Saturday, June 1, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-45

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-45

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

-—-

இயற்றியவர்: மாமலாடனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 46

திணை: மருதம்

————-

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ

முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து

எருவின் நுண் தாது குடைவன ஆடி,

இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்

 புன்கண் மாலையும் புலம்பும்

இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, ஆம்பல் மலரின் வாடலையொத்த குவிந்த சிறகுகளை உடைய, வீட்டில் தங்கும் குருவிகள், முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று பொதுவிடத்திலுள்ள எருவினது நுண்ணியபொடியை குடைந்து விளையாடி, வீட்டிறப்பிலுள்ள இடத்தே தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும். பிரிந்தார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும் புலம்பும் தனிமையும் தலைவன் பிரிந்து சென்ற தேசத்தில் இல்லையோ?

———-

புன்கண் மாலையை உணரும் ஏக்கத்தின் குரல்

————

இல்லாத தலைவனின்  "அவன் இப்போது வசிக்கும் நிலம்"  (இன்று கொல் தோழி, அவர் சென்ற நாட்டே ) என்ற கேள்வியுடன் கவிதை முடிகிறது.  ஒரு குறிப்பிட்ட இடப் பெயருக்குப் பதிலாக ‘நாட்டே’ என்றது புவியியல் சார்ந்தது அல்ல; அது  உணர்ச்சியின்  தூரத்தைக் குறிக்கிறது. தலைவியின் குரலில் ‘புன் கண் மாலை’யும் (ஒளி இழந்த மாலை) வலிக்கிற தனிமை யும் (பிள்ளையொடு வதியும்) என ஒரு சித்திரம் தீட்டப்படும்போது அது மனச்சோர்விலும் ஏக்கத்திலும் ஆழ்ந்ததாக இருக்கிறது.  மங்கலான ஆம்பல்  போன்ற கூம்பிய இறக்கைகள்  கொண்ட சிட்டுக்குருவிகளின் உருவம்  (ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர்)  பாதிக்கப்பட்ட அழகின் சித்திரமாகிறது.

———-

இயற்கையின் அனுதாபம்

————

தம் காதல் உணர்வை இயற்கை உயிர்களில் காண்பதும்,  அதை வெளிப்படுத்துவதும் இறைச்சி என்றழைக்கப்படுகிறது. இப்பாடலில் 

சிட்டுக்குருவிகள் அவ்வகை குறியீட்டு உருவங்களாகின்றன, அவற்றின் செயல்கள் தலைவியின் உணர்ச்சி நிலையை பிரதிபலிக்கின்றன. தலைவி  தலைவனின்  நினைவில் ஆறுதல் தேடுவதைப் போல,  சிட்டுக்குருவிகள் முற்றத்தில் உலரும் தானியங்களைத் தின்று, மனையில் தங்கியிருக்கும் செயல் (மனை உறை குரீஇ) பாதுகாப்பு,  ஆறுதல் ஆகியவற்றுக்கான தலைவியின் தேவையைச் சொல்கிறது.  மாட்டுச் சாணத் தூசியில் குருவிகள் விளையாடுவதோ (எருவின் நுண் தாது குடைவன ஆடி) ஒரு கடுமையான யதார்த்தத்தைச் சொல்கிறது. இருப்பினும் இந்த சூழலுக்கு மத்தியில் கூட, சிட்டுக்குருவிகள் தங்கள் குஞ்சுகளுடன் ஆறுதல் காண்கின்றன. அழகு, கடுமை, மென்மை, உயிர்வாழ்வு  ஆகியவை இணந்த  இயற்கைக் காட்சி  மனித மனத்தின் புறச் சித்திரமாகிறது. 

———

எருவின் நுண் தாது

———

அகநானூறு 165, நற்றிணை 271, கலித்தொகை 103, புறநானூறு 33, 215, 311,  பதிற்றுப்பத்து 13-17, மலைபடுகடாம் 531 என பல சங்க இலக்கியப்பாடல்களில் எருமை மாட்டு சாணத் தூசு குறிப்பிடப்படுவதை வாசிக்கும்போது சங்க கால மனைகள் அனைத்தும் மாட்டு சாணத் தூசினால் நிறைக்கப்பட்டிருந்தனவோ எனும் ஐயம் எழுகிறது.  தவிர எருமை, தலைவனின், வளமையின்  குறியீடாகப் பல பாடல்களில் வருகிறது. ஐங்குறு நூறு 181 ஆவது பாடலில் வரும்  ‘இருமருப்பு எருமை ஈன்றணிக்காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன்’ என்ற வரி இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். எருமையும் எனவே எருமைச்சாணத் தூசும் அமைதியான வலிமை, அன்புடைமை, இயல்பு நிலை கடந்த சக்தி, உயர் குணமுடமை, சாந்தி, இறப்பு, உயிர்ப்பலி ஆகியவற்றுக்குக் குறியீடுகளாகின்றன. எருவின் நுண் தாது என்பதை உ. வே. சா. நுண்ணிய உலர்ந்த சாணத்தின் பொடி எனவும், தமிழண்ணல் நுண்ணிய சாணப்பொடி எனவும் இரா. இராகவையங்கார் நுண்ணிய பூழி (புழுதி) எனவும் குறிக்கின்றனர்.  

——-

கூம்பிய  சிறகர்

——

‘கூம்பிய சிறகர் என்பதிலுள்ள சிறகர் என்பது சிறகு என்பதன் போலி. இன்று கொல் என்பதில் கொல் என்பது ஐயப்பட்டு வந்து இடைச்சொல். இப்பாடலை வாசிக்கும்போது மாலையும் இன்று கொல், புலம்பும் இன்று கொல் என தனித்தனியாகக் கூட்டவேண்டும்.

No comments: