குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-49
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தலைவனின் தூதுவனிடம் கூறியது
இயற்றியவர்: குன்றியனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 50
திணை: மருதம்
————-
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ் வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று அவர் ஊரே, இறை இறந்து
இலங்கு வளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே.
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
வெண்சிறு கடுகைப் போன்ற ஞாழல் மரத்தின் பூ, செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து தலைவனுடைய ஊரினிடத்தில் நீர்த்துறையை அழகு செய்தது; அவர் முன்பு அளாவளாவிய என் தோள் விளங்கும் வளையல்கள் கை மூட்டினைக் கடந்து நெகிழ்ந்து மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றது.
——-
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல், செவ் வீ மருதின் செம்மலொடு
———
ஐயவி அன்ன- சிறு வெண்மையான கடுகைப் போன்ற, சிறு வீ ஞாழல்- புலிநகக்கொன்றை மரத்தின் சிறிய மலர்களும், செவ்வீ மருதின் - மருத மரத்தின் சிவந்த பூக்களும் ஒன்றாகக் கலந்து கிடக்கும் எனத் தலைவனின் இடத்தை தலைவி குறிக்கிறாள். சிறுவீ என்றும் செவ்வீ என்பதும் பூக்களுக்கு ஏற்ற அடைகள்; அவை முன்னே வந்தன. தலைவன், ஊடியிருந்த தலைவியின் ஊடலை நீக்கத் தூது விட்டபொழுது, அத்தூதுவனிடம் , தலைவன் தகாத முறையில் ஒழுகினான் எனத் தலைவி பூக்களின் கலப்பை வைத்துச் சொல்கிறாள். ‘துறை அணிந்தன்று அவர் ஊரே’ என்றது தலைவன் பரத்தையரோடு அத்துறைக்கண் விளையாடினான் என்பது தனக்குத் தெரியும் என்பதை குறிப்பால் உணர்த்தினாள்.
——-
புலம்பு அணிந்தன்று
——
புலம்பு அணிந்தன்று என்பது குறிப்பு மொழி என உ.வே.சா.குறிப்பிடுகிறார். தானும் தலைவனும் சேர்ந்து வாழ்ந்தபோது தலைவனின் ஊரே தன்னுடைய ஊராகவும் இருந்ததாகச் சொல்லும் தலைவி அவன் பிரிந்து சென்றதை உணர்ந்த அவரூரே எனப் பிரித்து சொல்கிறாள். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அவர் ஊரிடத்துத் துறையை ஞாழல் மருதின் பூவொடு தாஅய் அழகு செய்தது; அவர் மணந்த தோள் மெலிந்து துயரைத் தங்கியது; இறைச்சி எனக் குறிப்பிடுகிறார். தாஅய்- இங்கே இசை நிறை அளபெடை.
——-
இலங்கு வளை ஞெகிழ
—-
பிரிவாற்றாமையினால் உடல் மெலிந்ததால் தனது வளையல்கள் கை மூட்டினைத் தாண்டி (இறை இறந்து) நெகிழ்வதாகக் கூறும் தலைவி தலைவன் சாரும் பொருள்கள் துறை பொலிவு பெற்றிருக்க அவன் அணைத்த தோள் மட்டும் பொலிவிழந்திருப்பதாகக் கூறுகிறாள்.
——
காதல், இழப்பு, ஏக்கம்- கைவளை நெகிழ்தல்
—-
காதலினால் ஏற்படும் இழப்பும் துயரமும் இப்பாடலிலும் மீண்டும் கைவளையலைகள் நழுவி கீழே விழும் அளவுக்கு ஏக்கத்தினால் உடல் மெலிந்ததை வைத்துச் சொல்லப்படுகின்றன. சங்கப் பாடல்கள் பலவற்றிலும் கைவளை நெகிழ்தல் துன்பத்தின் குறியீடாயிருக்கிறது. “இலங்கு வளை ஞெகிழச் சாஅய்ப்புலம்பு அணிந்தன்று” என்ற வரிகளில் தலைவியின் தனிமைக்கு கைவளை நெகிழ்தல் குறியீடாகிறது. நற்றிணை 263 ஆவது பாடலில் வரும் ‘எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ’ அதைத் துன்பத்திற்கும் , அதே பாடலில் ‘இறை வரை நில்லா வரையும்’ என்ற வரி பிரிவையும் குறிக்கிறது. நீலகேசியில் வரும் ‘காதின கனகப் பைந்தோடும் கைவெள் வளைகளும் கழல வேதனைப் பெரிதுடைத்து’ என்ற வரி கைவளை நெகிழ்தல் என்பது பெரும் வேதனைக்கு அறிகுறி என்கிறது.
No comments:
Post a Comment