Wednesday, June 12, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-54

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-54

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

இயற்றியவர்: நெய்தல் கார்க்கியர்

குறுந்தொகையில் பாடல் எண்; 55

திணை:  நெய்தல்

————

மாக் கழி மணிப் பூக் கூம்பத் தூத்திரைப்

பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்

கையற வந்த தைவரல் ஊதையொடு

இன்னா உறையுட்டு ஆகும்,

சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே

————

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தலைவன் வேலிப்புறத்திலே கேட்கும் அண்மையில் நின்ற காலத்து அவன் விரைந்து தலைவியை மண்ம புரிய வேண்டும் என்று அறிவுறுத்துவாளாய் இவ்வூர் சில நாலே வாழ்வதற்குரியதாகவும் இன்னாமையையுடைதாகவும் இருக்கிறது என்று கூறி திருமணம் செய்துகொள்ளாவிடில் தலைவி உயிர் நீப்பாளென்று தோழிப் புலப்படுத்தியது.

இந்த சிறிய நல்ல ஊரானது, கரிய கழியினிடத்திலேயுள்ள நீலமணி போன்ற பூக்கள் குவியும்படி, தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு மேகத்தைப் பொருத்தி பிரிந்தோர் செயலறும்படி வந்த தடவுதலையுடைய வாடைக் காற்றோடு, துன்பத்தைத் தரும் தங்குமிடத்தையுடையதாகின்ற சில நாட்களையுடையது.

———-

கூம்பிய மணிப்பூ

——

மணிப்பூ என்பது நீலமணி போன்ற முள்ளிச்செடியின் மலராகும் என்பதை சிறுபாணாற்றுப்படை 140 முதல் 153 அடிகள் வருணிக்கும் நீலமணி பூத்த நெய்தல் நில விவரிப்புகளால் அறியலாம்.  குறிப்பாக சிறுபாணாற்றுபபடையின் பின் வரும் வரிகள் அழகானவை:

“அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும்,

தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும்,

கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,

நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,

கானல் வெண்மணல் கடல் உலாய் நிமிர்தர, 

பாடல் சான்ற நெய்தல் நெய்த நெடுவழி

மணி நீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய

பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின்”

கூடவே மதுரைக்கஞ்சியில் வரும் 282 ஆவது வரி

“சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்மணி மருள் நெய்தல் உறழ காமர்” என்பதும் இப்பாடலில் சொல்லப்படுகிற மணிப்பூ ஒரு வகை முள்ளிச் செடியினது என் அறியலாம். 

மணிப்பூ கூம்பியிருப்பதாகத் தோழி சொல்வதால் பொழுது மாலைப்பொழுது என்றும் அறியலாம். 

———

தூத்திரைப் பொங்கு பிதிர்த் துவலை

——-

தூய அலையிடத்து பொங்கிய பிசிராகிய துளியோடு கூம்பிய மணிப்பூவும் ஊதைக்காற்றும் மேகமும் (மங்குல் தைஇ) சேர்ந்திருக்கும் நெய்தல் நிலக்காட்சி இப்பாடலில் தலைவியின் நிலைமைக்கு படிமமாகிறது. மணிப்பூ போல கூம்பியிருக்கும் அவள் ஊதைக்காற்றினால் நடுங்கியிருக்கிறாள், கடலலைகளின் நீர்த்துளி பிசிறுவது மேகத்தோடு இணைவது தலைவி உயிர் நீக்கவும் இவ்வுலகு நீங்கத் தயாராக இருப்பதற்கும் உவமையாகிறது. இதில் பிதிர்த் துவலை  என்பது பிதிராகிய துளி, இருபெயரொட்டாகும். மங்குல் தைஇ என்பதில் தைஇ  சொல்லிசை அளபெடை ஆகும். 

——

இன்னா உறையுட்டு ஆகும், சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே

——

‘இன்னா உறையுட்டு ஆகும்’ ‘இச் சிறு நல்லூரே’ எனத் தோழி ஊரின் மேல் வைத்து சொன்னாலும் தலைவி இன்னும் சின்னாளே ஈவ்வூரில் உயிர் வாழ்வாள் அச் சின்னாளும் இன்னாமை தரும் இயல்புடையன எனத் தோழி கூறுவதாக உ.வே.சா. உரையெழுதுகிறார். அது ஊரின் குறையல்ல என்பதால் அதைச் சிறு நல்லூர் என்கிறாள். 

——-

No comments: