Monday, June 3, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-47

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-47

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி கூற்று

இயற்றியவர்:  பூங்கணுத்திரையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 48

திணை:பாலை

————-

தாதின் செய்த தண் பனிப் பாவை

காலை வருந்தும், கையாறு ஓம்பு என

ஓரை ஆயம் கூறக் கேட்டும்,

இன்ன பண்பினினை பெரிது உழக்கும்

நந்னுதல் பசலை நீங்கவன்ன,  

 நசையாகு பண்பின் ஒரு சொல்

இசையாது கொல்லோ காதலர் தமக்கே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

பூந்தாது முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப்பாவையானது காலைப்பொழுதில் வருந்துதலாற் பிரிந்த செயலறுதலை ஒழிப்பாயாகவென்று விளையாட்டையுடைய மகளிர் திரள் சொல்லக்கேட்ட பின்பும் வருத்ததை மிக அடையும் நல்ல நெற்றியினையுடைய தலைவியின் பசலை நீங்கும்படி இவளுக்கு விருப்பாமான ஒரு சொல்லை தலைவன் சொல்ல மாட்டானோ?

————————

மென்மையான மகரந்த பொம்மை

—————————-

“தாதின் செய்த தண் பனிப் பாவை’ என்ற மென்மையான மகரந்த பொம்மையைக் குறிக்கும் சொற்சேர்க்கை இந்தப் பாடலிலும் அகநானூறு 398 ஆவது பாடலிலும் வருகிறது. மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது தோழிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனமகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளையாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை 'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என’ இந்தப்பாடல் குறிக்கிறது.

அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளையாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றினாள் என்று இந்தப் பாடல் குறிப்பிடுகிறது. 

——-

ஒரு சொல், ஒப்பற்ற சொல்

———

ஒரு சொல் இசையாது கொல்லோ என்ற சொற்கிடக்கை ‘பல சொல்லி நயப்புணர்த்திப் பாராட்டும் தன்மையினருக்கு இவ்வொரு சொல் அரிதன்றே ‘ என்னும் குறிப்பையும் புலப்படுத்தியது என்று எழுதும் உ.வே.சா ‘நசயாகும் பண்பின் ஒரு சொல் என்பதற்கு திருமணம் செய்வேனென்று சொல்வதை எப்பொழுதும் உடனுறையும் நிலையைத் தலைவி விரும்ப அக்கருத்தை வெளியிடும் சொல்லையே ஒரு சொல், ஒப்பற்ற சொல் என மேலும் விளக்கமளிக்கிறார். பேசப்படாத ஒரு சொல் உணர்ச்சி விடுதலைக்கான திறவுகோலாக இருக்கிறது.

————

 தோழி:  தலைவியின் மௌனமான துன்பத்திற்கு சாட்சி

——-

தலைவியின் மௌனமான தவிப்புக்கு தோழி, சாட்சியாக விளங்குகிறாள்.  அவளது அவதானிப்புகள், பச்சாதாபமும் அக்கறையும் கலந்ததாக தலைவியின் உணர்ச்சி அனுபவத்தில் பங்கேற்க வாசகர்களை அழைக்கின்றன. நுண்ணியமான மகரந்தப் பொம்மை வாடிவிடும் என்ற தோழியின் வார்த்தைகள் தலைவியின் பாதிப்பை எடுத்துச் சொல்கின்றன.  சொல்லப்படாத வார்த்தை, தலைவனின் மௌனம் ,  தலைவியின் பெரும் ஏக்கம் ஆகியவற்றைத் தோழி அழகாக சொல்லிவிடுகிறாள். ‘நன்னுதல் பசலை நீங்கவன்ன’ சொல்லக்கூடிய ஒற்றை சொல் என்னவென்பதை சொல்லாமல் விட்டதால் தோழியின் கூற்று மேலும் சிறப்படைகிறது. பொ. வே. சோமசுந்தரனார்  காலை வருந்தும் கையாறு என்றது, காலை வெயிலிலே கிடந்து முறுகும் என்றவாறு;  அது காலை வெயிலில் கிடந்து முறுகுதலைப் பிள்ளையுறும் துன்பமாகக் கருதிக் கையாறு என்றாள்;  கையாறு ஓம்பலாவது அப்பாவையை எடுத்து அது அழுமாறு போலக் கொண்டு அவ்வழுகை தணியப் பாராட்டுதல் என உரை வளம் சேர்த்து தோழி கூற்றை மேலும் சிறப்பிக்கிறார். தோழியர் அனைவரும் ஆயம் விளையாடி களித்திருக்க, தலைவி மட்டுமே தனித்து துயருற்றிருக்க, தோழி மட்டும் தலைவிமேல் அக்கறை கொள்ளுதல் சிறப்பு.

No comments: