Thursday, June 20, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-62

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-62

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

இயற்றியவர்: உகாய்க்குடிகிழார்

குறுந்தொகையில் பாடல் எண்; 63

திணை: பாலை

————

ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்

செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்

கம்மா வரிவையும் வருமோ

எம்மை யுய்த்தியோ வுரைதிசி னெஞ்சே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

நெஞ்சே, இரவலர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை அனுபவித்தலும் பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி பொருள் செய்தற்குரிய செயல்களை மிகவும் எண்ணாது நின்றாய். அச்செயல் செய்தார்குத் துணையாக அழகிய மாமைநிறத்தையுடைய தலைவியும் வருவாளோ? எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ, சொல்லுவாயாக.

——

ஈதலுந் துய்த்தலும்

——-

திருக்குறள் 85, “விருந்தோம்பி மிச்சின் மிசைவான்” என்று கூறுவதற்கு ஏற்ப ஈந்து எஞ்சியவற்றை துய்த்தலே இவ்வாழ்வின் கடப்பாடு ஆதலால் ஈதலும் என்பதை முதலில் சொல்லி அதன் பின்பு தலைவன் துய்த்தலும் என்பதை அடுத்துச் சொல்கிறான். பொருள் தேட வேண்டுமென்று துணிந்த நெஞ்சிடம் ‘பிரிவது அரிது’ என தன் நெஞ்சிடம் சொல்கின்ற தலைவன் ஈதலை முதலில் சொல்லியது கவனிக்கத் தக்கது. 

கம்மா வரிவையும் வருமோ

——-

நெஞ்சே நீ பொருள் ஈட்டுவதற்காக வேற்று நாட்டுக்குப் போக எண்ணுகிறாய்; அங்கே இத்லைவி வருவாளோ? அவள் வராவிட்டால் நான் மட்டும் போக வேண்டும்; இவளைப் பிரிந்து நான் செல்ல இயலாதே எனத் தலைவன் கவலைப்படுகிறான். இப்படி அழுங்கியது செல்லாமலே இருப்பதற்காக அல்ல என்று உரை எழுதும் உ.வே.சா. தன் மனதிலுள்ள பேரன்பைப் புலப்படுத்தி ஒருவகையாக இவளை சமாதானப்படுத்தி பின் பிரிவதே தலைவனின் கருத்து என்று விளக்கமளிக்கிறார். இதற்கு தொல்காப்பியம் கற்பியலில் வரும் 44 ஆவது சூத்திரம் “ செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்தவிர்ச்சி யாகும” என்பதையும் அவர் ஆதாரமாகச் சுட்டுகிறார். தலைவன் தலைவியைப் பிரிய முடியாதே என்று இப்பாடலில் வருந்துவது உண்மையில் பிரிவதற்கே என்பது ஆச்சரியமான மொழிபும் முரணும் ஆகும். ‘கம்மா வரிவையும் வருமோ’ - அழகிய மாமை நிறத்தையுடைய தலைவியும் வருவாளா என்று கேட்பதும் அவள் வரமாட்டாள் என்பதை சொல்வதற்குத்தான். 

இரா. இராகவையங்கார் மட்டும்  அவனுடன் வாராதொழியின் அவள் மாமை சிதையும் என்பது கருதி அம் மா அரிவை என்றான் என விளக்கமளித்திருக்கிறார். 

———

உரைத்திசின் நெஞ்சே

——-

‘கைம்மிக எண்ணுதி’- நீ அதிகமாக அதைப் பற்றிச் சிந்தித்து சொல்வாயாக என்று சொல்லும் தலைவன் இல்லோர்க்கு இல்லென என்று குறிப்பால் செய்வினை என்பது பொருள்செய்வினையைச் சுட்டியது கவனிக்கத்தக்கது. உரைத்திசின் என்பதைல் வரும் ‘சின்’ முன்னிலையோசை. 

———- 

இல்லோர்க்கு துய்த்தலும்  ஈதலும் இல்லை 

———

இல்லோர்க்கு ஈதல் இல்லை என்பதை “இருள்படு நெஞ்சத் திடுமை தீர்க்கும் அருணன் குடைய ராயினு மீதல், பொருளில் லோர்க் அஃதியையா தாகுதல் , யானு மறிவென் மன்னே” என்ற அகநானூற்றுப் பாடல் வரியாலும் அறியலாம். 


இல்லோர்க்குத் துய்த்தல் இல்லை என்று சிறுபாணார்றுப்படை வரும் ‘வறியாரிருமை அறியார்” என்ற வரி சொல்கிறது.


இல்லோர்க்கு ஈதலும் துய்த்தலும் இல்லை என்பதை நற்றிணையில் வரும் ‘இசையு மின்பமு மீதலு மூன்றும், அசைவுடனிருந்தோர்க் கரும்புணர் வின்மென” என்ற வரியாலும் அறியலாம்.

——



No comments: