குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-65
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவியிடம் கூறியது
இயற்றியவர்: கோவர்த்தனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 66
திணை: முல்லை
————
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிண ரூழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே
———
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
கற்கள் நிறைந்த பாலை நிலத்தின் கடினமான பாதையைக் கடந்து சென்ற தலைவர் மீண்டும் வருவேனென்று சுட்டிக்கூறிய கார்ப்பருவம் வாராத காலத்திலே பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை, கார் காலத்து மழையென்று கருதி நெருங்கும்படி சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துக்கள் புறப்பட்டுவிட்டன. ஆதலின் பரந்த அடியை உடைய கொன்றை மரங்கள் நிச்சயமாகப் பேதைமையை உடையன.
———
வம்ப மாரியைக் காரென மதித்தல்
——-
கார் காலமோ எனத் தலைவியை சந்தேகப்பட வைத்த மழையை வம்ப மாரியென்றும் அந்த மழையைக் கார்காலத்தின் சமிக்ஞை என்று நம்பி பூத்துவிட்ட கொன்றைமரங்களை மடக் கொன்றை என்றும் தோழி இப்பாடலில் அழைக்கிறாள். பொய்யுரைக்கும் சமிக்ஞைகளைப் பற்றிய அறிவுரையை தலைவி இப்பாடலில் கேட்கிறாள். உம்பர்ட்டோ ஈக்கோ ஒரு சமிக்ஞை மற்றொன்றுக்காக நிற்பதை குறியியல் கவனம்குவித்துப் படிப்பதால், குறியியல் என்ற படிப்பையே பொய்களைப் பற்றிய கோட்பாடு என்று அழைத்ததை நாம் இங்கே நினைவில் கொள்வது நல்லது. தலைவனை மடையன் என்னாது தோழி கொன்றை, முல்லை, மஞ்ஞை முதலியவற்றை மடவ என்று குறித்து மொழி கிளவியாற் படைத்துக் கூறி ஆற்றுவித்தல் கவிமரபேயாம் என்று இராகவையங்கார் இதற்கு விளக்கமளிக்கிறார்.
காலம் தப்பிப் பெய்யும் மழையை வம்ப மாரி என்றது நல்ல ரசிக்கத்தக்க பெயரிடல். தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரையில் வம்பு என்னும் உரிச்சொல் நிலையின்மைப் பொருள் குறித்து வந்தது என்ற விளக்கம் இருக்கிறது. அதே பொருளில் புறநானூற்றுப் பாடலொன்றில் ‘வம்பப்பெரும்பெயல்’ என்றும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குற்றாலப் பதிகத்தில் ‘வம்பார் குன்றாம்’ என்ற பிரயோகங்களும் வருகின்றன.
———
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
——
தடவு நிலை என்பதற்கு பொ. வே. சோமசுந்தரனார் நிற்றலால் அடிமரத்தை ஆகுபெயரால் ‘நிலை’ என்றாள் என்றும், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் பெரிய நிலையினையுடைய கொன்றைகள் வளைந்த நிலையாம் என்றும் விளக்கமளிக்கின்றனர். பேதமையை மரஞ்செடிகொடிகள் மேல் ஏற்றிச் சொல்வதை பல பாடல்களில் நாம் வாசிக்கிறோம். குறுந்தொகை 94 ஆவது பாடலில் வரும் ‘பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே’ என்ற வரிகளும் குறுந்தொகை 251 ஆவது பாடலில் வரும் ‘மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்தென அதன் எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன’ என்ற வரியும், நற்றிணை 99 ஆவது பாடலில் வரும் ‘பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே’ என்ற வரியும் சான்றுகளாகும். இப்பாடலில் வரும் ‘கொடி இணர் ஊழ்த்த’ என்ற வரி குறிப்பிடப்படும் கொன்றை சரக்கொன்றை என்பதை உணர்த்துகிறது.
——
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
——
பொய்யானாலும், கார் பருவத்தின் மழையும், கொன்றையின் மலர்தலுமாக தலைவியின் வசிப்பிடம் இருக்கிறது. தலைவன் சென்ற பாலை வழியோ இதற்கு நேர் எதிர்மாறாக கடினமான கற்களால் நிறைந்திருக்கிறது எனவே அவன் கூறியபடி உண்மையான கார்காலத்தில் வந்துவிடுவான் எனத் தோழி தலைவிக்கு ஆறுதல் சொல்கிறாள். கல்பிறங்கு என்பதற்கு பாறைகள் நிறைந்த என்றும் அத்தம் என்பதற்கு பாலை என்று பொருளாகும்; அதற்கு அழிதல், முடிவு, நீங்குதல் ஆகிய அர்த்தங்களும் இருக்கின்றன.
——-
No comments:
Post a Comment