Monday, June 10, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-52

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-52

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

இயற்றியவர்: கோப்பெருஞ்சோழன்

குறுந்தொகையில் பாடல் எண்; 53

திணை: மருதத்துள் குறிஞ்சி

————-

எம் அணங்கினவே மகிழ்ந, முன்றில்

நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்

வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும்

செந்நெல் வான் பொரி சிதறியன்ன,

எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,

நேர் இறை முன்கை பற்றிச்

சூரர மகளிரோடு உற்ற சூளே

————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

———

தலைவனே, முன்னிடத்திலுள்ள அரும்பு முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரந்து தங்கிய வெள்ளிய மணற்பரப்பு வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டு எடுக்கும் இடந்தொறும் செந்நெல்லினது வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணற்மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில் நுண்ணிய மூட்டுவாயையுடைய முன்கையைப் பிடித்து தெய்வ மகளிரைச் சுட்டிக் கூறிய சத்தியம் எம்மைத் துன்புறுத்தின.

——-

முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்

———

மருதத்துள் குறிஞ்சியாக திணை மயங்கிய பாடலாக வகைப்படுத்தப்படுகிற இப்பாடல் தோழி திருமணத்தைத் தள்ளிப்போடும் தலைவனிடம் சொல்வதாக அமைந்திருக்கிறது.  தலைவி காதலினால் பீடிக்கப்பட்டிருக்கிறாள் என்றறியாத தலைவியின் தாய் மகளின் நோயைக் குணப்படுத்த  முருகனுக்கான வெறியாட்டினை ஏற்பாடு செய்கிறாள்; ஆகையால் அவர்கள் வீட்டின் முற்றத்தில் வெறியாட்டின் நெற்பொரிகள் செந்நிற மலர்கள் போல சிதறிக்கிடக்கின்றன.  அம்மலர்கள் ஆற்றின் வெண் மணலில் சிதறிக்கிடக்கும் முதிர்ந்த புன்கின் மலர்களைப் போல இருக்கின்றன. 

நெற்பொரிகளை புன்கின் மலர்களுக்கு ஒப்பிடுவது பல சங்கக்கவிதைகளில் வாசிக்கக் கிடைக்கின்றன.  அகநானூறு 116 ஆவது பாடலில்  ‘பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி’ என்ற வரியாலும்  நற்றிணை 9 ஆம் பாடலில் வரும்  ‘பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி,’ என்ற வரியாலும், குறுந்தொகை 341 ஆம் பாடலில் வரும் ‘பொரிப் பூம் புன்கொடு’ என்ற வரியாலும்  ஐங்குறுநூறு 347 ஆம் பாடலில் வரும்  ‘பொரிப்பூம் புன்கின்’ என்ற உவமையாலும் , ஐங்குறுநூறு 368  ஆம் பாடலில் வரும்  ‘எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்’ என்ற வரியாலும் அறியலாம்.

இந்தப் பாடலில் நெற்பொரி புன்க மலர்களுக்கு ஒப்பிடப்படுவதை திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் இறைச்சி என்றழைக்கிறார். புன்கின் பூ செந்நெற்பொரியைச் சிதறினாற் போலத் தோன்றும் என்றதனானே நீ உற்ற பொய்ச்சூளுறவுகளும் மெய்ச்சூளுறவுகளேபோல எம்மை மயங்கச் செய்தன என்பது உள்கிடக்கை. 

——-

எம் அணங்கினவே மகிழ்ந

———-

தலைவன் பலமுறைத் தலைவியை மணந்துகொள்வதாகச் சூளுரைத்தான் என்பதால் ‘அணங்கின’ என பன்மையால் குறித்தாள் என உ.வே.,சா. விளக்கமளிக்கிறார்.  இரா. இராகவையங்கார்  நச்சினார்க்கினியர் தொல்காப்பியம், களவியல்  சூத்திரம்  பத்திற்கு எழுதிய சூத்திரத்தை பின்பற்றி ‘அணங்கின’ என்று பன்மையில் கூறியது  தலைவி என எடுத்துக்கொள்கிறார். அதைத்தொடர்ந்து  “அங்ஙனமாயின் சூள் உரைத்த நின்னையும் நீ கைப்பற்றிய என்னையும் அச் சூள் அணங்குதல் தகும்.  என் வாய்க் கேட்ட என் தோழியும் அணங்குதல் மருட்கைத்தாம் என்பது தெரிய எம் அணங்கின என்றாளாகக் கொள்க” என மேலும் விளக்கமளிக்கிறார்.

——

செந்நெல் வான் பொரி சிதறியன்ன

——

பார்ப்பதற்கும் பயிலுவதற்கும் இனிமை தருவதற்குரியதாகிய புன்க மலர் பரந்த மணற்பரப்பு அஞ்சுவதற்கேற்ற வெறியாட்டின் செந்நிறப் பொரியால் நிறைக்கப்பட்ட வீட்டு முற்றத்தைப் போன்ற தோற்றத்தைப் பெற்றதாகையால்  முன்பு விரைந்து மணம் செய்வாய் என தெளிவைத் தந்து இனிமை தந்த உன்னுடைய சூள் இப்போது வருத்தத்தைத் தருவாதாய் மாறிவிட்டது என்று தலைவி கூறுவதாக நாம் வாசிக்கலாம். 

இப்பாடலில் வேலன் எனக்குறிப்பிடப்படுபவன் வெறியாட்டெடுப்பவன்; முருகனை பூஜை செய்யும் தொழிலை உடையவன்.  திருமுருகாற்றுப்படையில் வரும் வேலன் என்ற சொல்லுக்கு  நச்சினார்க்கினியர்  பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றழைக்கப்படுகிறான் என விளக்கமளிக்கிறார். 

‘வெறி அயர் களந்தொறும்’ என்ற வரியில் வரும் ‘வெறியயர்தல்’ என்பதற்கு உ.வே.சா.  மறியறுத்து குரவையாடி முருகனை வழிபடுதல் எனப் பொருளுரைக்கிறார். ஆடி வெட்டி முருகனை வழிபடும் பழக்கம் சங்ககாலத்தில் இருந்ததாக இதனால் நாம் அறியலாம். வெண்பொரி செந்நிறமானது மறியின் ரத்தத்தினால் எனவும் நாம் அறியலாம். “செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி’ என வரும் திருமுருகாற்றுப்படையில்  வரும் 231 ஆவது வரியும் இதை உறுதிப்படுத்தலாம். மணல் படுகையில் இனிமையாக சிதறியிருந்த புன்க மலர்கள் வீட்டு முற்றத்தில் சிதறியிருக்கும் ஆட்டின் ரத்தம் தோய்ந்த நெற்பொரிகளாக இப்போது தோற்றமளிக்கின்றன. 

——

நேர் இறை முன்கை பற்றிச்சூரர மகளிரோடு உற்ற சூளே

——-

‘சூரர மகளிரோடு உற்ற சூளே’ என்பது பெண்தெய்வங்களின் பெயர்களின் மேல் ஆணையிட்டு உன்னை மணந்துகொள்வேன் எனச் சூளுரைத்ததாகும்; “நேர் இறை முன்கை’ என்பது அழகான, நேர்த்தியான முன் கையைப் பற்றிக் கொண்டு எனப் பொருள்படும்.  குறிஞ்சிப்பாட்டில் வரும்  (231-233) “ நேரிறை முன்கை பற்றி நுமர்தர, நாடறி நன்மண மயர்கஞ் சின்னாள், கலங்க லோம்புமின்’  என்ற வரிகளும் தலைவன் தலைவியின் முன் கை பற்றுதல் காதலின் அழகிய செய்கைகளுள் ஒன்று எனக் கூறுகிறது.  

——

No comments: