குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-59
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி கூற்று
இயற்றியவர்: பாணர்
குறுந்தொகையில் பாடல் எண்; 60
திணை: குறிஞ்சி
————
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே
——-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
குறிய அடியையுடைய கூதளஞ்செடி அசைந்த உயர்ந்த மலையிலுள்ள பெரிய தேனடையைக் கண்ட எழுந்து நிற்றற்கு இயலாமல் இருத்தலையுடைய முடவன் உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை குழித்து அம்மலையின் கீழே இருந்தபடியே அந்தத் தேனிறாலைப் பலமுறைச் சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப் போல தலைவர் தண்ணளி செய்யாராயினும் விரும்பாராயினும் அவரைப் பலமுறைப் பார்த்தலும் எனது நெஞ்சிற்கு இனிமை தருவது.
———
குறுந்தாட் கூதளி
———
கூதளி என்ற செடி கூதளம், கூதாளமெனவும் பல பாடல்களில் வருகிறது. தொல்காப்பியம் உயிர்மயங்கியல் 44 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் புணர்ச்சிக்கண் அம்முப்பெற்றும் குறுகியும் வரும் என்று எழுதுவதற்கு ஏற்ப கூதாளி என்பது இந்தப் பாடலில் கூதளி எனக் குறுகி வந்தது. குறுந்தாளை உடைய கூதளியை முடவன் எழுந்து நிற்க முடியாததற்கு உவமையாகச் சொல்ல வேண்டுமென்பதை பொ. வே. சோமசுந்தரனார் குறுந்தாளை முடவனுக்கேற்றுக என்று எழுதுகிறார். கூதாளியின் மலர் வெண்மை நிறமுடையது; அது கூதிர் காலத்தில் மலர்வது.
———
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
——-
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாற் போல என்ற பழமொழி பாணரின் இந்தப்பாடலிலிருந்து வந்திருக்கக்கூடும். தேனைக் கண்ட முடவன் அதை விரும்புவது சிறுபாணாற்றுப்படையில் ‘கொடுங்குன்றினீள்குடுமி மேற்றேன் விரும்பு முடவனைப் போல’ என்ற வரியிலும் வருகிறது. முடவனால் தேனை எடுப்பது இயலாது எனினும் அதைக் கண்ட உடனேயே மகிழுவுற்றது போல தலைவி தான் தலைவனைப் பார்த்தே இன்பமடைவதாக சொல்கிறாள். பார்வையே தன்னளவில் இன்பம் நல்குவதாகவும், இன்பத்தைப் பெருக்குவதாகவும் இருப்பதைப் பற்றி (Gaze as pleasure) நவீன குறியியல் பல முக்கியமான ஆய்வுகளை முன்வைத்துள்ளது. அதில் ஆணின் பார்வைக்கேற்ப (male gaze) பெண் தன் உருவத்தை, உடலை, ஆடையை வடிவமைத்துக்கொள்வது பற்றிய ஆய்வுகள் கவனிக்கத்தக்கவை. இதனால் பார்வை என்பது இன்பமளிப்பது மட்டுமாக இல்லாமல் அதிகாரமாகவும் மாறுவதை (gaze as power) நாம் அவதானிக்கலாம். இந்தப் பாடலில் தலைவி தலைவனைக் கண்டு இன்புறுவதாகக் கூறினாலும் அவளுடைய நிலைமை அதிகாரமற்றதாக இருப்பதை தேனடையை விரும்பிய முடவனின் உவமை சொல்கிறது. தலைவியின் அதிகாரமற்ற, ஏதுமற்ற நிலைமை அவன் தன்னைக் கண்டுக்கொள்ளாமல் போனாலும் தனக்கு இன்பமே என்று சொல்வதிலிருந்து வெளிப்படுகிறது. இதைத் திருக்குறள் 1283 "பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக், காணா தமையல கண்" என்று கூறும்.
காதலர் நல்கார் நயகார் ஆயினும் பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிது என தலைவி கூறுவதும் கவனிக்கத்தக்கது. காண்டலும் என்பதிலுள்ள உம்மை இழிவுச் சிறப்பு பெற்றது. பல்காற் காண்டலும் என்பதிற்கேற்ப பல்கால் என்பதை உவமைக்கும் கூட்டி வாசிக்கவேண்டும்.
——
உட்கைச் சிறுகுடை
—-
உள்ளங்கைக் குழிவை தலைவி இப்பாடலில் ‘உட்கைச் சிறுகுடை’ என்று சொல்லுதல் அழகான விவரிப்பு. அப்படிக் குழிந்த கையிலிருந்து தேனை நக்கிச் சாப்பிடுவதை தலைவி விவரிக்கிறாள். குடை என்பது இங்கே பனையோலையால் செய்யப்பட்டு நீர் எடுப்பதற்கும், பருகுவதற்கும், உணவுப்பொருள் வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டப் பனையோலை முடிப்பைக் குறிக்கும்.
No comments:
Post a Comment