குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-53
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தலைவி தோழியிடம் கூறியது
இயற்றியவர்: மீனெறி தூண்டிலார்
குறுந்தொகையில் பாடல் எண்; 54
திணை: குறிஞ்சி
————-
யானே யீண்டையேனே, என் நலனே
ஏனல் காவலர் கவண் ஓலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே.
——
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
———
தோழி, நான் இவ்விடத்திலுள்ளேன். என்னோடு முன்பு ஒன்றியிருந்த பெண்மை நலன் இப்போது இல்லை. தினைப்புனங் காப்பாற் விடும் கவண் ஒலிக்கு அஞ்சி தான் உண்ண விரும்பி வளைத்த மூங்கிலை காட்டு யானை கைவிட்டது; அங்ஙனம் கைவிடப்பட்ட பசிய மூங்கிலானது மீன் அகப்பட்ட காலத்தில் மீன் பிடிப்பவன் மேலே விரைவாக எடுக்கும்போது தூண்டில் நிமிர்தலைப் போல விரைந்து மேலே சென்றது. மேலே செல்லுதற்கு இடமாகிய காட்டையுடைய தலைவனோடு நாங்கள் பழகிய அவ்விடத்தே என் பெண்மை நலன் நீங்கியது.
——-
மீனெறி தூண்டிலார்
——-
யானையால் கைவிடப்பட்டு நிமிரும் மூங்கிலுக்கு மீனெறி தூண்டிலை உவமை கூறிய சிறப்பினால், இப்பாடலை இயற்றிய நல்லிசைச் சான்றோர் மீனெறி தூண்டிலார் என்னும் பெயர் பெற்றார். தண்டியலங்காரம் நான்காம் சூத்திரத்தின்படி இது தொழிலும் பண்பும் பற்றி வந்த உவமையாகக் கருதப்படும்.
——-
கான யானை கைவிடு பசுங்கழை
———-
உ. வே. சா. யானை வளைக்குங் காலத்தில் வளைந்து அது கைவிடத் தூண்டிலைப் போல மூங்கில் நிமிரும் நாடன் என்றது தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து நம்பால் மருவிப் பணிந்து ஒழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலங்கொண்ட தன் கொடுமை போன்ற ஒழுகுகின்றான் எனத் தலைவி தலைவனைப் பற்றிக் கூறுவதாக உரை எழுதுகிறார். திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன், ஏனலைக் காப்பவரது கவணின் ஒலியை அஞ்சி யானை நுகர்தற்கு வளைத்த கழையைக் கைவிட்டுச் செல்லுமாறு போல, ஊரார் தூற்றும் அலரை அஞ்சித் தன் எண்ணத்தின்படி தாழ்த்தி நுகர்ந்த என்னைக் கைவிட்டுச் சென்றான் என்று உரை எழுதி இதை உள்ளுரை என வகுக்கிறார்.
‘கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும்’ என்ற உவமை பிற சங்கப்பாடல்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. குறுந்தொகை 74 இல் ‘விட்ட குதிரை விசைப்பினன்ன விசும்பு தோய் பசுங்கழை’ என்பதும் புறநானூறு 302 இல் ‘ வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே’ என்பதும் ஐங்குறுநூறு 278 இல் ‘கழைக்கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும்’ என்பதும் கவனிக்கத் தக்கன.
——-
யானே யீண்டையேனே
——-
நான் இங்கே கிடக்கிறேனே , (யானே யீண்டையேனே,) எனத் தலைவி தோழியிடத்து புலம்புவது சொல்லப்படாத பெண்மை நலன் இழப்பின் கதையொன்றையும் உள்ளடக்கியிருக்கிறது. யானே, நலனே ஆகியவற்றிலுள்ள ஏகாரங்கள் தலைவியின் பிரிந்திருக்கும் நிலையைக் குறித்தன.
—-
புணருங்காற் புகழ் பூத்தது
——
‘கானக நாடனொடு ஆண்டு’ என்று தலைவி சொல்வது தலைவனோடு களவுக்கூட்டம் நடந்த இடத்தை. கானக நாடனொடு ஒழிந்தன்று என்றதால் அவன் மீண்டு வந்தால் என்பால் ஒன்றலாம் என்று தலைவி கூறுவதாக வாசிக்க வேண்டும். இப்படி வாசிப்பதற்கு உ.வே.சா. கலித்தொகைப் பாடலில் வரும் வரிகளை சான்றாதாரங்களாகக் காட்டுகிறார்:
“நீங்குங்கானிறஞ்சாய்ந்து புணருங்காற் புகழ்பூத்து
நாங்கொண்ட குறிப்பிவணலமென்னுந் தகையோன்’
உ.வே.சா. மேற்கோள் காட்டும் வரிகளிலுள்ள ‘புணருங்காற் புகழ்பூத்து’ என்ற பதச்சேர்க்கை கவனிக்கத்தக்கது.
——-
பசுங்கழையின் அனுபவ நெகிழ்ச்சி
——-
திடுக்கிட்ட யானையால் கைவிடப்பட்ட பச்சை மூங்கில் தண்டு, தலைவியின் அனுபவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க உருவகம். இது ஆரம்பத்தில் திடமாக நிமிர்ந்து இருக்கிறது ஆனால் கைவிடப்பட்டபோது , அது ஒரு ஆச்சரியமான நெகிழ்ச்சியுடன் மீண்டும் எழுகிறது. இது தலைவியின் சொந்த பின்னடைவையும் துன்பங்களை எதிர்கொள்ளும் தன்மையையும் எதிரொலிக்கிறது. மீனெறி தூண்டில் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படும் இந்த உணர்வை மேலும் வலியுறுத்துகிறது, ஆசையும் அதன் நிரைவேற்றமும் இவ்வாறாக ஒரு சுழற்சியில் இருக்கின்றன.
சொல்லப்படாத கதைகளால் இப்பாடல் நிரம்பியிருக்கிறது. வன நிலங்களைச் சேர்ந்த மனிதனுடனான தலைவியின் உறவு பெண்மை நலன் இழப்ப்பத் தவிர வேறெதையும் உணர்த்தாமல் தெளிவற்றதாக இருக்கிறது. அதனால் இது பல விளக்கங்களை அனுமதிக்கிறது. கவண் ஒலிக்கு யானையின் எதிர்வினை ஒரு பெரிய மோதலைக் குறிக்கிறது. இழப்பிற்கும் தனிமைப்படுதலுக்குமான குறிப்புகள் இருந்தபோதிலும், பாடல் இறுதியில் எதிர்ப்பின் குரலாகவே பரிணமிக்கிறது. தலைவி அவளுடைய மீறுதலை ஒப்புக்கொள்கிறாள் ஆனால் அவள் அதற்காக வருந்தவில்லை; சமூக எதிர்பார்ப்புகளுக்கு இணங்க மறுத்து, தன் தனிமையையும் தன் விருப்பத்தையும் தழுவிக் கொள்கிறாள். இப்பாடல் தனிமனித விருப்பத்தின் ஆற்றலையும், தன் சொந்த பாதையை உருவாக்கும் சுதந்திரத்தையும் கொண்டாடுகிறது. அழகான பாடல்.
——
No comments:
Post a Comment