Wednesday, June 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-66 —-

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-66

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம் கூறியது

இயற்றியவர்: அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 67

திணை: பாலை

————

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்

புதுநா ணுழைப்பா நுதிமாண் வள்ளுகிர்ப்

பொலங்க வொருகா சேய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே

——-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, வளைந்த அலகைக்கொண்ட கிளி, தன் அலகில் வைத்திருந்த வேம்பின் ஒள்ளிய பழமானது, புதிய பொற்கம்பியை ஊடுசெலுத்தும் பொற்கொல்லனது முனை மாட்சிமைப்பட்ட, கூரிய கைந்நகத்தைக் கொண்ட, பொன்னாபாரணத்திற்குரிய ஒரு காசை ஒத்திருக்கும், நிலம் கரிந்துள்ள, கள்ளியையுடைய பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர் என்னை நினையாரோ? கிளியின் அலகுக்குக் கைவிரல் நகங்களும், வேப்பம்பழத்திற்கு பொற்காசும் உவமைகள்.

———

சிதறுண்ட கதையாடல்

——-

துண்டாடப்பட்ட நினைவாக, படிமங்களின் வரிசையாக இக்கவிதை விரிந்திருக்கிறது. ஒவ்வொரு வரியும் ஒரு ஒத்திசைவான கதையைச் சொல்வதற்கு பதிலாக தலைவியின்  உணர்ச்சி நிலைகளை துண்டு துண்டாகச் சொல்கிறது. வெயிலில் எரித்த நிலமும், முட்கள் நிறைந்த கள்ளிப்புதர்களும் தலைவன் கடந்து செல்லும் ஒரு கடுமையான, வறண்ட நிலப்பரப்பை உருவாக்குகின்றன.  வேம்பும் சுள்ளியும்  பாலை நிலக் கருப்பொருள்கள். அதற்கு நேரெதிராக 

கிளியின் அலகு வேம்பின் தங்க நிறப்  பழத்தை கவ்வியிருக்கிறது. இது நினைவு கவ்வப்பட்டிருப்பதன் படிமம். தலைவியின் துண்டு துண்டான உலகம் கிளியின் அலகு,  பொன் வேப்பம் பழம், பொற்கொல்லனின் கைவினை, கூர்மையான ஆணி போன்றவை உடலுக்கும் உடலுறவுக்கும் மறைமுக உவமைகளாகச் சொல்வதன் மூலம் காமத்தின் ஏக்கம் பீறிடுவதாக இக்கவிதை மாறுகிறது.   கிளியின் அலகு பழத்தைப் பிடிப்பது உடைமை ஆசை இரண்டையும் குறிக்கிறது, அதே நேரத்தில் பொற்கொல்லனின் நுட்பமான கைவினை அவளது உணர்வுகளின் சிக்கலான தன்மையையும் சுட்டுகிறது. 

———-

கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப வொண்பழம்

——

கிளியின் வளைந்த அலகு வைத்திருந்த வேப்பம்பழம் என்பது வெளிப்படையான பாலியல் குறிப்பு கொண்டது. இரா. இராகவையங்கார்  வேப்பம்பழம் காசேய்க்கும் இந்நிலையிலும் காடு இறந்தோர் உள்ளார் கொல் என்றாள்;   வேம்பின் ஒண்பூ உதிர்தற்கு முன்னர் வருவம் என்றவர் பழநிலையினும் நினையார் என்பது கருத்து என உரை எழுதுகிறார்.  வேம்பின் ஒண் பூ (பழமல்ல) பிர சங்க இலக்கியப் பாடல்களிலும் வாசிக்கக் கிடைக்கிறது. குறுந்தொகை 24 ஆவது பாடலில்  ‘வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ’ என்றொரு வரியும்  ஐங்குறுநூறு 350 ஆவது பாடலில் ‘ வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே’ என்றொரு வரியும் வருகின்றன. 


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  கிள்ளை உணவின் பொருட்டு வாயில் கொண்ட வேப்பம்பழம் பொலங்கலக்காசுப் போல தோன்றும் காடு என்றதனானே, ஈட்டலைக் குறித்துக் கைக்கொண்ட இன்னாத பிரியும் அவர்க்கு இனிமை தருவதாயிற்று; அன்பின்மையும் என்பதாம் என்றெழுதி இதை இறைச்சி என அடையாளப்படுத்துகிறார். 

—-

புதுநா ணுழைப்பா நுதிமாண் வள்ளுகிர்ப் பொலங்க வொருகா சேய்க்கும்

———

பொலம் கலம் ஒரு காசு ஏய்க்கும் என்பது பொன்னாபரணத்திற்குரிய ஒரு காசை ஒத்திருக்கும் எனப் பொருள்பெறும். ஒருவகைப் பொற்காசு அந்தக் காலத்தில் உருண்டை வடிவமாகவும் இருந்தது என்பதை, “காசி னன்ன போதீன் கொன்றை”, “புன்கா லுகாஅய்க் காசினை யன்ன நளிகனி” என்ற குறுந்தொகை 148 ஆவது பாடலில் வரும் வரிகளாலும்,  நற்றிணை 276 ஆவது பாடலில் வரும் வரி, “பொன்செய் காசினோண் பழந்தாஅம் குமிழ்” என்ற வரியாலும் அறியலாம் என உ.வே.சா. எழுதுகிறார். பொன்னென்பது செய்யுளில்  பொலமென்றாகியது. பொலங்கென்றது காசு மாலையை.  காசைப் பற்றுதற்குரிய தகுதி கொண்டவனாய் தலைவன் இருப்பதால் அவனை தலைவி ‘நுதிமாண் வள்ளுகிர்’ என்கிறாள். உள்ளார் கொல் என்பது விடை எதிர்பார்க்காத கேள்வி. நினைத்தால் வந்திருப்பார், வந்திருக்கலாம் என்பதைச் சொல்வது. 


தோழி, காடிறந்தோர் உள்ளோர் கொல் என்று கேட்கிறாள்; தலைவன் என்னை மறந்துவிட்டான் போலும் என்பது அதனால் பெறப்படுகிறது. 

——-



 

No comments: