Saturday, August 3, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-95

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-95

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 96

திணை: குறிஞ்சி

————

அருவி வேங்கைப் பெருமலை நாடற்

கியானெவன் செய்கோ வென்றி யானது

நகையென வுணரே னாயின்

என்னா குவைகொ னன்னுத னீயே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நல்ல நெற்றியை உடையவளே, அருவியின் அருகில் வளர்ந்த வேங்கை மரங்களையுடைய பெரிய மலையையுடைய நாட்டிற்குரிய தலைவன் அவன் ஆகையால் யான் யாது செய்யக்கூடும் எனக் கூறி அவன் இயல்பு அழித்தாய். நீ அங்ஙனம் கூறியதை நான் விளையாட்டுமொழி என்று எழுத்துக்கொண்டிராவிட்டால் நீ என்ன பாடுபட்டிருப்பாய்? மிகவும் துன்புற்றிருப்பாய் அல்லவா?

——-

இயற்பழித்தல்

——

தலைவன் தலைவியை விரைவில் மணம் முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தினால் தோழி தலைவனின் இயல்புகளை இகழ்ந்து கூறியதால் அதை மறுத்துத் தலைவனைப் பாராட்டி தலைவி உரைப்பதாக இப்பாடல் அமைந்திருக்கிறது. இவ்வகைக் கவிதை கூற்றுகளை தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 16 இக்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் தலைவன் வரைதலை விரும்பி இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது எனக் குறிப்பிடுகிறார். தோழியின் இயற்பழித்த பேச்சு தலைவிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அவள் தோழியின் பேச்சை தான் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதாகவும் அப்படி அவள் எடுத்துக்கொள்ளாமலிருந்தால் என்ன ஆயிருக்குமோ என்றும் மிரட்டுகிறாள். 

அப்படி அவள் தோழியிடம் சொல்வதற்காக நல்ல நெற்றியைக் கொண்டவளே என அன்பாக அழைத்து அதைச் சொல்கிறாள். நன்னுதல்- நல்ல நெற்றி- விளி,  யான் எவன் செய்கு –செய்கு தன்மை ஒருமை வினைமுற்று-  நான் என்ன செய்வேனோ- , ஓ – அசைநிலை, என்றி – முன்னிலை ஒருமை,  யான் அது நகையென உணரேன் ஆயின் – நான் அது நகையென உணராமல் இருந்தால்,   என் ஆகுவை – நீ என்ன ஆகியிருப்பாய், கொல் – அசைநிலை, நன்னுதல் – அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, ஏ – அசைநிலை.

——

இயற்பட மொழிதல்

——

தலைவனை, ‘அருவி வேங்கைப் பெருமலை நாடன்’ என்றழைப்பதன் மூலம் தலைவி அவன் இயல்பை மொழிகிறாள். அருவி தன்னைச் சார்ந்து வளர்ந்துள்ள வேங்கை மரங்களை குறைவின்றி காத்து ஊட்டமளித்து வளம் பெறச் செய்வது போலத் தலைவனும் தன்னைப் போற்றுவான் எனத் தலைவி இயற்பட மொழிந்தாள்.  அகநானூற்றுப் பாடல் 118 இல் வரும் “ கறங்கு வெள் அருவிப் பிறங்கு மலைக் கவாஅன் தேம் கமழ் இணர வேங்கை’ என்ற வரியும் இங்கே இணைத்து வாசிக்கத் தக்கது. 

நன்னுதல்,  நாடற்கு யான் எவன் செய்கோ என்றி: யான் அது நகையென உணரேனாயின் நீ என்னாகுவை? நீ தலைவனை இயற்பழித்தல் தகாது.

No comments: