Thursday, June 27, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-68

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-68

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

இயற்றியவர்: கடுந்தோட் கரவீரனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 69

திணை: குறிஞ்சி

————

கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக்

கைம்மை யுய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சார னாட  நடுநாள்

வாரல் வாழியோ வருந்துதும் யாமே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

கரிய கண்ணையும் தாவுதலையுமுடைய ஆண்குரங்கு சாவினை அடைந்ததாக, கணவன் இல்லாததால் கைம்மை வாழ்வைப் பொறாத, கணவனால் விரும்பப்பட்டப் பெண்குரங்கு, மரமேறுதல் முதலிய தம் தொழிலை இன்னும் கற்றுக்கொள்ளாத வலிய குட்டியை சுற்றத்தாரிடத்து ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக்கொள்ளும். சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே நள்ளிரவில் வருவதைத் தவிர்ப்பாயாக. அப்படி நீ வந்தால் உனக்கு தீங்கு உண்டாகுமென்று எண்ணி நாம் வருந்துவோம். நீ தீங்கின்றி வாழ்வாயாக.

——

கைம்மை யுய்யாக் காமர் மந்தி

——-

இருள் நிறைந்த இடங்களிலும் தாவும் வல்லமையுடைய குரங்கும் தப்பி விழுந்து இறந்துபோகும் நள்ளிரவுப்பொழுது எனத் தலைவன் வரும் பொழுதின் தீமையை தோழி முதலில் சொல்கிறாள். தலைவன் நாட்டுச் சாரலில் விலங்குகள் கூட கைம்மையை ஏற்க இயலாமல் தம் உயிர் துறப்பதை ‘கைம்மை யுய்யாக் காமர் மந்தி’ எனக் குறிக்கிறாள். அப்படி உயிர் துறக்கும் நிலையிலும் தன் குட்டி இன்னும் மரமேறுதலைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் அதை தன் சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டே உயிர்துறக்கும் என்பது அதன் தலைக்கற்பை உணர்த்துவதாக உ.வே.சா. எழுதுகிறார். தம் குட்டிகளுக்காக உயிர்வைத்து வாழும் பெண் விலங்குகளும் உண்டு என்று மேலும் எடுத்துச் சொல்லும் அவர் புறநானூற்றுப் பாடல் 23 இல் வரும் பின் வரும் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்:


“அறுமருப் பெழிற்கலை புகிப்பாற் பட்டெனச்

சிறுமதி தழீஇய தெறிநடை மடப்பினை

பூளை நீடிய வெருவரு பறத்தலை

வேளை வெண்பூக் கறிக்கும்

ஆளி லத்த மாகிய காடே”


பாய்ந்த மாத்திரத்தில் உயிர் போதற்குரிய உயரத்தையுடையது என்பதால் ‘ஓங்குவரை யடுக்கம்’ என்றாள். வல்ல குரங்கும் தப்பி வீழ்ந்து பெரும்பிறிதுற்றது என்றது எத்தனை பெரிய அபாயங்கள் இருக்கின்றன என்பதையும் சுட்டுகின்றன. தோழி சொல்லும் மந்தியின் கற்பு, அன்பு, கடமை ஆகியவை குறிப்புபொருள்கள் கொண்டவை. 

——

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

—-

தலைவனுக்கு இரவுக்குறி மறுக்கும் தோழி உன்னுடைய மலையகத்து வாழும் விலங்கான பெண்குரங்கு கூட பேரறிவோடு கல்லாத தன் குட்டியை முதலில் கிளை சேர்க்கும்போது இல்லறத்தை மறுத்து களவை நாடுவது உன் தகுதிக்கு தகாது என்று சொல்கிறாள். இப்படி செறிந்த நெறியை குரங்கை உவமையாகக் கொண்டு தலைவனுக்குத் தோழி சொல்வதால் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் இதை இறைச்சி என அடையாளப்படுத்துகிறார். ஐங்குறுநூறு 272 ஆவது பாடலில் வரும் “ கருவிரல் மந்திக் கல்லா வன்பறள்” என்ற வரி ஒப்புமைக்காகக் கவனிக்கத்தக்கது.  பறள் என்ற சொல் குட்டியைக் குறிக்கும். 

—-

வாரல் வாழியோ வருந்துதும் யாமே

——-

வாரல் என்பது அல்லீற்று எதிர்மறை வியங்கோள் வினைமுற்று. தலைவனுக்கு ஏதும் வாராமல் இருத்தலை விரும்புகிறவளாகத் தோழி வாழியோ என்கிறாள். வாழியோவில் ஓகாரமும் யாமேயில் ஏகாரமும் அசைநிலைகள்.  கருவிழிக் குரங்கும் அதன் துணையும் இழப்பு, துக்கம் ஆகியவற்றின் குறியீடுகளாக இருப்பதால் அதை சமன் செய்து நற்சகுனம் உண்டாக்க தோழி தலைவனை வாழ்த்துகிறாள் என்றும் வாசிக்கலாம். உனக்குத் தீங்கு நேர்ந்தால் நாங்கள் வருந்துவோம் என்று சொல்கிறாள்.

 

நாடனே நீ நள்ளிரவில் வராதே, உனக்குத் தீங்கு நேர்ந்தால் நாங்கள் வருந்துவோம் நீ வாழ்க என்று தோழி தலைவனை வாழ்த்துகிறாள். 


No comments: