குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-51
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவியிடம் கூறியது
இயற்றியவர்: பனம்பாரனார்
குறுந்தொகையில் பாடல் எண்; 52
திணை: குறிஞ்சி
————-
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பிற்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை,
பரிந்தனென் அல்லனோ, இறை இறை யானே
———
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
———
நரந்தன்பூவின்மணம் கமழ்கின்ற தொகுதியாகிய கரிய கூந்தலையும், வரிசையுற்று விளங்கும் வெள்ளிய பல்லையுமுடைய மடந்தையே, தன் பால் பொருந்திய யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப்பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப்பெற்ற தனமையையுடையாகி நீ நம் கற்புக்கு ஏதம் வருமோவென்று அஞ்சி நடுங்குதலையறிந்து நின் வருத்தத்தைப் பொறாத யான் சிறிது சிறிதாக அப்பொழுதப்பொழுது இரங்கி வருந்தினேனல்லனோ?
———
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
சங்ககாலத்தில் மகளிரின் கூந்தல் ஐவகையாகப் பகுத்து அணியப்பட்டதால் தோழி தலைவின் கூந்தலை இந்தப் பாடலில் ‘குவையுருங் கூந்தல்’ என்கிறாள். அதற்கு குவிந்த கருங்கூந்தல் என்பது நேரடிப்பொருள். நரந்தம் என்பதை நாரத்தம் பூ என்பதாக நச்சினார்க்கினியர் குறிஞ்சிப்பாட்டுக்கு எழுதிய உரையிலிருந்து அறியலாம். குவையிருங்கூந்தலும் நிரத்திலங்கு வெண் பல்லும் உடைமை தலைவி பேதைப்பருவம் நீங்கி பெதும்பைப்பருவம் முதிர்ந்து மணம் செய்தற்குரிய நிலையினாளென்பதை அறிவிக்கும் என உ.வே.சா.எழுதுகிறார்.
நரந்தம் பூ இனிமை, நறுமணம், உயர்வு ஆகியவற்றைக் குறிப்பதாகும். பதிற்றுப்பத்தில் வரும் ‘ கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்திலங்கு அருவியோடு நரந்தம் கனவும்’ என்ற வரியில் நரந்தம் வேட்கையின் கனவு இனிமையாகவும் உயர்வாகவும் இருப்பதைச் சொல்கிறது.
——
நடுங்கல் கண்டே
—-
தலைவி நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு தோழி இரக்கம் கொள்கிறாள். காப்பு மிகுதியினாலும் தாயர் வெறியாட்டு எடுக்க விரும்பியதனாலும் தலைவி நடுங்கினாள் என உ.வே.சாவும், தன் பொருட்டாகச் செவிலி எடுக்கும் வெறியாட்டு பாடலால் கற்புக்கு ஏதேனும் விளையுமோ என்றும் இந்நோய் நம்மால் வந்ததன்று என்று தெய்வத்தால் வந்தது போலும் எனத் தலைவன் கருதின், நம் நிலை என்னாகும் எனக் கருதி மெய் நடுங்கினாள் என்று பொ. வே. சோமசுந்தரனாரும் உரை எழுதுகின்றனர். ‘சிலம்பில் சூர் ‘ என்றது மலைப்பக்கத்தில் வாழும் தெய்வங்களை அவர் வரையரமகளிரெனப்படுவர் என்றும் அது முருகனையும் குறிக்கும் என்றும் உ.வே.சா.மேலும் விளக்கமளிக்கிறார்.
——-
ஆர் களிறு மிதித்த நீர் திகழ்
——-
களிறு மிதித்த இடம் பள்ளமாதலும் அங்கு நீர் தேங்குதலும்போல தலைவி நிலைகுலைந்திருக்கிறாள் என்பதை ‘ஆர் களிறு மிதித்த நீர் திகழ்’ என்ற வரி சொல்கிறது. களிறு என்பது மறைவான ஆற்றலின் குறியீடாகும்; அந்த மறைவான ஆற்றல் இங்கே தலைவி தலைவன்பால் கொண்ட காதலாக இருக்கிறது. களிறு மறைவான ஆற்றலின் குறியீடு என்பதை புறநானுற்றுப் பாடல் 30 இல் வரும் ‘களிறு கவுளடுத்த எறிகல் போல, ஒளித்த துப்பினை ஆதலின்” என்ற வரிகளால் அறியலாம். மேலும் சீவக சிந்தாமணியில் வரும் காய்ந்தெறி கடுங்கல் தன்னைக் கவுள்கொண்ட களிறுபோல,
ஆய்ந்தறி உடையராகி அருளொடு வெகுளி மாற்றி, வேந்தாதாம்
விழைய எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்” என்ற வரிகளும் களிறு மறைவாற்றலின் குறியீடு என்பதை உறுதிப்படுத்துகின்றன.
——
இறை இறை யானே
——-
மடந்தையே நீ நடுங்குதல் கண்டு நான் பரிந்தேன் அல்லவா என்று வினவும் தோழி ‘இறை இறை யானே’ என்று கூறுவதை சிறிது சிறிதாக என உ.வே.சா. விளக்கமளிக்கிறார். இறை என்பதற்கு கடவுள் என்ற அர்த்தம் தவிர அச்சம், பற்றுக்கோடு, நடுவுநிலைமை, பாதுகாப்பு, தலைமை ஆகிய அர்த்தங்களும் உள்ளன. இறை இறை என இருமுறை தோழி கூறுவதால் அவள் பலமுறை தலைவியோடு பரிந்து வருந்தினாள் என்பதும் பெறப்படுகிறது. கூடவே தான் யானை மிதித்த பள்ளத்தில் தேங்கி நடுங்கும் நீர் போல நடுங்கும் தலைவிக்குப் பற்றுக்கோடாய், பாதுகாப்பாய் இருப்பதாகச் சொல்வதாகவும் நாம் வாசிக்கலாம்.
நற்றிணை 43 ஆவது பாடலில் வரும் ‘அஞ்சல் என்ற இறை கைவிட்டென’ என்ற வரியாலும் 541 ஆவது திருக்குறள் ‘இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறை காக்கும் முட்டாச் செயின்’ என்பதாலும் இறை என்ற சொல்லுக்கு பற்றுக்கோடு, பாதுகாப்பு ஆகிய அர்த்தங்கள் இருப்பது புலப்படும்.
காதலில் நடுங்கிக் கிடக்கும் தலைவிக்கு பாதுகாப்பாகவும் பற்றுக்கோடாயும் இருப்பேன் என்று சொல்லும் ஒரு தோழி வாய்த்திருப்பதுதான் என்னவொரு கொடுப்பினை !
No comments:
Post a Comment