குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-21
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
——
தோழி தலைவியிடம் கூறியது
—-
இயற்றியவர்: சேரமானெந்தை
குறுந்தொகையில் பாடல் எண்; 22
திணை: பாலை
————-
நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனி லஞ்சினை கமழும்
தேமூ ரொண் ணுத னின்னோடுஞ் செலவே
——-
உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:
——
சிலம்பு அணி கொண்ட மலைப்பக்கமானது தனக்கு அழகாகக்கொண்ட வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலரையுடைய வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில, நன் மணம் பரவிய விளக்கத்தையுடைய நெற்றியையுடையாய் துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி நீ இங்கே தனியாகத் தங்க நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றலுடையவர் யாவர்? தலைவன் செல்லுதல் நின்னோடே ஆகும்.
——-
குறியியல் ஒழுங்கின் சீர்குலைவு, அதன் சாத்தியமான மீள் ஒருங்கிணைப்பு
——-
இந்த சிறுகவிதை, அதன் சாதாரண படிமத்துடனும் உணர்ச்சிகளில் ஏற்படுகிற மாற்றங்களுடன் ஒரு குறியியல் ஒழுங்கின் சீர்குலைவையும் அதன் மீள் ஒருங்கிணைப்பிற்கான சாத்தியப்பாட்டையும் சொல்கிறது. ஜூலியா கிறிஸ்தவா கவிதையில் குறியியல் ஒழுங்கின் சீர்குலைவு மொழிக்கு முந்தைய சக்தியினால் ஏற்படுவதாகவும் அதே சமயம் குறியீடானது சமூக ஒழுங்கினையும் அதன் மொழியையும் குறிப்பதாகவும் விவரிப்பார். (பார்க்க: Kristeva, Julia. Revolution in Poetic Language. Trans. Margaret Waller. New York: Columbia University Press, 1984) . இந்தக் கவிதை இந்த இரண்டு மொழிவிசைகளுக்கான மோதலை உண்ர்ச்சியின் அக மோதலாக ஆராய்ந்து இறுதியில் அவை இரண்டும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதற்கான சாத்தியப்பாட்டினைச் சொல்கிறது.
இதில் குறியியல் ஒழுங்கின் சீர்குலைவைச் சொல்வது தலைவியின் நெற்றியைப் பற்றிய சித்தரிப்பு. கடைசி வரியில் ‘தேமூ ரொண் ணுதல்’ என்றது தலைவியின் வாசனையை விரும்பி வண்டுகள் மொய்க்கும் நெற்றியையுடைவள் என்று உ.வே.சா. பொருள் கொள்ளச் சொல்கிறார். ஆற்றாமை மிக்க தலைவி, ‘யாரோ பிரிகிற்பவரே’ என்று தோழி கூறிய மாத்திரத்தில் துயர் நீங்கித் தலையெடுத்து நிமிர்ந்து நோக்கினாளாக, நெற்றியின் விளக்கங்கண்ட தோழி, ‘தேமூரொண்ணுதல்’ என விளித்தாள்.
ஒரு பெண்ணின் அழகை, உனது நெற்றி வண்டுகள் மொய்ப்பதற்கு ஏற்றாற்போலுள்ளது என்றது சீர்குலைக்கும் அழகு என்றே அழைக்கப்படமுடியும். அதோடு துயரத்தினால் நீர் சொரியும் கண்ணை உடையாயாகி நீ ( நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய) என்பதும் சேரும்போது அங்கே முழுமையாக சீர்குலைந்த தலைவியின் சித்திரம் ஒன்று தீட்டப்படுகிறது.
———-
இழப்பு பற்றிய பயத்தினால் ஏற்பட்ட உருமாற்றம்
——-
நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய என்ற வரி இழப்பின் சோகத்தை தலைவியின் உடலில், கண்ணீரில் எழுதுகிறதென்றால், யாரோ பிரிகிற் பவரே என்ற வரி உன்னை யார் தான் பிரிய முடியுமென வினவுகிற அதே நேரத்தில் பிரிந்து விடுவாரோ என்ற பயத்தின் சோகத்தினை அவள் அகத்தில் எழுதுகிறது. வண்டுகள் மொய்க்க சாத்தியமுடையதாய் இருக்கும் நெற்றி என்பது இழப்பு பற்றிய பயத்தினால் ஏற்பட்ட உருமாற்றமென்பது தெளிவாகிறது.
——-
மீள் சேர்க்கைக்கான சாத்தியப்பாடு
——
குறியியல் சீர்குலைவை முதலில் சித்தரித்த கவிதை, தோழியின் கூற்றில் அதே சீர்குலைவை, ‘சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து’ என்ற வரியில் மீண்டும் குறியீட்டு ஒழுங்கிற்குள் (symbolic order) கொண்டு வந்து தலைவனும் தலைவியும் சேர்வதற்கான சாத்தியப்பாட்டினைச் சொல்கிறது. அதாவது எது சீர்குலைவின் சித்திரமாய், வண்டுகள் மொய்க்கக்கூடிய நெற்றியாய் சொல்லப்பட்டதோ அதுவே மலைச்சரிவினிலுள்ள கடம்ப மரக்கிளைகளின் பகுதியான பூக்களாய் சொல்லப்படுகிறது. வலஞ்சுரியென்றது, பூவிற்கு அடை; மராம் என்பது ஆகுபெயர் அது இளவேனிலில் மலருமென்பது. உ.வே.சா. “நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலிணர்கொய்தற்கு நின்ற” என்ற ஐங்குறுநூறு பாடலையும் மேற்கண்ட தலைவனும் தலைவியும் மீள் சேர்வதற்கான சாத்தியப்பாட்டை உணர்த்தும் விதமாக சான்றுரைக்கிறார்.
——-
யாரோ என்பது ஒருவருமிலரென்னும் பொருளில் வந்தது
———
ஒண்ணுதல், நீ ஒழியப் பிரிகிற்பவர் யார், தலைவன் செல்லுதல் நின்னோடே ஆகும், நின்னைப் பிரிந்து செல்லான் என்று தோழி தலைவிக்கு நல்லுரை கூறுதல் இக்கவிதையின் முடிபாகக் கருதலாம்
‘யாரோ பிரிகிற் பவரே’ என்ற வரியில் யாரோ என்பது ஒருவருமிலரென்னும் பொருளில் வந்தது என்பது கவனிக்கத்தக்கது.
பாலைத் திணைப்பாடல்களில் பிரிவாற்றாமையினால் மொழி முந்தைய உந்துதல் ( இதை ஜூலியா கிற்ஸ்தவா chora என்றழைப்பார்) ஒரு சீர்குலவை வர்ணிப்பதையும் அது ஒருங்கே மீட்டெடுக்கப்படுதலையும் வாசிக்கலாம்.
No comments:
Post a Comment