Friday, June 7, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-50

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-50

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவியிடம் கூறியது

இயற்றியவர்: குன்றியனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 51

திணை: நெய்தல்

————-

கூன் முண் முண்டகக் கூர்ம் பனி மா மலர்

நூல் அறு முத்தின் காலொடு பாறித்

துறைதொறும் பரக்கும் தூ மணல் சேர்ப்பனை

யானும் காதலென், யாயும் நனி வெய்யள்,

எந்தையும் கொடீஇயர் வேண்டும்,  

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

——————-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

———

வளைவாகிய முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியினையுடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகளுள்ள இடங்கள் தோறும் பரவுதற்கு இடமாகிய தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை நானும் விரும்புதலையுடையேன். நம் தாயும் அவன்பால் மிக்க விருப்பத்தையுடையளாயிருக்கிறாள்; நம் தந்தையும் அவனுக்கே உன்னை மணஞ் செய்து கொடுக்க விரும்புவான். பழமொழியைச் சிலரறிய உரைக்கும் ஊரிலுள்ளோரும் அவனோடு உன்னைச் சேர்த்தே சொல்லுவர்.

———

கரிய முண்டக மலரும், நூலறு முத்தும்

——-

கடற்கரையில் மிக்க குளிர்ச்சியையுடைய கரிய முண்டக மலர்கள் காற்றால் சிதறிக்கிடப்பதை நூலறுந்த முத்துக்களுக்கு இப்பாடலில் தோழி தலைவியிடம் ஒப்பிட்டுச் சொல்கிறாள். இங்கெ கரிய மலர்கள் வெள்ளை முத்துக்களுக்கு ஒப்பிடப்படவில்லை மாறாக அவை சிதறிக்கிடப்பது ஒப்பிடப்படுகிறது. இது வினையுவமம் என அறியப்படும். முண்டகத்தின் மலர் கரிய நிறமுடையது என்று மதுரைக்காஞ்சியில் வரும் ‘மணிப்பூ முண்டகம்’ என்பதாலும் அறியலாம். முட்செடியாகிய முண்டகத்திலிருந்து கைகளால் பறிப்பதற்கல்லாமல் எளிதில் எடுத்துக்கொள்ளும்படி மணலில் பரந்து கிடப்பது போல தலைவனின் முயற்சிகள் எளிதாக பலனளிக்கும்படி தாய், தந்தை, ஊரார் அனைவரின் ஒப்புதலையும் தலைவியை மணமுடிக்கத் தலைவன் பெற்றிருக்கிறான். 

திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  முள் மிக்க தாழையின் குளிர்ந்த மலர், காற்றாற் சிதறுண்டு துறைதோறும் பரிக்கும் கடற்கரையினன் என்றதனானே இடையூற்றை மிகுதியாக உடைய களவகத்து இன்பமும் ஊராரால் தூற்றப்பட்டு மன்றத்திடத்துப் பரவுமாறு செய்திட்டான் என்பதாம் என்று விளக்கி இதை இறைச்சி எனக் குறிக்கிறார். 

——-

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே

——

அம்பல் என்பதற்கு சிலரறிந்து கூறும் மொழி என உ.வே.சா. விளக்கமளிக்கிறார். இதை சமகாலத்திய மொழியில் வதந்தி எனக்கூறலாம். ‘சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் செல்வது’ என இறையனார் அகப்பொருளுரை குறிக்கிறது. ஆங்காங்கே சில்ர் கூடி நின்று இன்னாள் இன்னானோடு நட்புடையாள் போலும் என்று பேசுவது அம்பலாகும். இப்படியாக பலரும் பேச தலைவன் திருமணத்தைத் தள்ளிப்போட காரணம் இல்லை என தோழி தலைவிக்கு உணர்த்துகிறாள். உ.வே,சா. களவொழுக்கத்தில் அழகாக இருக்கிறான் என்பதால் ஒருவனைக் கண்டு இன்புறுவதோ அல்லது காதலில் விழுவதோ மட்டும் போதாது தலைவியானவள் பிறர் வினவும் போது அறத்தோடு நின்று அவனைக் கூட வேண்டும்; அப்படித் தலைவி செய்வதற்கான விழைவு கொண்டிருக்கும்போது தாயும் தந்தையும் தானே சென்று மகள் கொடுப்பர் என்று எழுதுகிறார்.  இதனால்தான் தோழி ‘யானும் காதலென், யாயும் நனி வெய்யள், எந்தையும் கொடீஇயர் வேண்டும்’ என்று கூறுகிறாள். அதாவது தலைவி அறத்தோடு நிற்பதால் தோழியும், செவிலியும், தாயும், தந்தையும் அவளோடு நிற்கின்றனர். கொடீஇயர் என்பது சொல்லிசை அளபெடை.

——-

நூலறு முத்து

——

நூலறு முத்து என்ற உவமை பல சங்கப்பாடல்களில் வருகிறது. ‘நூல் அறுந்த முத்து வடம்’ – அகநானூறு 225 – ‘துளை முத்தின் செந்நிலத்து உதிர’, அகநானூறு 289 – ‘நெகிழ் நூல் முத்தின், நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 –  ‘கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ’-கலித்தொகை 82 – போன்றன கவனிக்கத்தக்கன.  முத்து -தூய்மை, எழில், சிறப்பு, ஒளி ஆகியவற்றின் குறியீடாகையால் நூலறு முத்து என்பது இவற்றின் இழப்பைக் குறிக்கும். பரிபாடலில் வரும் ‘முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்’ என்ற வரியில் முத்து எழிலைக் குறித்தது. பொருணறாற்றுப் படையில் வரும்’ பல உறு முத்தின் பழி தீர் வெண்பல்’ என்ற வரியில் முத்து சிறப்பினைக் குறித்தது. பெரியபுராண வரி ‘தூய முத்தின் சிவிகை சுடர்க்கொடை’ என்ற வரியில் முத்து தூய்மையையும், ‘நாயனார் உமக்களித்தருள் செய்த இந்நலங்கிளர் ஒளி முத்தின்’ என்ற வரியில் ஒளியையும் குறித்தது. 

——

மொழிமே என்ற இறுதிச் சொல், உம்மைகள் மற்றும் ‘நனி’

இப்பாடலில் உள்ள இறுதிச் சொல் .மொழிவார்கள் என்று சொல்லும் விதமாக ‘மொழிம்’ என்றிருக்க வேண்டும். முற்றின் ஈற்று மிசை உகரம் மெய்யொடுங் கெட்டிருக்கிறது. 

யானும், யாயும், எந்தையும், ஊரும் – ஆகியவற்றில்  உம்மைகள் எச்சப்பொருளைத் தருகின்றன. 

 ‘நனி வெய்யள்’ என்பதிலுள்ள ‘நனி’ மிகுதி செய்யும் பொருளைத் தருவது. இது தொல்காப்பியம் உரியியல் சூத்திரம் 1 ‘உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப’ என்பதால் அறியப்படும்.   

—-

No comments: