குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-46
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவன் கேட்கும்படி நிலவிடம் சொன்னது
இயற்றியவர்: நெடுவெண்ணிலவினார்
குறுந்தொகையில் பாடல் எண்; 47
திணை: குறிஞ்சி
————-
கருங்கால் வேங்கை வீ யகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை,
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை, நெடு வெண்ணிலவே.
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
நெடு வெண்ணிலவே, கரிய அடையை உடைய வேங்கை மரத்தின், மலர்கள் உதிர்த்த குண்டுக்கல் பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும் காட்டினிடத்து இரவின் கண் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவாய் அல்லை.
——-
நெடு வெண்ணிலவே
———-
நெடு நேரம் எறிக்கும் நிலவை தோழி நெடு வெண்ணிலவே என இப்பாடலில் அழைக்கிறாள். நிலவு ஏதோ தனக்கு அமைந்த பொழுதின் மாத்திரம்தான் ஒளியூட்டுகிறது என்றாலும் அது விரைவில் மறைய வேண்டும் என்று விரும்பினாளென்பதால் அவளுக்கு அது நீண்ட காலம் ஒளிர்வதாய்த் தோன்றுகிறது.
வானத்தையும் பூமியையும், நித்தியத்தையும் அநித்தியத்தையும், ஒளியையும் நிழலையும் ஒன்றாக இணைத்து, மாறுபட்ட கூறுகளின் வண்ண சீலையை இக கவிதை விரிக்கிறது. நித்திய நிலைத்தன்மையின் சின்னமாக சந்திரன், இரவின் அங்கியில் தஞ்சம் அடையும் இரகசிய அன்புக்கு உவமையாகிறது. பொதுவாக காதலோடும் அழகோடும் தொடர்புபடுத்தபடும் சந்திரனின் பிரகாசம், காதலர்களுக்கு எந்த ஆறுதலையும் அளிக்காது, அவர்களின் காதல் தடைசெய்யப்பட்டிருப்பதையும் அது களவொழுக்கமாய் இருப்பதையும் சொல்கிறது. தலைவன் இரவில் வந்து பழகும் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்யும்படி தூண்ட எண்ணிய தோழி, நிலாவிற்கு உரைப்பாளாய் ‘நீ இவ்வாறு இரவில் வருவது களவிற்கு நல்லதில்லை’ எனக் கூறி இரவுக்குறி மறுக்கிறாள். நிலாவிற்கு உரைப்பாளாய்த் தோழி உரைத்தது கூறப்படும் செய்தியைக் கேட்டு அறிதற்குரியவர் முன்னே இருப்பவும் அவரை விளித்துக் கூறாமல் வேறு ஒருவரையேனும் பிறிதொரு பொருளையேனும் விளித்துக் கூறுவது முன்னிலைப் புறமொழி என அறியப்படும்.
——-
வேங்கை மலரும் புலியும்
——-
வேங்கை மரங்கள், அவற்றின் வலுவான தண்டுகள் அவற்றின் தங்கப் பூக்களுடன், காதலர்களின் இரகசிய சந்திப்பில் சாட்சிகளாகவும் பங்கேற்பாளர்களாகவும் மாறுகின்றன. பாறாங்கற்களில் சிதறிய பூக்கள் புலிக்குட்டிகளாகத் தோற்றமளிக்கின்றன. கருங்கால் வேங்கை என்பதிலுள்ள கருமை வன்மையைக் குறிக்கிறது. திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் வேங்கை மலர் வீழ்ந்த கற்கள் புலியின் குருளைப் போல அச்சந்தரும் என்றதனானே, வரைவு உடன்படுவாராகிய எமது தலைவர் வரைவுடன் படார் போல உனக்கு அச்சம் தருகிறார் எனத் தோழி சொல்வதால் இதை இறைச்சி எனக் குறிக்கிறார். குருளை என்பது புலியின் இளமைப் பெயர்.
———
எல்லி வருநர்
———-
களவிற்காக இரவில் வரக்கூடியன் தலைவன் என்பதால எல்லி வருநர் எனத் தோழி அழைக்கிறாள். எல்லி- என்றால் இரவு என பொருள்படும். இரவில் காட்டிடை வரும்போது வேங்கை மலர்கள் விழுந்த பாறை புலிக்குட்டிகளென தலைவனை அஞ்சச் செய்ததாலும் ஊரிலுள்ளோர் காண்டுகொள்வதற்கு ஏதுவாக நிலவு காய்வதாலும் இவை நல்லவையல்ல எனக் கூறும் முகமாக ‘நல்லை அல்லை’ என்று சொல்கிறாள்.
———
ஒற்றைக் கிளவி இரட்டை வழித்தாய் வந்த உவமை
——
இரும்புலிக் குருளை என்று அதனை துறுகல்லோடும் வேங்கை மரத்தின் கருமையான அடிப்பகுதிக்கும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டதால் இது ஒற்றைக் கிளவி இரட்டை வழித்தாய் வந்த உவமை என அறியப்படும். இதை தொல்காப்பியம் உவமயியல் சூத்திரம் 22 ஆல் அறியலாம்.
——
No comments:
Post a Comment