Sunday, August 11, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-100

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-100

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் கூற்று

இயற்றியவர்: பரூஉ மோவாய்ப் பதுமனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 101

திணை: குறிஞ்சி

————

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்

அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும்

இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே

பூப்போ லுண்கட் பொன்போன் மேனி

மாண்வரி யல்குற் குறுமகள்

தோண்மாறு படூஉம் வைகலோ  டெமக்கே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

விரிந்த அலைகளையுடைய பெரியகடல், வளைந்த பூவுலக இன்பமும், பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும், ஆகிய இரணடும், தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும் பொன்னைப் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட வரிகளையும் உடைய அல்குலையும் உடைய  தலைவியனது தோளோடு தோள் மாறுபடத் தழுவும், நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்கு வைத்து ஆராய்ந்தாலும் எமக்கு அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.

———

தோண்மாறு படூஉம்

——

தலைவியோடு இன்பம் நுகர்ந்த தலைவன் அவளுடைய தோழியர் கேட்கும்படி தலைவியைப் புகழ்ந்து கூறியது, அல்லது பொருள் ஈட்டத் தூண்டி பிரிந்து செல்ல நினைக்கும் தன் நெஞ்சிடம் தலைவியின் பெருமையைக் கூறியதாக இப்பாடல் அமைந்திருக்கிறது .  


‘தோள் மாறுபடூஉம்’ என்பதற்கு   உ. வே. சா. ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும் ஒருவர் வலத்தோள் மற்றவர் இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல் என்றும்,  பொ. வே. சோமசுந்தரனார் மாறுபட்டுத் தழுவும் என்றும் உரை எழுதுகின்றனர். அப்படித் தலைவியை இறுகக் கட்டித் தழுவுவதற்கு இவ்வுலகத்து செல்வமனைத்தும் ஈடாகாது எனத் தலைவன் கூறுகிறான். இதில் எமக்கு என்பது தன்மைப் பன்மை; மாறுபடூஉம் – இன்னிசை அளபெடை.

———

மாண் வரி அல்குல்

——

பொருளினும் காமம் வலிது என்று சொல்கிற தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் 5 இற்கு உரை எழுதுகிற இளம்பூரணர் இப்பாடலை உதாரணம் காட்டுகிறார். விழித்தும் உறங்கியும் இவ்வுலகில் பெறும் இன்பம் ஆகிய இரண்டும்  தலைவியின் தோளில் துயிலும் இன்பத்திற்கு இணையாகா என்று தலைவன் கூறுகின்றான்.  விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமென்று அவன் சிறப்பித்தது நிலப்பரப்பின் பெருமையைக் கூறும் வாயிலாக அதன் உயர்வை உணர்த்தினான். தானம் தவம் முதலியன செய்தே அடைய வேண்டுதலின் அரிது பெறு சிறப்பிற் புத்தேணாடென்றான். தலைவியின் கண், மேனி, அல்குல், தோள் ஆகிய உறுப்புகளின் சிறப்புகளைக் கூறி புத்தேள் உலகில் இத்தகையை நுகர்ச்சிக்குரிய கருவிகள் இல்லை என்று குறித்தான். தாமரைப் பூப் போல மையுண்ட கண்கள், பொன்னைப் போன்ற நிறத்தினையும் வரிகளையும உடைய அல்குல் என்று சிறப்பித்துச் சொல்கிற தலைவன் தலைவின் தோளுக்கு எந்த அடைமொழியும் இன்றிக் கூறியதன் நோக்கம் தோளினால் பெறப்படும் இன்பத்திற்கு உவமை ஏதுவும் கூற இயலாது என்பதாலாகும். இறையனார் களவியல் அகப்பொருளுரை, இதைத் ‘தவத்தானும் தானத்தானும் அன்றிப் பெறலாகாச் சுவர்க்கம்’ என்று குறிக்கிறது.  


தொல்காப்பியம் களவியலுக்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் இவ்வகைத் தலைவன் கூற்றினை ‘நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சிக்கண் தலைவன் கூற்று’ எனப் பெயரிடுவது கவனிக்கத்தக்கது.

——

No comments: