Saturday, June 22, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-64

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-64

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: கோவூர்கிழார்

குறுந்தொகையில் பாடல் எண்; 65

திணை: முல்லை

————

வன்பரற் றெள்ளல் பருகிய விரலைதன்

இன்புறு துணையொடு மறுவந் துகளத்

தான்வந் தன்றே தளிதரு தண்கார்

வாரா துறையுநர் வரனசைஇ

வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே

——-

தோழி, வலிய கூழாங்கற்களுக்கு இடையே உள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்தற்குரிய தன்னுடைய பெண் மானோடு, களிப்பினாற் சுழன்று துள்ளி விளையாடா நிற்கவும், இங்கே வாராமல் சென்ற இடத்தே தங்கிய தலைவர், மீண்டு வருதலை விரும்பி மிக வருந்தி தங்கும் பொருட்டு உயிர் வைத்திருக்கிறாயா என்று கேட்பதற்காக மழைத்துளியைத் தருகிற தண்ணிய கார்ப்பருவம் வந்தது.

——-

கார்பருவத்தின் மழைத்துளி வினவியது

——

மான் தன் துணையோடு களிப்புடன் விளையாடி மகிழ்ந்திருக்க கார் பருவம் வந்த பின்பும் தம் தலைவன் வந்து சேர்ந்திலன் எனும் குறிப்பு இப்பாடலில் இருக்கிறது.  அதனால் கார்பருவம் வந்த பின்னரும் தான் உயிரோடு இருப்பது பிழை என்று தலைவி நினைப்பவளாதாலால் அதை கார் பருவத்தின் மழைத்துளி அவளை இன்னும் உயிரோடு இருக்கிறாயா என வினவுவதாகச் சொல்கிறாள். இனிமேலும் அவன் வரவில்லையென்றால் அவள் உயிர்வாழ்தல் அருமை என்பதும் மறைமுகமாகச் சொல்லப்படுகிறது. திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தன் உரையில் இதை இறைச்சி என வகுக்கிறார்.  கார்பருவம் குறுந்தொகைப் பாடல்களில் வளமை, புத்தாக்கம், ஆகியவற்றின் குறியீடாக வருவது. அந்தப் பருவத்தில் மான்கள் களித்திருக்க, தலைவி தனித்திருக்க என்று எதிரெதிராக சொல்லப்படுவது இயற்கையின் பருவத்திலிருந்து  தலைவி அந்நியப்பட்டு இருப்பதன் துக்கமாகிறது. இது முல்லைத் திணைப் பாடல்களின் காணக்கூடிய பொது அம்சமாகும். மழைத்துளி தலைவியை வினவியதாகக்கூறுவது அழகிய கற்பனையும் கூட.

——-

கார்பருவத்தில் இரலையும் துணையும் இணைந்திருத்தல்

——-

கார்பருவத்தில் மான் (இரலை) தன் துணையோடு இணைந்திருத்தல் பற்றிப் பல  குறுந்தொகைப் பாடல்களில் குறிப்பிடப்படுகிறது.  அவை அனைத்தையும் இங்கே விரிவஞ்சி குறிப்பதைத் தவித்திருக்கிறேன். முல்லைப்பாட்டில் வரும் ‘திரிமருப் பிரலையொடு மடமானுகள எதிர் செல் வெண்மழை பொழியுந் திங்களின்” என்ற வரிகள்  கவனிக்கத்தக்கவை.  அது போலவே பெருங்கதையில் வரும் “ கார்வளம் பழுனிக் கவினிய கானத்து … சிறுபிணை தழீஇய திரிமருப் பிரலை”  என்ற வரியும்  முக்கியமானது. மிருகங்கள் எப்போதுமே இலக்கியத்தில் மனிதர்களை குறிப்புணர்த்தும் விதத்திலேயே வருகின்றனவன்றி மிருகங்களாக பட்டும் இருப்பதில்லை. இப்பாடல் தோழியை நோக்கி தலைவி கூற்றாக அடையாளப்படுத்தப்பட்டாலும் தனக்குள்ளாகவே அவள் பேசிக்கொள்வது போன்ற தொனியைக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.  

——-

வருந்தி நொந்துறைதல்

——

இயற்கையோடு ஒத்திசைந்த வாழ்வும் அந்ததந்த பருவத்திற்கேற்ற வாழ்வு முறையும் இருந்தது என்பதை இப்பாடல் புலப்படுத்துவதால் இதை முக்கியமான பாடலாகக் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வருந்தி நொந்து உறைய இருந்திரோ என்பதற்கு என்பதற்கு மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிர் வைத்துக் கொண்டிருந்தீரோ என கேட்பதாகப் பொருள்படும். ஓகாரம் வினாவைக் குறிக்கும். வரல் நசைஇ- என்பதில் நசைஇ – சொல்லிசை அளபெடை.

——

 

No comments: