதனோடு இணைத்து வாசிக்கத்தக்கது. ஏகாரங்கள் அசைநிலைகள்.
என் நலன் என் பாலும் நான் தலைவன் பாலும் இருக்கப்பெற்று இன்புற்று இருக்க வேண்டியிருக்க தான் அந்த நிலையைப் பெறவில்லையே எனத் தலைவி இரங்கினாள். தங்கள் உறவு வெளிப்பட்டு பழிச்சொல் பரவலாகும் நிலையிலும் தலைவன் வரவில்லையெனவும் தலைவி துயருறுகிறாள். மறைமன்றத்தஃது என்பதனால் இனி களவொழுக்கம் இயைபுடையதென்பது உட்குறிப்பாகும்.
——
No comments:
Post a Comment