Wednesday, June 19, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-61

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-61

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவன் தன் நெஞ்சிடம் கூறியது

இயற்றியவர்: சிறைக்குடி ஆந்தையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 62

திணை: குறிஞ்சி

————

கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை

நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ

ஐதுதொடை மாண்ட கோதை போல

நறிய நல்லோண் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

காந்தள் மலரையும் தோற்றிய முல்லை அரும்பிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப் பூக்களையும் மணக்கின்ற இதழ்களை உடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்தும்படி கலந்து அழகியதாகத் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட மாலையைப் போல நறுமணத்தையுடைய தலைவியின் மேனியானது தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது; முயங்குவதற்கும் இனியது.

——

ஐதுதொடை மாண்ட கோதை போல

——

தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியதாக இருக்கும் இப்பாடலில் அழகியதாகத் தொடுக்கப்பட்ட மாட்சிமைப்பட்ட மாலையைப் போல (ஐதுதொடை மாண்ட கோதை போல) எனத் தலைவி வருணிக்கப்படுகிறாள். இப்படி வருணிக்கப்படுவதை இரண்டு வகையாக வாசிக்கலாம்: துய்க்கப்பட்ட பெண்ணின் உடலாக,  குரலற்ற, ஆளுமைத் திறனற்ற, செயலூக்கதிற்கான எந்த ஆற்றலுமற்ற, ஆணின் கற்பனையில் தங்கிய  பெண்ணுடலாக இக்கவிதையில் இல்லாத தலைவியை தலைவன் வருணிப்பதாக வாசிப்பது ஒரு முறை. பெண்ணுடல் மலர்களின் ஒப்பீட்டினால் எப்படி காமப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்று வாசிப்பது இன்னொரு முறை. முதல் முறையானது வெளிப்படையாகத் தெரிவது, கவிதையை வாசித்தவுடனேயே சமகால வாசகனுக்குப் புலப்பட்டுவிடுவது. இரண்டாவது முறை காமப்படுத்துதலுக்கு எந்தவகை மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ள என்பதை கவனிப்பது.

இப்பாடலில் காந்தள் மலர்களும் முல்லை அரும்புகளும், குவளை மலர்களும் சேர்ந்து கட்டிய மாலையாகத் தலைவி தலைவன் மனதில் இருத்தப்படுகிறாள். 

—— 

காந்தள் மலர்கள்

——

செங்கோடல் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகிற காந்தள் மலர்களை முருகக்கடவுளுக்கு உரியதாக புறப்பொருள் வெண்பா மாலை சிறப்பித்துக் கூறுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம் 80 ஆவது சூத்திரம் காந்தள் மலரணிந்து வேலன் வெறியாடுவதைச் சொல்கிறது. நாலடியாரில் 283 ஆவது பாடல், கல்லாலே கிளிகளை ஓட்டுதற்கு இடமான காடுகள் சூழ்ந்த நாட்டை உடைய வேந்தனே, பெரிய கற்களையுடைய மலையின் மேல் காந்தள் மலர்கள் மலராதபோது, சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கே போகமாட்டா. அவ்வாறே பொருள் இல்லாதவர்க்கு உறவினர் இல்லை என்று சொல்கிறது. 


இவையனைத்தையும் கூட்டி பொருள் கொள்ளும்போது காந்தள் மலர் தலைவியின் உடல் உண்டாக்கும் பெரும் கவர்ச்சிக்கும், பேராவேசக் காதலுக்கும் இக்கவிதையில் குறியீடாவதாக வாசிக்கலாம்.

——

முல்லை அரும்புகள்

——-

சீவகசிந்தாமணியில் வரும் 686 ஆவது வரி  "தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட்டானே”,  முல்லை என்பதற்கு கற்பு என்ற பொருளை ஏற்றிருக்கிறது. புறப்பொருள் வெண்பா மாலையில்  9 ஆவது பாடலில் வரும் "முல்லைத்தார்ச் செம்பியன்”, முல்லை என்பதற்கு வெற்றி என்று பொருள் தருகிறது. சிலப்பதிகாரப் பதச்சேர்க்கை (17: பாடல் 3) ‘முல்லைக்குழல் பார்க்க’ என்பது முல்லைக்குப் பொருள் மென்மை என்கிறது. முல்லை இப்பாடலில் அரும்பாகையால் அது இன்னும் மென்மையாக இருக்கிறது. தவிர, திணைப்பகுப்பில் முல்லை காடும் காடு சார்ந்த இடமும் ஆகும்.  காந்தள் போல வெறியேறும் காதலைத் தூண்டுகிற தலைவி முல்லை போல மென்மையானவளாகவும், காட்டியில்புடையவளாகவும்.  கற்புடையவளாகவும், வெற்றியைத் தருபவளாகவும் இருக்கிறாள் என்ற அர்த்த அடுக்கு சேர்கிறது.

——

குவளை மலர்கள்

—-

"குவளை... கொடிச்சி கண்போன் மலர்தலும்"  என்ற ஐங்குறுநூற்றின் 299 ஆவது பாடல் வரியும்,   "விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை” என்ற  சீவகசிந்தாமணி வரியும், "நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் நுதலிய செய்குறியீட்டம்"  என்ற பரிபாடல் வரியும் குவளையை மகிழ்ச்சியின் மலர்தலின் குறியீடாக்குகின்றன. 


இப்பாடலில் வரும் முயங்குதலுறுத்தல் மெய்யுறு புணர்ச்சியாகும். தொல்காப்பியம் அகத்திணையியல் களவியல் சூத்திரம் 6 தலைவனின் இம்மாதிரியான கூற்றுகளை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது என வகைப்படுத்துகிறது. 

—-


No comments: